நண்பன் விவேக் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தையும் சேர்த்து தற்போது நிரப்ப வேண்டியுள்ளது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருக்கும் படத்திற்கான அறிமுக விழாவில்தான் வடிவேலு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இம்சை அரசனுக்கு வந்த சிக்கல்

கடந்த 2005ஆம் வருடம் சிம்புதேவன் இயக்கத்தில் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து வந்தது. ஆனால், நடிகர் வடிவேலுவிற்கும் தயாரிப்பு தரப்பிற்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படம் நிறுத்தப்பட்டதுடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர் புகார் கொடுத்தார்.

வடிவேலு நடிக்க தடை

இதனை தொடர்ந்து, நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிகர் வடிவேலு நடிக்காமல் இருந்தார். இடையில், அவர் புதிய இணையத்தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. ஆனால், இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் அப்போது வெளியாகவில்லை. இந்த நிலையில்தான், ஆகஸ்ட் மாத இறுதியில் (27.08.21) தயாரிப்பாள்ர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீதான புகாரில் சுமூக பேச்சுவார்த்தை எட்டப்பட்டுவிட்டதாகவும், அவர் படங்களில் நடிக்க தடை ஏதும் இல்லை எனவும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது.

 “இம்சை அரசன் படத்தை ஒத்துக் கொண்டது என் கெட்ட நேரம்”- நடிகர் வடிவேலு பேட்டி

இதனையடுத்து, நடிகர் வடிவேலு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வந்ததை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்று ட்ரெண்ட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அடுத்த படம் நடிக்க இருப்பதாக பிபிசி தமிழ் உடனான பேட்டியில் தெரிவித்திருந்த வடிவேலு, 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்திற்கும் தனக்கும் இனி சம்பந்தமில்லை எனவும் அந்த படத்தில் இருந்துதான் விலகிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மீண்டும் திரைப்படங்களில் வடிவேலு

இந்நிலையில் இன்று இயக்குநர் சுராஜூடன் இணையும் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய வடிவேலு படத்தில் நடிக்க முடியாத காலக்கட்டம் போன்று தனக்கு துன்பமயமான காலம் வேறு எதுவும் இல்லை என உணர்ச்சி வசப்பட்டவர், எல்லாரும் தன்னை 'வைகைப்புயல்' என்கின்றனர். ஆனால் இந்த கொடுமையான காலக்கட்டம் தனக்கு சூறாவளி போன்றது என்று உணர்ச்சி வசப்பட்டார்.

'நாய் சேகர்' தலைப்பு யாருக்கு?

'நாய் சேகர்' என்ற படத்தலைப்பின் உரிமம் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் சுராஜ், "ஒவ்வொரு கதாப்பாத்திரம் பெயர் சொன்னதுமே ஒவ்வொருவருடைய முகம் நினைவில் வரும். அதுபோல, 'நாய் சேகர்' என்றதும் வடிவேலு கதாப்பாத்திரம்தான் நினைவில் வரும். தலைப்பு நிச்சயமாக வடிவேலுவுக்கே. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது," என குறிப்பிட்டார்.

நடிகர் சதீஷ், பவித்ரா இணைந்து நடிக்கும் படம் ஒன்றை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு 'நாய் சேகர்' என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் இருந்து படக்குழு வாங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் வடிவேலு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வந்திருக்கிறார். லைகா தயாரிப்பில் சுராஜூடன் இணையும் படம் 'நாய் சேகர்' என ஊடகங்களுக்கு கொடுத்த பல பேட்டியிலும் முன்பு குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே சதீஷ் படத்திற்கு இந்த பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வடிவேலுவும் 'நாய் சேகர்' தன்னுடைய படத்தின் பெயராக சொல்லியிருப்பது 'யாருக்கு இந்த தலைப்பு கிடைக்கும்?' என்ற குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இதனை தெளிவுப்படுத்தும் விதமாகதான் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இயக்குனர் சுராஜ் இவ்வாறு பதிலளித்தார்.

'நாய் சேகர்' படத்தில் இரண்டு பாடல்கள் இருப்பதாகவும் அதில் ஒரு பாடலை தான் பாடியிருப்பதாகவும் குறிப்பிட்ட வடிவேலு இந்த படத்தில் காமெடி நாயகனாக நடித்திருப்பதாகவும் படத்தில் முன்னணி கதாநாயகி ஒருவருடன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தெரிவித்தார்.

வடிவேலு

வடிவேலு

மேலும் இது கதை நாயகனுக்கும் நாய்க்கும் இடையிலான கதை எனவும் , 'நாய் சேகர்' கதாப்பாத்திரத்திற்கும் இந்த கதைக்கும் தொடர்பு இல்லை எனவும் இயக்குநர் சுராஜ் குறிபிட்டார்.

அரசியலுக்கு வருவேனா?

இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், தற்போது மீண்டும் பெரிய திரைக்கு வந்திருப்பதால் வெப் சீரிஸ்ஸில் நடிக்கும் எண்ணம் இல்லை எனவும் குறிபிட்டார் வடிவேலு.

இதுமட்டுமல்லாமல் அரசியலில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு அந்த எண்ணம் தற்போது இல்லை என குறிப்பிட்டவர் வாய்ப்பு வந்தால் நடிகர் உதயநிதியுடன் இணைந்து நடிப்பேன் எனவும் தெரிவித்தார். மேலும், மீண்டும் தனது திரைப்பயணத்தை நடிகர் எம்.ஜி.ஆரின் பாடலான 'வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்' பாடலை போன்று அமையும் என்றார்.

நடிகர் விவேக் மறைவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலில் நான் அது பற்றிதான் பேசியிருக்க வேண்டும் என நெகிழ்ந்தவர் திரையுலகில் நண்பன் விவேக்கின் வெற்றிடத்தையும் நிரப்ப வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி