நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த
பரமாசாரிய சுவாமிகள் நேற்றிரவு (01) இரவு இறையடி சேர்ந்தார்.
கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே, அவர் சிகிச்சைப் பலனின்று சாயுச்சியம் பெற்றதாகத் தெரியவருகிறது.
இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் இறுதிக் கிரியை நிகழ்வுகள், இன்று நல்லை ஆதீனத்தில் நடைபெறவுள்ளன.
கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே குரு முதல்வர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறையடி சேர்ந்தார்.
குரு முதல்வரின் புகழுடல், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவரப்படும் நிலையில் இன்று மாலை 4 மணியளவில் சுவாமிகளின் இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளன.
அரை நூற்றாண்டு காலம் ஈழத்து சைவ சமயத்தின் தலைமகனாக விளங்கிய தம் வாழ்வை மிக இளமை காலத்திலிருந்து சைவத்திற்கு தந்த ஆதீன சுவாமிகளுடைய இறுதி கிரியைகளில் சைவ உலக மக்களை திரண்டு பங்கேற்குமாறு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை, எமது யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் பூரணரமடைந்த செய்தி சைவ மக்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக இந்துமார் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்துக் குருமார் அமைப்பு வௌியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"இந்தியா மதுரை ஆதீன திரு மடத்தின் தொடர்புடன் 1966 ம் ஆண்டு ஆரம்பித்து சமயத்திற்காகவும் சமூகத்திற்காகவும் குரல் கொடுத்து பல்வேறு நற்பணிகள் ஆற்றிவந்துள்ள ஆதீனமாகும். முதலாவது ஆதீன கர்த்தராக மணிஐயரவர்கள் விளங்கினார்கள்.
நல்லை ஆதீன இரண்டாவது குரு மகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் விளங்கினார்கள். அமைதியான சுபாவமுடையவராக அனைவரையும் அன்புடன் வரவேற்று அரவணைத்து வழிகாட்டிடும் ஓர் மகா புருஷராக விளங்கினார்கள்.
“இச்சமயத்தில் சைவ மக்களாகிய நாமெல்லோரும் சுவாமிகள் திருவடி பணிந்தவர்களாக சிவசாயுச்சியத்திற்கு அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்வோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமக்கு ஏதும் நேர்ந்தால் தம்மைச் சமாதி வைக்க வேண்டாம் என்றும், காலதாமதமின்றிச் செம்மணி மயானத்தில் தம் பூதவுடலை சைவ முறைப்படி நீறாக்கும்படியும் மறைந்த நல்லை ஆதீன முதல்வர் கூறியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.