இந்த மண்சரிவானது கடந்த 27ஆம் திகதி இரவு மற்றும் நேற்று (28) அதிகாலை வேளையில் ஏற்பட்டதாக, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த நபர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நுவரெலியா - பூண்டுலோயாவுக்கு இடையிலான இரண்டு வீதிகளுக்கு மத்தியில் உள்ள ரம்படகம் கிராமத்தின் மத்திய பகுதியே இவ்வாறு மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது.
மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்கள் அங்கேயே இருக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தவோ அல்லது காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவோ முடியாமல் பிரதேசவாசிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அந்தப் பகுதியில் இன்னமும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசி சிக்னல்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன.
சுமார் 50 இற்கும் மேற்பட்டோர் இந்த மண்சரிவு காரணமாக அப்பகுதியில் சிக்கியுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட மக்களை மீட்க உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை அமைத்துத் தருமாறு, அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த இடத்திற்குச் செல்வது முற்றிலும் தடைபட்டுள்ளதாகவும், இதுவரை எந்தவொரு அனர்த்த நிவாரணக் குழுக்களும் குறித்த இடத்தை அடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்திடம் வினவியபோது, மண்சரிவு குறித்த தகவல் கிடைத்த போதிலும், அதுகுறித்த உறுதியான விடயங்களை இதுவரை கண்டறிய முடியவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்பாடல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இது குறித்த தகவல்களைப் பெறுவது சிரமமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


