மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலொன்று, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்தக் கட்டுப்பாடுகள், 29ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்துள்ளது.
அதன்படி, புதிய மின்னியக்க மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்ய வேண்டுமென்றால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் தலைவரிடமிருந்து உரிமம் பெறப்பட வேண்டும் என்ற முந்தைய கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பயன்படுத்தப்பட்ட மின்னியக்க மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டால், மேலும் அனுமதி தேவைப்படும் என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஏப்ரல் 29ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதனூடாக, இறக்குமதி செய்யப்பட்டும் பல்வேறு காரணங்களால் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் காணப்படும் பல வகையான கார்களை விடுவிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விளக்கமளித்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே,
“ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களாக இந்த வாகனங்களை எங்களால் விடுவித்துக்கொள்ள முடியவில்லை. Hybrid Toyota Raize மற்றும் Hybrid Nissan X-TRAIL புதிய வர்த்தமானி வௌியிட்டதன் காரணமாக, இப்போது அவற்றை பெற்றுக்கொள்ள முடியும். இதேபோல், இந்த தொழில்நுட்பத்தின் கீழ் வரும் ஏனைய வாகனங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.”
இதேவேளை, பதிவு செய்யப்படாத புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதி அனுமதிகளைப் பெற்று புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.