1200 x 80 DMirror

 
 

வெளிநாட்டு கையிருப்பு குறைவினால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கையில் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த மருந்து மதிப்பீடுகளின்படி மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான கடன் கடிதங்கள் வழங்கப்படாததன் காரணமாக சுமார் 80 வகையான மருந்துகளை கொள்வனவு செய்ய முடியவில்லை என சுகாதார நிபுணர்களின் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

"அடுத்த வருடத்திற்கான மருந்து மதிப்பீடுகள் வழக்கமாக முன்னைய வருடத்தின் ஜனவரியில் மேற்கொள்ளப்படும், மேலும் விலைமனு கோரல் செயல்முறை முடிந்ததும் ஓகஸ்ட் மாதத்தில் கொள்வனவு ஆரம்பிக்கும். தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு கடன் கடிதம் வழங்க சுமார் நான்கு மாதங்கள் செல்லும் என்பதால், ஜனவரி மாதத்திற்குள் மருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மருந்துகள் களஞ்சியப்படுத்தப்படும்.” 

எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டிற்கான கடன் கடிதங்கள் வழங்கப்படாததால் அத்தியாவசிய மருந்துகளை முன்பதிவு செய்யும் செயல்முறை ஏற்கனவே சுமார் நான்கு மாதங்கள் தாமதமாகியுள்ளதாக சுகாதார  நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ்  தெரிவித்துள்ளார்.

”கொவிட் தொற்றுநோய் காரணமாக எதிர்பாராது மருந்துகள் எஞ்சியிருக்காவிடின், நாட்டில் இப்போது கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டிருக்க வேண்டும். எதிர்காலத்தில் சரியான நிர்வாகம் இல்லையென்றால் இன்னும் ஒரு மாதத்தில் நாட்டில் கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.” என நிபுணர் எச்சரிக்கிறார்.

புற்றுநோய் மருந்துகள், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், சிறுவர் நோய்களுக்கு தேவையான மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சு, இராஜாங்க அமைச்சு சமர்ப்பித்த தரவுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விசாரித்தபோது, இந்த நெருக்கடி குறித்து சரியான புரிதல் உள்ளதா என்ற சந்தேகம் இருந்தாலும், துல்லியமான புள்ளிவிபரங்களை முன்வைப்பதில் அச்சம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ரவி குமுதேஷ் குறிப்பிடுகின்றார்.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண குறைந்தபட்சம் 40 மில்லியன் டொலர்கள் தேவைப்படும் எனவும், அரசு வழங்குவதாக ஒப்புக்கொண்ட 5 மில்லியன் டொலர்கள் ஒரு மருந்துக்குக்கூட போதாது எனவும் குறிப்பிட்டுள்ள ரவி குமுதேஷ், இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என இராஜாங்க அமைச்சர்  விரைவாக அறிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாகவும் வலியுறுத்துகிறார்.

“எவ்வாறாயினும், இலங்கை அபிவிருத்திச் சபையின் வரவிருக்கும் பிணைப்பத்திரங்களிலிருந்து பெறப்படும் வருமானத்தில் இந்தக் கடன் கடிதங்களை வழங்க முடியும் என நிதியமைச்சின் வாக்குறுதியை சுகாதார அமைச்சர் நம்பியிருப்பதும் பிரச்சினையின் உண்மையான தன்மையை கண்டறியவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம்.

எனவே, நான்கு மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய விடயத்தை மேலும் காலம் தாழ்த்தாது, இத்தருணத்தில் இப்பிரச்சினையின் உண்மைத் தன்மையை உணர்ந்து, மருந்துப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கு யதார்த்தமாகத் தலையீடு செய்வதே அரசாங்கத்தின் உடனடிப் பொறுப்பாகும் என சுகாதார நிபுணர்கள் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி