கொரோனா வைரஸ் பரவல் கொஞ்சம் குறையத் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில், டோக்டே பயல் இந்தியாவின் மேற்கு கடற்கரை மாநிலங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரபிக் கடலில் உருவாகி இருக்கும் டோக்டே புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. நாளை காற்றின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டரை அடையலாம்.

இந்த புயலால் தமிழகத்திலுள்ள சில கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத் தீவுகளில் கன மழை பெய்துள்ளது.

டோக்டே புயலால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கண மழை பெய்யலாம், பலத்த காற்று வீசலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கோவா, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநில அரசின் தலைமைச் செயலாளர்கள், லட்சத் தீவின் ஆலோசகர்கள் மற்றும் நிர்வாகிகளோடு கேபினெட் செயலாளர் ராஜிவ் கெளபா டோக்டே புயல் தொடர்பாக கலந்தாலோசித்ததாக ஏஎன்ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

புயல் மாதிரிப் படம்

டோக்டே புயல் குஜராத்தில் உள்ள போர்பந்தர் மற்றும் நலியாவுக்கு இடையில் மே 18ஆம் தேதி பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் மணிக்கு சுமார் 175 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றுடன் கரையைக் கடக்கலாம் என இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளதாக, பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

குஜராத்தில் புயல் கரையைக் கடந்த உடனேயே எத்தனை விரைவாக மின்சார விநியோகத்தை சீர் செய்ய முடியுமோ அத்தனை விரைவாக மின் விநியோகத்தை சீர் செய்ய 2,000 மின்சார துறை ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஏ என் ஐ முகமையிடம் கூறியுள்ளார் குஜராத் மாநில மின்சாரத் துறை அமைச்சர் செளரப் படேல்.

டோக்டே புயலை முன்னிட்டு, தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினரின் ஐந்து அணிகளை புனேவில் இருந்து விமானம் மூலம் அஹமதாபாத்துக்கு அழைத்துச் செல்லவிருக்கிறார்கள்.

டோக்டே புயலை முன்னிட்டு, குஜராத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், கடலுக்குச் சென்றவர்கள் விரைவாக அருகிலிருக்கும் துறைமுகங்களுக்கு திரும்புமாறும் இந்திய கடற்கரை பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டோக்டே புயல் கோவாவைக் கடந்து தற்போது ரத்னகிரிக்கு அருகே இருப்பதாகவும், இந்த புயல் பேரழிவை உண்டாக்க வல்லது எனவும், தொடர்ந்து புயலை கண்காணித்து வருவதாகவும் மும்பை நகர மேயர் கிஷோர் பெட்னேகர் கூறியுள்ளார். அதோடு உயிர்காக்கும் வீரர்கள் கடற்கரையில் களமிறக்கப்பட்டு இருப்பதாகவும், பெரிய பெரிய மரங்களின் கிளைகள் கழித்துவிடப்பட்டு இருப்பதாகவும், காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் மும்பை மேயர் தெரிவித்துள்ளார்.

புயல் மாதிரிப் படம்

டோக்டே புயல் கடுமையாக இருப்பதால், மும்பை நகரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாளையும் நிறுத்தி வைக்கப்படலாம். நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) முதல் மீண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மும்பை நகர மேயர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தின் தக்‌ஷின கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, குடகு, ஷிவமொக்கா, சிக்மகளூரு, ஹசன் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 73 கிராமங்கள், 17 தாலுக்காக்கள் புயலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தி இந்து பத்திரிகையிடம் கூறியுள்ளனர்.

இதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது உடுப்பி மாவட்டம் தான். இதுவரை உத்தர கன்னடா, உடுப்பி, சிக்மகளூரு, சிவமொக்கா என மாவட்டத்துக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கடலோர கிராமமான விளையாதுரையில் கடலின் சீற்றம் மிகுந்த அலைகளால் வீடுகள் சேதமடைந்திருப்பதை மேலே காணொளியில் காணலாம்.

இப்புயலால் கேரள மாநிலத்தில் சுமார் 2,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தி இந்து பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோதிக்கு எதிரான போஸ்டர்; 25 பேர் கைது, ராகுல் ட்வீட்

இஸ்ரேல்-காசா மோதல்: ஹமாஸ் தலைவரை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல்

அம்மாநிலத்தில் சனிக்கிழமை மட்டும் டோக்டே புயலால் 145.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கேரள மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலிருந்து பாதுகாப்பு முகாமுக்கு மக்களை அழைத்தும் செல்லும் பணியை இந்திய கடற்படையினர் மேற்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.

இந்த புயலை முன்னிட்டு இந்திய ரயில்வே சில ரயில்களின் சேவையை நிறுத்தியுள்ளது.

இந்திய விமானப் படை 16 போக்குவரத்து விமானத்தையும், 18 ஹெலிகாப்டரையும் எந்த சூழலையும் சமாளிக்கும் விதத்தில் தயாராக வைத்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி