பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் சூரியபாலன் உள்ளிட்ட 08 தமிழ் கைதிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று (30) அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 12 ஆம் திகதி மாலை 06 மணிக்கு அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தமது தலைக்கு துப்பாக்கியை நீட்டி மேற்கொண்ட மரண அச்சுறுத்தல் காரணமாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அன்று மாலை 6.05 மணியளவில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டிலிருந்து தாம் உள்ளிட்ட கைதிகளை வௌியேற்றி முழந்தாழிட செய்து, தலை மீது துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியதாக பூபாலசிங்கம் சூரியபாலன் உள்ளிட்ட கைதிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இந்த கைதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதியினால் தமக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அச்சுறுத்தல் விடுத்தமையினால் தாம் உள்ளிட்ட கைதிகளின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தம்மை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை விடுவிக்குமாறும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் ஆஜராகவுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி