மலையக மக்கள் முன்னணியில் இருந்து விலக்கப்பட்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.

ஐக்கிய தொழிலாளர் முன்னணி என அந்த கட்சிக்கு அவர் பெயரிட்டுள்ளார். இது கட்சியாகவும் தொழிற்சங்கமாகவும் செயற்படும் என தெரியவருகிறது.

இந்த புதிய கட்சியின் நிழ்ல் தலைவராக அரவிந்தகுமார் செயற்பட உள்ளார். மலையக மக்கள் முன்னணியில் இருந்து தான் விலக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளதால் நிரந்தர தலைவராக அவர் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளராக அரவிந்தகுமாரின் மகன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பிரதித் தலைவராக அஜித்குமார் நியமிக்கப்படவுள்ளார்.

அமரர் சந்திரசேகரன் அவர்களின் பிரத்தியேக உதவியாளராக செயற்பட்ட அஜித்குமார் பின்னர் இராதாகிருஸ்ணனின் தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் மலையக தொழிலாளர் முன்னணியின் நிர்வாக செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். எனினும் ராதாகிருஸ்ணன் அணியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து அவர் அரவிந்தகுமாருடன் இணைந்துள்ளதாக லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு தெரியவந்துள்ளது.

மேலும் அரவிந்த குமார் தலைமையிலான புதிய கட்சியின் நிர்வாக செயலாளராக பசறை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் சிரேஸ்ட உப தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய அமைப்பாளராக பாபு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஷர்மிலா என்ற பெண் நிதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐக்கிய தொழிலாளர் முன்னணி என்பது அரவிந்தகுமாரால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட தொழிற்சங்கம் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணி மற்றும் இந்த ஐக்கிய தொழிலாளர் முன்னணி ஆகிய இரண்டுமே ஆங்கிலத்தில் சுருக்கமாக யுபிஎப் (UPF) என்றே அழைக்கப்படும்.

அரவிந்தகுமார் மிகவும் சூட்சமமான முறையில் ஐக்கிய தொழிலாளர் முன்னணியை உருவாக்கி மலையக தொழிலாளர் முன்னணிக்கு பெற்ற சந்தா பணத்தை தமது  ஐக்கிய தொழிலாளர் முன்னணி என்ற கட்சிக்கு மாற்றிக் கொண்டுள்ளார்.

இது குறித்து ஏற்கனவே மலையக மக்கள் முன்னணியின் தலைமை பல இடங்களில் கருத்து வௌியிட்டு இருந்தது. இந்நிலையில் 20வது திருத்தச் சட்டத்திற்கு அரவிந்தகுமார் ஆதரவு வழங்கியதால் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதன் பின் பதுளை மாவட்டத்தில் இராதாகிருஸ்ணன் தனியாகவும் அரவிந்தகுமார் தனியாகவும் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே மலையக மக்கள் முன்னணியில் இருந்து அனுஷா சந்திரசேகரன் விலகி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தற்போது அரவிந்தகுமார் புது கட்சி தொடங்கியுள்ளார். அதன்படி மலையக மக்கள் முன்னணி இன்று மூன்று அணியாக பிளவுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி