திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது இன்று (28) காலை 7 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இந்த அறிவித்தல் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, வங்காள விரிகுடா கடல் பகுதியில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் தீவின் கிழக்கு கடல் பகுதிகளுக்கு இது பொருந்தும். அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வடகிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான "மொந்தா" சூறாவளி, இன்று அதிகாலை 2.30 மணியளவில் முல்லைத்தீவிலிருந்து சுமார் 650 கிலோமீட்டர் வடகிழக்கே, 14.4° N அகலாங்கு மற்றும் 83.3° E நெட்டாங்குக்கு அண்மையில் மையம் கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு நோக்கிய சாய்வுடன் வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிர புயலாக வலுவடைந்து, இன்று மாலை அல்லது இரவில் ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கிறது.
சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.
கீழே உள்ள வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும், அத்துடன் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70-80 கி.மீ. வரை அதிகரிப்பதனால், அந்த கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாக காணப்படலாம்.


