பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் வாகன பேட்டரிகள் மூலம் நாட்டிற்குக் கிடைக்கும் உலோகப் பெறுமதிக்கு பின்னால் பாரதூரமான சுற்றாடல் நெருக்கடியொன்று உருவாகி வருவதாகச் சுற்றாடல் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டில் பதிவு செய்யப்படாத, சட்டவிரோதமான முறையில் இயங்கும் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட மறுசுழற்சி மையங்கள் செயற்பட்டு வருவதாகத் தொழில் துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சிலோன் வேஸ்ட் மேனேஜ்மென்ட் (Ceylon Waste Management) நிறுவனத்தின் தலைவர் சுதேஷ் நந்தசிறி சுட்டிக்காட்டுவதாவது, எமது நாட்டில் ஆண்ட தோறும் அகற்றப்படும் பேட்டரிகளிலிருந்து சுமார் 5,000 மெட்ரிக் தொன் சல்பூரிக் அமிலம் (Sulfuric acid) மண்ணில் கலப்பதாகத் தெரிவிக்கிறார். புத்தளம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஒரு மில்லியன் மெட்ரிக் தொன்னிற்கும் அதிகமான ஈயக் கழிவுகள் (Lead slag) குவிந்துள்ளதாக அவர் மேலும் தகவல்களை வெளிப்படுத்துகிறார்.
உத்தியோகபூர்வ அறிக்கைகளில் இல்லாத அமிலக் தடயங்கள்
பேட்டரிகளை உருக்கும் இடங்களுக்குக் கொண்டு வருவதற்கு முன்னரே, சில விநியோகஸ்தர்கள் அதிலுள்ள அமிலங்களை வெறுமையாக்குவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. பேட்டரி திரவப் பரிசோதனைகளின் போது ஈயத்திற்கு மேலதிகமாகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கன உலோகங்களான காட்மியம் (Cadmium) மற்றும் ஆர்சனிக் (Arsenic) என்பனவும் இனங்காணப்பட்டுள்ளதாகத் துறைசார் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இத்தகைய ஆபத்தான இரசாயனத் திரவங்கள் எவ்வாறு அகற்றப்படுகின்றன மற்றும் அதற்குரிய சரியான சுற்றாடல் கண்காணிப்பு நிலவுகிறதா என்பது குறித்துச் சுற்றாடல் ஆர்வலர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். முறையான தரவு முறைமையொன்று இல்லாத பின்னணியில், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டாலும் சுற்றாடலில் எஞ்சியிருக்கும் நச்சுமிக்கக் கழிவுகள் சுற்றியுள்ள கிராமங்களுக்கு நீண்டகால அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
பணிமனையிலிருந்து வீட்டிற்கு எடுத்துவரப்படும் மரண அபாயம்
பாதுகாப்பற்ற மறுசுழற்சி மையங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களின் ஆடைகள், காலணிகள் மற்றும் தலைமுடிகள் மூலமாகவும் ஈயத் துகள்கள் வீடுகளை நோக்கிச் செல்லக்கூடும் என இந்தியாவின் 'டொக்சிக்ஸ் லிங்க்' (Toxics Link) நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் அல்கா துபே சுட்டிக்காட்டுகிறார்.
வீடுகளில் வாழும் சிறு குழந்தைகள் இதன் பாதிப்பிற்கு உள்ளாவதே இதிலுள்ள மிகப்பாரதூரமான சோகமாகும். சிறுவர்களின் மூளை வளர்ச்சியைப் பாதிப்பதற்கும் நடத்தை சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஈயப் பாதிப்பு காரணமாக அமைவதுடன், பெரியவர்களின் சிறுநீரகங்கள் மற்றும் இதய நாள அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஈயத்தின் எந்தவொரு அளவும் உடலுக்குப் பாதுகாப்பானது அல்ல என்பதை உலக சுகாதார அமைப்பு (WHO) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு அப்பால் சென்ற தீர்வு
சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் மாத்திரம் இந்த அபாயத்தைத் தணிக்க முடியாது என்பது அவதானிகளின் கருத்தாகும். சட்டக் கட்டமைப்பிற்குள் விநியோகிக்கப்படும் அனுமதிப்பத்திரங்கள் நிலப்பரப்பில் தரநிலைகளுக்கு அமைவாகச் செயற்படுத்தப்படுகின்றனவா என்பதைச் சுயாதீனப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
வாகன பேட்டரிகளை இறக்குமதி செய்வது முதல் இறுதி அகற்றல் வரையிலான செயன்முறையை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாகக் கண்காணிக்கும் (Extended Producer Responsibility) முறைமையொன்று நாட்டிற்கு அத்தியாவசியமானதாகும்.
பெறுமதிமிக்க உலோகங்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் பொருளாதாரத்திற்கு நன்மைகள் கிடைத்தபோதிலும், சாதாரண மக்களின் சுகாதாரத்தை அதற்குப் பலிகொடுக்க முடியாது என்பதால் ஒழுங்குபடுத்தும் நிறுவனங்கள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனச் சுற்றாடல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலதிகத் தகவல் மூல இணைப்புகள்:


