இருப்பதால், எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூட நேரிடும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் கூறுகிறது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பராமரிக்கவும், ஊழியர்களின் சம்பளம் வழங்கவும் இந்தத் தொகை போதுமானதாக இல்லை என அந்தச் சங்கம் குறிப்பிடுகிறது.
விநியோகஸ்தர்கள் இந்த நிலையை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விளக்க முயன்றபோதும், அவர்கள் அதைப் புரிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை என இந்தச் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இந்தப் பிரச்சினை தொடர்பாகத் தலையிடுமாறு கோரி கடிதங்களை அனுப்பியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய பெற்றோலிய விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை செய்தாலும், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைந்த கமிஷன் தொகையை வழங்குவதாகவும், அதன் மூலம் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் செலவில் பெரும் இலாபம் ஈட்டுவதாகவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையே அவர்களின் ஒரே வருமான மார்க்கம் என்றும், அதிலிருந்து அனைத்து நிதிச் செலவுகள், நிர்வாகச் செலவுகள், ஊழியர் சம்பளம் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) போன்ற கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் கமிஷன் தொகை குறைக்கப்பட்டமையானது பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வியாபாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தற்போதைய கமிஷன் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்து சரிசெய்யுமாறு அல்லது போட்டியாளர்களான பெற்றோலிய விநியோக நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்குமாறும் அவர்கள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


