விசேட நிபுணர்களின் பரிந்துரைகளை ஏற்று, அரசாங்கம் நாட்டை முழுமையாக முடக்க வேண்டுமெனவும் கஷ்டப்படும் மக்கள் விடயத்தில் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது அத்தியாவசியமாகுமெனவும் முன்னிலை சோஷலிஸக் கட்சி கூறுகிறது.

நேற்று (13) நுகேகொடயில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்புச் செயலாளர் சேனாதீர குணதிலக மேற்கண்டவாறு கூறினார்.

சேனாதீர குணதிலக மேலும் கூறுகையில், அவசரமாகவும், உடனடியாகவும் நாட்டை முடக்க வேண்டுமென இந்நாட்டு சுகாதாரத் துறையின் விசேட நிபுணர்கள் கூறுகின்றனர். உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையும் இதுதான். ஆனால், முடக்குவதோடு தலைதூக்கும் ஏனைய பிரச்சினையானது நாளாந்த வருமானம் பெறும் மக்கள் வாழ்க்கையை நடாத்திச் செல்வதுதான். இது விடயத்தில் அரசாங்கம் விசேட தலையீடு செய்ய வேண்டுமெனக் கூறும் மு.சோ.கட்சியின் அமைப்புச் செயலாளர் முதலாவது கொவிட் பரவும் சந்தர்ப்பத்தில் போன்று 5000 ரூபாயை விட்டெறிந்து விட்டு கை கழுவிக்கொள்ள முடியாதெனவும் குறிப்பிட்டார்.

ஊடக சந்திப்பின்போது சேனாதீர குணதிலக தொடர்ந்து கூறுகையில்,

‘தற்போது, எமது உறவினர்கள், அண்டை வீட்டார் கொரோனா பெருந்தொற்றுக்கு இரையாவது தெரிகிறது. காலையில் வேலைக்குச் சென்ற நிறுவனத்தில் நோயாளர்கள் கண்டறியப்பட்டமையால் நிறுவனம் மூடப்பட்டதாக அறிவிக்கிறார்கள். பக்கத்துக் கிராமத்தில் அல்லது பக்கத்துக் கட்டிலில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இறப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். வைத்தியசாலைகளில் கட்டில்கள் போதாமையால் தாழ்வாரங்களில் நோயாளர்கள் நிறைந்துள்ளனர் என்ற வகையில் தொற்று நோயின் உண்மை நிலை எமது கண்களுக்குத் தெரிகிறது. அரசாங்கம் சொல்வதைப் போல, நாளாந்தம் கண்டறியப்படும் நோயாளிகளில் சராசரி 3000 வரை அதிகரித்துள்ளமையும், மரணங்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்கள் வரை சென்றிருப்பதும் காரணமாக கொரோனா பெருந்தொற்றின் வளர்ச்சி நிலை சம்பந்தமாக பொதுவான கருத்தொன்றை எடுக்க முடியும்.

உண்மையான புள்ளிவிவரங்களுக்குப் பதிலாக பொய் சொல்வதாக குற்றஞ்சாட்டிய போதிலும், அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிவரங்களுக்கேற்பவும் இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். எனவேதான் நாங்கள் சொல்கிறோம், பெருந்தொற்று பரம்பலினால் முதலாவதாக சந்திக்கும் நோய் தொற்றியவரின் 14 நாட்கள் மற்றும் இரண்டாவது நெருக்கமானவர்களின் 14 நாட்கள் என்ற வகையில் பாரத்தாலும் குறைந்தபட்சம் 4 வாரங்களாவது நாட்டை முடக்க வேண்டும்.

ஆனால், அதனை முழுமையான முடக்கம் என்ற வகையில் முன்னெடுத்து பின்னர் பயணக்கட்டுப்பாட்டை செயற்படுத்த முடியும். ஆனால், இது வரை, இரண்டு வருடங்களாக, தொற்றுநோய் காரணமாக வாழ்வாதாரங்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள, நாளாந்தம் தொழில் செய்யும் மக்கள் இந்த முடக்கத்தின்போது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால் அவர்கள் விடயத்தில் அரசாங்கம் கட்டாயமாக தலையீடு செய்ய வேண்டும். அது 5000 ரூபாயை மாத்திரம் கொடுத்துவிட்டு கை கழுவுவதாக இருக்கக் கூடாது.

முன்னிலை சோஷலிஸக் கட்சி என்ற வகையில் நாம், கொரோனா பெருந்தொற்று விடயத்தில் செயற்படுத்தப்பட வேண்டிய முன்மொழிவுகளை குறுகியகால திட்டமாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். விசேடமாக, சுகாதார சேவையின் கொள்ளளவையும் தாண்டிச் செல்லல் மற்றும் பணியாளர்களை ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலம் மிகவும் கஷ்டமான சேவையில் ஈடுபடுத்தல் காரணமாக ஏற்படக் கூடிய சரிவை தடுப்பதற்கு தன்னார்வ படையணியொன்றை அமைக்குமாறு நாம் முன்மொழிந்தோம்.

பொதுவாக, சுகாதார சேவைக்கு தன்னார்வத்துடன் ஒத்துழைப்பு வழங்கக் கூடியவர்களை சமூகத்திலிருந்து இணைத்துக் கொள்ள முடியும். கடந்த ஒருவருட காலத்தில் கூட கட்சி என்ற வகையில் நாம் தன்னார்வத்துடன் சில விடயங்களை செய்துள்ளோம். பல்வேறு சமூகக் குழுக்கள் அவ்வாறான தலையீடுகள் செய்துள்ளதும் எமக்குத் தெரியும். என்றாலும், சுகாதாரப் பொறிமுறையுடன் முறையாக இணைக்கப்பட்ட ஒரு தன்னார்வப் படையணியை நிறுவவும், தொற்று நோய்களை தடுக்கவும், பரவுவதைத் தடுக்கவும் பொறுப்புடன் பணியாற்றவும் நாங்கள் முன்மொழிகிறோம்.

அடுத்ததாக, தொற்றுநோயக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுகாதார செலவீனங்கள் எவ்வகையிலும் போதுமானதாக இல்லை என்பதாலும், அரசாங்கம் கடன் நெருக்கடியில் உள்ளதாலும் கொவிட் நிதியமொன்றை அமைத்து அதற்குத் தேவையான மானியங்களை பெற்றுக் கொள்ள நாம் முன்மொழிந்தோம்.

இந்த பெருந்தொற்று காலத்தில் பில்லியன் கணக்காக இலாபம் பெறும் நிறுவனங்கள் குறித்து செய்திகள் வருகின்றன. அந்த பாரிய இலாபங்களுக்குள் இந்நாட்டு உழைப்பாளிகளின் வேதனைகள் நிறைந்துள்ளன. எனவே, சமூகம் என்ற வகையில் முகம் கொடுக்கும் இந்த சவாலை எதிர்கொள்வதற்காக, அந்த நிறுவனங்களின் இலாபத்திலிருந்து ஒரு பகுதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென நாம் கூறுகிறோம். நாம் முன்மொழிந்தபடி, இலாபத்தில் 1 சதவீதத்தை எடுத்துக் கொண்டாலும் ஒரு பெரிய நிதியத்தை அமைக்க முடியும். இது சோஷலிஸ முன்மொழிவல்ல, இது உலகின் நவ தாராளவாத பொருளாதாரங்களில் இதுவரை செயற்பட்ட ஒன்றுதான்.

ஆர்ஜன்டீனா இதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இத்தகைய முறைகள் குறித்து ஏனைய நாடுகள் திட்டங்கள் தயாரிக்கின்றன. கடந்த வருடம் 57 பில்லியன் இலாபம் சம்பாதித்த LOLC போன்ற நிறுவனங்களிலிருந்து அந்த இலாபத்தில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்வதனால் தொற்றுநோய் காலத்தில் மக்களில் நலனோம்புகைக்கும், கொரோனா பெருந்தொற்றுக்குத் தேவைப்படும் சுகாதாரச் சேவைக்கான செலவீனங்களை பெற்றுக் கொள்ள முடியுமென நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி