மே தின நிகழ்வுகளை நடத்துவதை இடைநிறுத்தும் அரசாங்கத்தின்  தீர்மானத்தை மீறி நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று மே தின கொண்டாட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளது.

உழைக்கும் மக்களின் மே தின கொண்டாட்டங்களை, கொரோனா செயலணியை பயன்படுத்தி தடை செய்ய  அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வருட சர்வதேச தொழிலாளர் தின பேரணிகள், பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக, கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா கடந்த 20ஆம் திகதி, ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் ஏப்ரல் 20ஆம் திகதி நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லின் குறித்த ஊடக அறிக்கையில்  வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவத் தளபதி இணைந்து எடுத்த இந்த தீர்மானம் தொடர்பில் தொழிற்சங்க தலைவர்களின் ஆலோசனைப் பெறப்பட்டதா என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

மே தினத்தை நடத்துவது தொடர்பான தீர்மானம் இந்த நாட்டின் உழைக்கும் மக்களால் எடுக்கப்பட வேண்டுமேத் தவிர, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அரசாங்கத்தால் எடுக்கப்படக்கூடாது என சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினம் எனப்படுவது தொழிலாள வர்க்கத்தால் கொண்டாடப்படும் ஒரு தினம் எனவும், மாறாக அரசியல் கட்சிகளால் கொண்டாடப்படும் ஒரு தினம் அல்லவெனவும்   இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புவதற்கான தினம் குறித்து தீர்மானம் மேற்கொள்ள, அரசியல் கட்சிகளுக்கு அல்லது அரசாங்கத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதான அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கும் இடையில் கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது மே தினக் கூட்டங்களை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே,  நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், மொஹமட் முஸம்மில்  உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தொழிற்சங்கங்களின் பெயர்களையோ அல்லது உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களின் பெயர்களோ அதில் குறிப்பிடப்படவில்லை.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொது மக்கள் சிங்கள, தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நிலையில், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதற்கோ, நோய் பரவுவதைத் தடுப்பதற்காகவோ, அரசாங்கமோ அல்லது கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு தனிமைப்படுத்தல் சட்டங்களையும் பின்பற்றாமல், மக்களை அணிதிரட்டும் பல்வேறு நிகழ்ச்சிகளை, கிராமங்கள் தோறும் அரசாங்கம் நடத்தி வருவதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

கொரோனாவை காரணம் காட்டி, அரசியல் கட்சிகள் மே தின கொண்டாட்டங்களை நடத்தாமல் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிப்பதன் ஊடாக, அரசாங்கத்தின் தற்போதைய நெருக்கடியை மூடிமறைப்பதற்கும், பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம்  குற்றம் சாட்டியுள்ளது.

உழைக்கும் மக்களுக்கான மே தின கொண்டாட்டங்களை இரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.

வங்கிகள், தபால் சேவை, துறைமுகங்கள், ஆசிரியர்-அதிபர்கள், சுகாதார, காப்புறுதி மற்றும் தொலைத்தொடர்பு  ஆகிய சுயாதீன தொழிற் சங்கங்களுடன் இணைந்து, இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த வருட சர்வதேச தொழிலாளர் தினத்தை மே முதலாம் திகதி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் தடையை மீறி இந்த வருட மே தின கொண்டாட்டங்கள் நடத்தப்படும் என பல இடதுசாரிக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் முன்னர் அறிவித்திருந்தன.

அடுத்த மூன்று வாரங்கள் ஆபத்தானவை

அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணுவத் தளபதியும் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பொதுமக்களின் நடத்தைக் காரணமாக,  நாட்டில் மீண்டும் வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கான ஆபத்து காணப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும், எந்தவித தடைகளும் இன்றி முகக்கவசங்களையேனும் அணியாமல், பெரும் கூட்டமாக பொது மக்கள் சிவனொளிபாத மலைக்குச் சென்றதை காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இராணுவத் தளபதி பல்வேறு விழாக்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதோதடு,  வீட்டை விட்டு வெளியேறும்போது முகக்கவசங்களை அணிவது கட்டாயமாகும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி