கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக போராடும் மாணவர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களின் நியாயமற்ற ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு பல அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சுயாதீன அமைப்பு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொத்தலாவல சட்டத்தின் கீழ் இலவச கல்வியின் பேரழிவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தின்போது எந்த மோதலையும் உருவாக்க வேண்டிய அவசியமில்லை எனவும், அந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளால் நாட்டில் உள்ள புகழ்பெற்ற தொழிற்சங்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் செப்டம்பர் 17 வெள்ளிக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில், பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொத்தலாவல சட்டத்திற்கு எதிராக ஓகஸ்ட் 3 ஆம் திகதி, மாணவர் இயக்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நடத்திய போராட்டம் தொடர்பாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட ஐந்து மாணவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையத்தின் இணை இணைப்பாளர்களான சில்வெஸ்டர் ஜயக்கொடி மற்றும் ரஞ்சன் சேனாநாயக்க ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தில், தொழிற்சங்கத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களைத் இரகசிய பொலிஸார் தேடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படவில்லை, மாணவர்களின் பரீட்சைகள் மற்றும் சில கைதிகளின் உடல்நலக்குறைவு ஆகியவற்றைக் காரணம் காட்டி நியாயமான பிணை விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருந்தாலும், அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.”

தற்போது சிறையில் இருக்கும் பல சகோதர சகோதரிகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான வைத்திய வசதிகள் கூட வழங்கப்படாமல் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் தொழிற்சங்கத் தலைவர்கள் பிரதமருக்குத் தெரிவித்துள்ளனர்.

நியாயமற்ற அடக்குமுறை நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பிம்பத்தை கடுமையாக பாதிக்கும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

”அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்குமாறு நியாயமான கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும், அதனை வழங்காமல், தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் சதுர சமரசிங்க, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின், கொத்தலாவல சட்டத்திற்கு எதிரான செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் மஹிம் மெண்டிஸ் மற்றும் பிற தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்வதாக அச்சுறுத்துவதானது, நாட்டின் நீதி மற்றும் அமைதியை நிலைநாட்டுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த உங்களுக்கும், உங்கள் அரசாங்கத்தின் விம்பத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை, பொது மற்றும் தனியார் துறைகளில் பல தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், ஒரு சுயாதீன அமைப்பாக, பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.”  
Student activitist

கருத்து வெளியிடுதல், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் அதற்கென ஒன்றிணைதல் போன்ற விடயங்கள் தொடர்பில், அரசியல் யாப்பு ரீதியாகவும், சர்வதேச ரீதியிலும் அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட சமவாயங்களுக்கு எதிராகவும், செயற்படுவதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தொழிற்சங்கத் தலைவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலை நீடிக்குமானால், தொழிற்சங்க உறுப்பினர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் வேறு நடவடிக்கைகளில் இறங்க வேண்டியேற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் நீக்கி தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும், மாணவர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்வதைத் தடுக்கவும், இரண்டு தொழிற்சங்கத் தலைவர்களும்  பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடிதத்தின் நகல்கள் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,  சர்வதேச தொழிலாளர் அலுவலகத்தின் தலைவர், மனித உரிமைகள் அலுவலகத்தின் இலங்கை பணிப்பாளர், ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை வர்த்தக தொழில் மற்றும் பொது தொழிலாளர் சங்கம், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம், தொழில்சார் ஊடக தொழிற்சங்க கூட்டமைப்பு, ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு, தபால் மற்றும் தொலை தொடர்பு அலுவலர் சங்கம், இலங்கை தொழில்முறை ஊடகவியலாளர் சங்கம், ஐக்கிய பொது சேவையாளர் சங்கம், வணிக மற்றும் தொழில்துறை ஊழியர் சங்கம், காப்புறுதி  ஊழியர் சங்கம், அனைத்து தகவல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், ரயில்வே தரப்படுத்தப்பட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு, தொலைத்தொடர்பு பொறியியல் டிப்ளோமாதாரிகள் சங்கம், உணவு, பானம் மற்றும் புகையிலை தொழிலாளர் சங்கம், தேசிய சுதந்திர வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள், பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையத்துடன் இணைந்து செயற்படுகின்றன.  

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி