“வடக்கில் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை அநுர அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

இல்லாவிட்டால் ஜனாதிபதி யாழ். மண்ணுக்கு வரமுடியாமல் அல்லது கால் வைக்கமுடியாமல் செய்வோம்” என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இன்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தொழிலாளர்களுக்காக அன்று முதல் இன்று வரை இந்த நாட்டில் செயற்படுகின்ற ஒரே கட்சி தமிழரசுக் கட்சி தான். தமிழ் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நம்பிக்கையைப் பெற்ற பிரதான கட்சியும் எமது கட்சிதான்.

இப்படியாக உழைக்கும் தொழிலாளர்களுக்காகவும் மக்களுக்காகவும் நாம் எப்போதும் உண்மையாகக் குரல் கொடுத்து வருகின்ற நிலையில் ஆட்சியில் உள்ள அநுரகுமார தரப்பினர் தொடர்ச்சியாகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இவ்வாறு கடந்த காலங்களில் ஏமாற்றியவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ 51 வீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகிய போதும் அதே மக்களால் துரத்தியடிக்கப்பட்டதைப் பார்த்திருந்தோம். சிங்கள மக்களாலேதான் நான் வந்தேன் வந்தேன் எனக் கூறிக் கொண்டிருந்த கோட்டாவுக்கே இதே கதி என்றால் கேவலம் வெறுமனே 42 வீத வாக்குகளுடன் வந்த அநுரகுமாரவுக்கு என்ன நடக்குமோ தெரியாது.

ஆகவே, பொய்யான வாக்குறுதி வழங்கி மக்களை ஏமாற்றுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றாமல் உள்ளீர்கள். ஆக மொத்தத்தில் பொய்யான வாக்குறுதிகளையே வழங்கியுள்ளீர்கள். எனவே, உங்கள் வழியை நீங்கள் சரி பண்ணாவிட்டால் உங்களுக் கும் இதுதான் நடக்கலாம். பொய்யானவாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றாதீர்கள்.

குறிப்பாக நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் மக்களின் காணிகள் மக்களிடமே வழங்கப்படும் என்று கூறியிருந்தீர்கள். படையினர் வசமுள்ள மக்கள் காணியை விரைவில் விடுவிப்போம் என்றும் கூறியிருந்தீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கு மாறாக காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளீர்கள். உங்களுடைய இந்தச் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

உங்களது வாக்குறுதிக்கு மாறாக வடக்கில் காணிகளைச் சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக வாபஸ் பெறவேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் யாழ். மண்ணுக்கு வர முடியாமல் அல்லது கால்வைக்க முடியாமல் செய்வோம்.

எங்களை ஏமாளிகள் எனக் கருதவேண்டாம். ஏமாற்றுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம். மேலும், இன்றைய மே நாளில் நாம் சில தீர்மானங்களையும் எடுத்துள்ளோம்.

குறிப்பாக இராணுவக் கையிருப்பில் உள்ள எமது மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும், விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டும், தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

இன்றைக்கு நாட்டில் நாளாந்தம் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அதிலும் தேர்தல் வரும்போது குறைப்பது மாதிரி குறைத்துக் கொண்டாலும் மறுபக்கம் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

குறிப்பாக சீனியை விட உப்பின் விலை அதிகரித்துள்ளது. அதிலும் ரஜலுனு என உப்புக்கு ஒரு புதிய பெயரை வைத்தவர்கள். அதைப் பற்றிக் கேட்டால் பெயரைப் பார்க்காதீர்கள், ருசியைப் பாருங்கள் எனச் சொல்கின்றார்கள். தமிழ்ப் பெயரை சிங்களப் பெயராக அவர்கள் மாற்றுவார்களாம். அதைப் பற்றி கேட்டால் சம்பந்தம் இல்லாமல் பேசுகின்றார்கள். ஆக தமிழ்ப் பெயரை அவர்கள் இங்கு மாற்றலாம். தாங்கள் தமிழ்ப் பெயரை வைக்கத் தயாரில்லை.

இவ்வாறானவர்கள்தான் எங்களுக்கு வந்து உபதேசம் செய்கின்றார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களிலேயே இதெல்லாம் நடக்கின்றதென்றால் இனி என்ன என்ன எல்லாம் நடக்கப் போகின்றதோ என்றுபார்க்கலாம்.

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் தங்களது அடிப்படைக் கொள்கைக்கு மாறானது எனக் கூறி அதற்கு எதிராக நீதிமன்றம் வரை சென்றவர்கள் இன்றைக்கு அந்த ஒப்பந்தத்தில் எதனையும் மாற்றாது அப்படியே ஏற்றுக்கொண்டு செயற்படுகின்றனர்.

கடன் மறுசீரமைப்பு செய்கின்றபோது தொழிலாளர் வர்க்கத்துக்குச் செய்யும் துரோகம் என்று சொன்னவர்கள் அதனையே இன்று பெருமையாகப் பேசி வருகின்ற நிலைமையைக் காணக்கூடியதாக உள்ளது. தங்களை இடதுசாரிகள் எனக் காட்டிகொண்டு மோசமான ஆட்சி செய்பவர்கள்தான் இந்த அநுரகுமார ஆட்சியாளர்கள்.

உங்களது தலைவர் ரோகண விஜயவீர தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்று கூறியிருக்கின்றார் என்றால் நீங்களும் உண்மையான இடதுசாரிகள் என்றால் தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு எனச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் சிவப்புச் சட்டை அணிவதில் அர்த்தம் இல்லை.

தொழிலாளர்களுக்கு நன்மை அளிப்பதாகக் கூறிக் கண்டு முதலாளித்துவக் கொள்கையில் பயணித்துக்கொண்டு தொழிலாளர்களுக்கு எப்படி நன்மையளிக்க முடியும்? எனவே, முதலாளித்துவக் கொள்கையை விட்டு விலகி உங்களது பழைய ஆரம்பத்துக்கு வாருங்கள்.

லெலினிசக் கோட்பாட்டுக்கு வாருங்கள், சம்பள உயர்வு கொடுங்கள், அப்படியாக உங்களால் திரும்பி வர முடியாவிட்டால் மக்களிடம் செல்ல முடியாத நிலை உங்களுக்கு விரைவில் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தமிழரசுக் கட்சிதான்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி