இதுவொரு இனத்துவேசமான அரசாங்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசினை ஏற்றிக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “உண்மையில் நான் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசினை எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தேன். ஏன் என்றால் எனக்கு 30 வயது. என்னை விட தேவை உள்ளவர்கள் கூடுதலாக இருக்கும் போது நான் இந்த தடுப்பூசி எடுப்பது பொறுத்தமில்லை என்று சொல்லி நம்பியிருந்தேன்.

ஆனாலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் ஊடாகவும் ஒரு அமைச்சர்கள் தங்களுக்கும், தங்களது உறவினர்களுக்கும் வீட்டிற்கே அழைத்து கொரோனா தடுப்பூசியினை எடுக்கிறார்கள் என அறிந்ததன் பின்னர் நானும் இந்த தடுப்பூசியினை எடுப்பது பிழை இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டேன்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் ஒருநாளைக்கு 500 முதல் 600 வரையில்தான் கிடைக்கக்கூடியதாக காணப்படுகின்றது. அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம்தான் இருகின்றது.

சுமார் 10 நாட்களுக்கு பின்னர் பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்குமாக இருந்தால், தனிமைப்படுத்தல் என்பதே தேவைப்படாத ஒரு விடயம்.

கொரோனா ஒழிப்புக்காக  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியினை யாரோ ஒருவர் கொள்ளையடிக்கின்றனரா என்ற சந்தேகம் கூட எங்களுக்குள் காணப்படுகின்றது. இது மாபியாவாக வருமானம் உழைப்பதற்காக செய்யப்படுகின்ற ஒரு விடயமா என்ற சந்தேகம் கூட இருக்கின்றது.

இதுவொரு இனத்துவேசமான அரசாங்கம், அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு 45 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு கொரோனா நிலையம் ஒன்றினை வழங்கியுள்ளனர். ஆனால் அது இயங்காத நிலையில் காணப்படுகின்றது.

இட்டுகம கொரோனா நிதியத்திற்கு இலங்கையிலுள்ள அதிகளவான நிறுவனங்கள், அமைப்புகள், பொதுமக்கள் என நிதியினை வழங்கியுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளரின் அறிக்கையின்படி ஜனவரி 31ஆம் திகதியளவில் கொரோனா நிதியத்தில் ஆயிரத்து 720 மில்லியன் ரூபாய் பணத்தில் ஆறு வீதமான பணம்தான் செலவிடப்பட்டுள்ளது.

ஆகவே எஞ்சியுள்ள ஆயிரத்து 600 மில்லியன் ரூபாய் நிதி எங்கே?“ எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி