அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் உரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் சரத்துக்கள்
அரசியலமைப்பிற்கு முரணானவை எனக் கூறி, அந்த சரத்துக்களுக்கு சவால் விடுத்து உயர் நீதிமன்றத்தில் மேலும் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சபரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் மஹிந்த பத்திரண, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே, மற்றும் கடற்படையின் முன்னாள் பதவிநிலை பிரதானி எஸ்.எம். விஜேவிக்ரம ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
மனுதாரர்கள் குறிப்பிடுகையில், முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் 01 முதல் 04 வரையான சரத்துக்களால், அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுக் கோட்பாடு மீறப்படுவதாகக் கூறுகின்றனர்.
அத்துடன், குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சரத்துக்களால், நாட்டின் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இறையாண்மை மற்றும் மக்கள் இறைமை மீறப்படுவதாகவும் அந்த மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக நோக்கும்போது, முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் சரத்துக்களால் முழு அரசியலமைப்பின் அடிப்படை சாராம்சங்கள் மீறப்படுவதாகக் குறிப்பிட்ட மனுதாரர்கள், அதன் மூலம் அரசியலமைப்பின் 1, 3, 4 ஆம் உறுப்புரைகள் மற்றும் 12(1) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, குறித்த சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சரத்துக்களை நிறைவேற்றுவதாயின், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.
குறித்த சட்டமூலத்திற்கு சவால் விடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேரா மற்றும் மேலும் இருவரால் ஏற்கனவே மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.