அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைத்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றத்தை
அறிவிக்க முடியாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டிக் கட்டணம் தொடர்பில் ஒவ்வொரு சங்கங்கள் தங்கள் முடிவுகளை அறிவிக்க அனுமதிக்காமல், அரசாங்கமே அதை தீர்மானிக்க வேண்டும் என்று, மேற்படி சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
"பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற்போல முச்சக்கரவண்டிக் கட்டணத்தை எவ்வளவு குறைக்க வேண்டும் என்று, இனி நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. குறைக்க முடியும். குறைக்க வேண்டும். ஆனால் அது யதார்த்தமான ஒரு நிலைக்குக் குறைக்கப்பட வேண்டும். தற்போது இக்கட்டணம் பெயரளவில் ரூ. 100 மற்றும் ரூ. 85ஆகக் காணப்படுகிறது. ஆனால் அக்கட்டணம் பெயரளவில் மட்டும்தான் இருக்கிறது.
“பொறுப்பானவர்கள் இதைத் தட்டிக்கழிக்க வேண்டாம். முச்சக்கரவண்டி சங்கங்கள் இனி கட்டணத்தை நிர்ணயிக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை. அதை அறிவித்தாலும், அதற்கு எந்த மதிப்பும் இல்லை. பொதுப் போக்குவரத்துத் திணைக்களத்தால் ஒரு கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைச் செயற்படுத்துங்கள்.
“தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தனது விருப்பப்படி நாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இந்த மறுமலர்ச்சி சகாப்தத்திலாவது, இது விடயத்தில் அரசாங்கம் முறையாகத் தலையிட வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.