இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பை
வெளிப்படுத்தி, அந்தத் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
கஞ்சா பயிரிடுவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் தீர்மானத்தை அறிவிக்கும்போது 'மருத்துவப் பயன்பாடு' என்ற சொல்லைப் பயன்படுத்துவது தவறான வழிநடத்தலாகும் என்றும், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற நாடுகளில் மிகவும் அரிதான நோய்களுக்காகவும், மட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளின் கீழேயுமே கஞ்சா மருந்துப் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் தொன் கணக்கில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுவதால், மருந்துத் தயாரிப்பிற்காகவும் மேலதிக ஆராய்ச்சிகளுக்காகவும் தேவையான கஞ்சாவை உள்நாட்டு நிலங்களில் பயிரிட வேண்டிய அவசியமில்லை என்றும், சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின்படி, மருத்துவப் பயன்பாடு மற்றும் மருந்து உற்பத்தியை நோக்கமாகக் கொண்டு பயிரிடப்படும் கஞ்சாவின் அளவு 2021ஆம் ஆண்டிலிருந்து குறைவடைந்துள்ளது என்றும் இலங்கை மருத்துவ சங்கம் கூறுகிறது.
கஞ்சா செய்கை அல்லது உற்பத்தி தொடர்பான பன்னாட்டு நிறுவனங்கள் கடந்த காலங்களில் பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர் நட்டத்தை அடைந்துள்ளதாகவும், அந்த நட்டத்தை ஈடுசெய்வதற்காக தமது சந்தையை விரிவுபடுத்த உலகளாவிய ரீதியில் ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், கஞ்சா செய்கையை இலாபகரமானதாகக் காட்டி அதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள இந்த பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாகவும் அந்த சங்கம் குறிப்பிடுகின்றது.
இலங்கைக்குள் 'பாதுகாப்பான' பயிர்ச்செய்கைகளை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்றும், தற்போதைய நிலையை விட அதிகமாக நாட்டில் கஞ்சா பரவுவதற்கு இந்த முன்மொழியப்பட்ட பயிர்ச்செய்கைகள் பங்களிக்கும் என்றும் இலங்கை மருத்துவ சங்கம் கூறுகிறது.
அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரந்த பெரேரா மற்றும் புகையிலை, மது மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் வைத்தியர் அனுலா விஜேசுந்தர ஆகியோரின் கையொப்பத்துடன் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதன் பிரதிகள் பிரதமர், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர், மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.