சுப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களில் இருந்து பொலித்தீன் பைகள் (sili sili bags) விநியோகிக்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக,
அவற்றுக்கு ஒரு வரி அல்லது மேலதிகக் கட்டணத்தை விதிக்குமாறு நிதி அமைச்சுக்கு பரிந்துரைத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல தெரிவித்தார்.
இதன்போது, சுப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து பொலித்தீன் பைகள் இலவசமாக வழங்கப்பட மாட்டாது என்றும், அவற்றுக்கு ஒரு விலை நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (20ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சுப்பர் மார்க்கெட்டுகள் போன்றவற்றில் இருந்து பெருமளவில் பொலித்தீன் பைகள் விநியோகிக்கப்படுவதால், சுற்றுச்சூழலில் அவை பெருமளவில் சேர்வதைக் குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
நிதி அமைச்சு, நுகர்வோர் விவகார அதிகார சபை உள்ளிட்ட பல அமைச்சுக்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடியதாகவும், சட்டங்கள் மற்றும் விதிகளை மாற்றி சட்ட ஏற்பாடுகளைச் செய்யும் வரை இந்த வரி அல்லது மேலதிகக் கட்டணத்தை விதிக்குமாறு பரிந்துரைத்ததாகவும் அவர் கூறினார்.
பொலித்தீன் பைகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பதற்கு உள்ள சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படா விட்டாலும், உலகின் ஏனைய நாடுகளில் இது நடைமுறையில் உள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.
தற்போது சுப்பர் மார்க்கெட்டுகளில் பொலித்தீன் பைகள் இலவசமாக வழங்கப்பட்டாலும், அவர்கள் துணிப் பை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பதைப் பாராட்டுவதாகவும், இதுபோன்ற செயற்பாடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.