பிரயாக்ராஜில் பிரபல மருத்துவர் மருத்துவமனையில் உதவியற்ற நிலையில் உயிர்துறந்த கதை"அலகாபாத் ஸ்வரூப்ராணி மருத்துவமனையில், எனது கணவர் 50 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார். அவர் பயிற்சி அளித்த பல மருத்துவர்கள் இதே மருத்துவமனையில் பணிபுரிகின்றனர். ஆயினும், இந்த கோவிட் வைரஸ் காரணமாக ஒரு மருத்துவர் கூட அவருக்கு சிகிச்சை அளிக்க வரவில்லை. என் கண் முன்னே அவர் உயிரிழந்தார். நான் ஒரு டாக்டராக இருக்கும்போதிலும், என்னாலும் அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை."

பிரயக்ராஜின் பிரபல மருத்துவர் ரமா மிஸ்ரா தொலைபேசியில் இதைக் குறிப்பிடும்போது மனமுடைந்து அழுதார்.

மருத்துவமனையின் அலட்சியம், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் புறக்கணிப்பு மற்றும் மருத்துவமனையில் வசதிகள் இல்லாததால், தனது கணவர் தன் கண்முன்னே இறந்தது மட்டுமே அவருக்கு வருத்தத்தை தரவில்லை. அந்த நான்கு இரவுகளிலும் இதே போல இறந்து போன பலரையும் அவர் நேரில் கண்டதால், அவரது துக்கம் பன்மடங்காக உள்ளது.

80 வயதான மருத்துவர் ரமா மிஸ்ரா, பிரயாக்ராஜின் பிரபல மகளிர் நோயியல் நிபுணர். அலகாபாத்தின் (இப்போது பிரயாக்ராஜ்) மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியில் அவர் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். ஸ்வரூப்ராணி நேரு மருத்துவமனை இந்த மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் அவரது கணவர் டாக்டர் ஜே.கே.மிஸ்ரா, ரமா ஆகிய இருவரும், கடந்த வாரம் ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

"கோவிட் ரிப்போர்ட் பாசிடிவ் என்று வந்த பிறகு, நாங்கள் முதலில் வீட்டு தனிமைப்படுத்தலில் தங்கியிருந்தோம்.

ஆனால் அவருடைய ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தது. மருத்துவ கல்லூரியின் மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினர்.

மருத்துவமனையில் படுக்கைகள் கூட இல்லாமல் இருந்தது. ஆனால் எங்களுக்குத் தெரிந்த மருத்துவர்கள் படுக்கைக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமைகள் மிகவும் பயங்கரமாக இருந்தன, " என்று டாக்டர் ரமா மிஸ்ரா கூறுகிறார்.

கொரோனா: பிரயாக்ராஜில் பிரபல மருத்துவர் மருத்துவமனையில் உதவியற்ற நிலையில் உயிர்துறந்த கதை

கொரோனா: பிரயாக்ராஜில் பிரபல மருத்துவர் மருத்துவமனையில் உதவியற்ற நிலையில் உயிர்துறந்த கதை

டாக்டர் ரமா மிஸ்ரா மற்றும் அவரது கணவர் டாக்டர் ஜே.கே மிஸ்ராவும், ஏப்ரல் 13 ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்றனர். மருத்துவமனையின் கோவிட் வார்டில் ஒரே ஒரு படுக்கை மட்டுமே கிடைத்தது.அன்றிரவு தான் தரையில் படுத்துக்கொண்டதாக டாக்டர் ரமா மிஸ்ரா கூறினார். ஏனென்றால் மறுநாள்தான் அவருக்கு படுக்கை கிடைத்தது.

"எனக்கு படுக்கை கிடைக்கவில்லை. எனக்கு ஆக்ஸிஜன் தேவை இருக்கவில்லை. என் ரிப்போர்ட் பாஸிட்டிவ் ஆக இருந்தபோதிலும் எனக்கு உடல்நலம் பாதிக்கப்படவில்லை. அன்றிரவு என் கணவருக்கு ஒரு ஊசி போடப்பட்டது. ஆனால் எந்த ஊசி என்று என்னிடம் கூறப்படவில்லை. நான் கேட்டபோதும் கூட என்னிடம் அவர்கள் சொல்லவில்லை. மறுநாள் காலையில் மீண்டும் ஊசி போடப்பட்டது.

இரவில் நான் பார்த்த காட்சி மிகவும் பயங்கரமாக இருந்தது. நோயாளிகள் இரவு முழுவதும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்க யாருமே வரவில்லை. செவிலியர் அல்லது மருத்துவர்கள் இடையிடையே வரும்போது, அவர்களை பேசாமல் இருக்கும்படி சொல்வார்கள் அல்லது ஊசி போடுவார்கள்.

அவர்களில் பலர் காலையில் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டனர். அதாவது அவர்கள் இறந்துவிட்டனர்,"என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் என்ன நடந்தது?

கொரோனா: பிரயாக்ராஜில் பிரபல மருத்துவர் மருத்துவமனையில் உதவியற்ற நிலையில் உயிர்துறந்த கதை

பிரயாக்ராஜில் மம்ஃபோர்ட்கஞ்சில் வசிக்கும் டாக்டர் ஜெகதீஷ் குமார் மிஸ்ரா மற்றும் அவரது மனைவி டாக்டர் ரமா மிஸ்ரா ,மார்ச் 1 ஆம் தேதி நகரின் பெய்லி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றனர். ஏப்ரல் 7 ஆம் தேதி இருவரும் இரண்டாவது டோஸை போட்டுக்கொண்டனர். இருந்தபோதிலும் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

கொரோனா: பிரயாக்ராஜில் பிரபல மருத்துவர் மருத்துவமனையில் உதவியற்ற நிலையில் உயிர்துறந்த கதை

ஏப்ரல் 13 ஆம் தேதி, இருவரும் ஸ்வரூப்ராணி நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர் ஜகதீஷ் குமார் மிஸ்ரா வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார். டாக்டர் ஜே.கே.மிஸ்ரா ஸ்வரூபராணி நேரு மருத்துவமனையில் முதலில் ஹவுஸ் சர்ஜனாக இருந்தார் என்றும் பின்னர் அறுவை சிகிச்சை துறையின் தலைவரானார் என்றும் டாக்டர் ரமா மிஸ்ரா குறிப்பிட்டார்.

டாக்டர் ரமா மிஸ்ரா , ஸ்வரூப்ராணி நேரு மருத்துவமனையில் மகளிர் மற்றும் மகப்பேறு துறையில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

"மருத்துவமனையில் கொரோனா நோடல் அதிகாரி டாக்டர் மோஹித் ஜெயின், எங்கள் ஜூனியராக இருந்திருக்கிறார். நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் அவர் இங்கு வந்தார். எங்களைப் பார்த்து திடுக்கிட்டார்.

நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என்று கேட்டார். சிறிது நேரம் எங்களுடன் இருந்தார். நலம் விசாரித்தார். ஆனால் அவரும், எங்களுக்கு என்ன நேர்ந்தது, என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை சொல்லவில்லை. அதன் பிறகு, அவர் ஒரு முறை கூட எங்களைப் பார்க்க வரவில்லை," என்று டாக்டர் ரமா தெரிவித்தார்.

வார்டில் குறிப்பாக இரவில், யாருமே இருக்கவில்லை. ஒரு வார்டு ஊழியர் கூட இல்லை என்று அவர் மேலும் கூறுகிறார்.

"ஒரு ஜூனியர் மருத்துவர் மட்டுமே இரவில் வருவார். அவர் ஆக்ஸிஜனின் அளவைப் பார்த்துவிட்டு சென்று விடுவார். முதல் நாள் என் கணவரின் ஜூனியராக இருந்த சச்தேவா என்ற மருத்துவர் இருந்தார். அவர் மூன்றடி தூரத்தில் நின்றுகொண்டு எங்களை விசாரித்தார். பிறகு அவர் வரவேயில்லை. சிறிது நேரம் கழித்து மற்றொரு மருத்துவர் வந்தார். அவர் எங்களை 'மேதாந்தா மருத்துவமனைக்கு' செல்லுமாறு அறிவுறுத்தினார்," என்று அவர் குறிப்பிட்டார்.

இப்படியே மூன்று நாட்கள் ஓடியதாக டாக்டர் ரமா மிஸ்ரா தெரிவித்தார்.

ஏப்ரல் 16 அன்று டாக்டர் ஜே.கே. மிஸ்ராவின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

"ஆக்ஸிஜன் அளவு படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. ஒரு கருவி பொருத்தப்பட்டபோது அவரது மூச்சு நிற்க ஆரம்பித்தது. நான் அதை அகற்றுமாறு கூறினேன். ஆனால் சளியில் ரத்தம் வரத் தொடங்கியது. அங்கு இருந்த ஒருவரிடம் நான் இது பற்றி கேட்டபோது, இந்த நோயில் இவை அனைத்தும் நிகழும் என்று அவர் பொறுப்பில்லாமல் பதிலளித்தார். நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும், வென்டிலேட்டரில் வையுங்கள் என்று நான் கத்த ஆரம்பித்தேன். ஆனால் வென்டிலேட்டர் இங்கே இல்லை என்று மருத்துவர் கூறினார். எங்கள் ஜூனியராக இருந்த டாக்டர் சக்தி ஜெயின், மேல் வார்டுக்கு ஓடிச்சென்று அங்கு படுக்கைக்கு ஏற்பாடு செய்தார். நான் லிஃப்டில் மேல் மாடியை அடைந்தபோது, அவர் சுவாசிக்கவில்லை என்பதைக் கண்டேன். வென்டிலேட்டரை கொண்டுவந்து அதை இணைக்க நேரம் ஆனது. அந்த நேரத்திற்குள் என் கணவர் உயிரிழந்தார், "என்று டாக்டர் ரமா மிஸ்ரா கண்ணீர் பொங்கத்தெரிவித்தார்.

கொரோனா: பிரயாக்ராஜில் பிரபல மருத்துவர் மருத்துவமனையில் உதவியற்ற நிலையில் உயிர்துறந்த கதை

கொரோனா: பிரயாக்ராஜில் பிரபல மருத்துவர் மருத்துவமனையில் உதவியற்ற நிலையில் உயிர்துறந்த கதை

டாக்டர் ரமா மிஸ்ரா, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களின் கவனக்குறைவு; அவர்களின் மோசமான நடத்தை ஆகியவை குறித்து வருத்தப்படுகிறார்.

"எங்களுக்கு நிறைய டாக்டர்களை தெரியும். இருந்தும்கூட இதுதான் நடந்தது. சாதாரண நோயாளிகளின் நிலைமையை நினைத்துப்பாருங்கள். அவர்கள் ஏதாவது கேட்டால்,ஏச்சுதான் கிடைக்கும். மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லை. ஊழியர்களும் இல்லை. உண்மையைச் சொன்னால், யார் இங்கு வந்தாலும், இறந்துதான் போகவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்வரூப் ராணி மருத்துவமனையின் கோவிட் நோடல் அதிகாரி டாக்டர் மோஹித் ஜெயின் வளங்களின் பற்றாக்குறை இருப்பதை மறுத்தாலும், மருத்துவமனையில் இப்போது நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் அதைக் கையாளுவது கடினமாக உள்ளது என்று கூறுகிறார்.

"இங்கு வரும் நோயாளிகள் மிகவும் ஆபத்தான நிலையில் வருகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய பிரச்சினை. ஆக்ஸிஜன் அளவு 25-30 க்கு குறைந்துவிடுகிறது. இந்த நேரத்தில் எங்கள் மருத்துவமனையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர் . அவர்களில் பலரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் வருபவர்களுக்கு சிகிச்சையளிக்க, எங்களிடம் அதிகமாக எதுவுமே இல்லை. நோயாளிகள் சரியான நேரத்தில் எங்களிடம் வந்தால், எல்லா வகையான சிகிச்சையையும் அளிக்கும் திறன் எங்களிடம் உள்ளது," என்று பிபிசியிடம் பேசிய டாக்டர் மோஹித் ஜெயின் கூறினார்.

அறிகுறிகள் தென்படத்துவங்கிய பிறகும் மக்கள் பல நாட்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருப்பதாகவும், நிலைமை மோசமடையத் தொடங்கும் போது, அவர்கள் மருத்துவமனைக்கு வருவதாகவும் டாக்டர் மோஹித் ஜெயின் கூறுகிறார். முந்தைய விதிமுறைகளுக்கு ஏற்ப தங்களிடம் போதுமான வளங்கள் உள்ளன, ஆனால் தற்போதைய சூழலுக்கு தேவையான வளங்கள் பற்றி சிந்திக்கக்கூட முடியவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.

இருப்பினும் உண்மை என்னவென்றால், மக்கள் கோவிட் சோதனைக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். யாருக்கு சோதனை செய்யப்படுகிறதோ அவர்களின் அறிக்கை கிடைக்க மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகிறது. முரண்பாடான நிலை என்னவென்றால் அந்த நேரத்திற்குள் நோயாளியின் நிலை மோசமடைந்து விடுகிறது. மறுபுறம் அறிக்கை இல்லாததால் மருத்துவமனையிலும் அவர்களை சேர்க்கமுடிவதில்லை. நோய்த்தொற்றும் மற்றவர்களுக்கு பரவுகிறது.

டாக்டர் ஜே.கே. மிஸ்ராவின் மரணம் தொடர்பாக பேசிய டாக்டர் மோஹித் ஜெயின், அவரது இறப்பு மாரடைப்பு காரணமாக ஏற்பட்டது என்று கூறுகிறார்.

"மேடம் என்னுடைய சீனியராக இருந்திருக்கிறார். அவரது கணவர் இறந்து விட்டதால், அவருக்கு குறைகள் இருக்கும். ஆனால் நாங்கள் அவருடைய சிகிச்சையில் எந்தக்குறையும் வைக்கவில்லை. நான் பல முறை அவரை பார்க்கச்சென்றேன். ஐந்து நிமிடங்களுக்கு முன்பு வரை அவர் நன்றாக இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு எந்த சூழ்நிலையில் திடீரென்று இறந்தாரோ அதைப்பார்க்கும்போது அவரை எந்த மருத்துவமனையாலும் காப்பாற்றியிருக்க முடியாது, "என்று அவர் தெரிவித்தார்.

பிரயாக்ராஜின் நிலை என்ன?

உத்தர பிரதேசத்தில் லக்னெளவுக்குப் பிறகு பிரயாக்ராஜ் நகரம், தற்போது கொரோனா நோயால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. அங்கு அரசு புள்ளிவிவரங்களின்படி, சராசரியாக, ஒவ்வொரு நாளும் 10 க்கும் மேற்பட்டோர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

நூற்றுக்கணக்கான புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன. இங்கே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் ஒவ்வொரு ஐந்தாவது நபருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையும் இங்கு 1711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனளிக்காமல் 15 பேர் இறந்தனர். மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனின் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக பலர் உயிரிழக்கின்றனர்.

இறப்புகளின் எண்ணிக்கை பற்றி வெளிவரும் புள்ளிவிவரங்கள், உண்மையான இறப்புகளுடன் ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை என்று கோவிட் மருத்துவமனையில் பணிபுரியும் பிரயாக்ராஜைச் சேர்ந்த , பெயர் தெரிவிக்கவிரும்பாத ஒரு மருத்துவர் கூறினார்.

உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, நகரத்தின் வெவ்வேறு மயானங்களில் ஒவ்வொரு நாளும் 100 க்கும் மேற்பட்ட சடலங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. இந்த இறப்புகளில் பெரும்பாலானவை கொரோனாவால் ஏற்படுகின்றன. இருப்பினும், நிர்வாகமோ சுகாதாரத் துறை அதிகாரிகளோ இதை உறுதிப்படுத்தவில்லை.

மருத்துவமனையில் எல்லாமே நன்றாக இருப்பதாக டாக்டர் மோஹித் ஜெயின் கூறும்போதிலும், இங்குள்ள சூழ்நிலையில் ஓரளவு தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளி கூட பிழைப்பது கடினம் என்று டாக்டர் ரமா மிஸ்ரா கருதுகிறார்.

"மக்கள் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் வைக்கப்படுகின்றனர். கவனக்குறைவு மிக அதிகம். எந்த வளங்களும் இல்லை. மூன்று வென்டிலேட்டர்கள் மட்டுமே இருந்தன. அவையும் தேவைப்படும்போது வேலை செய்வதில்லை. அவர்கள் மருந்துகள் கொடுக்கிறார்கள். ஆனால் ஏமாற்றுவேலை அதிகம். பிற நோயாளிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் குறைந்தது 15-20 மருத்துவர்களை இந்த மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் நான்கு மணிநேரம் மட்டுமே வேலை செய்தால்கூடப்போதும். தீவிரமாக நோய்வாய்பட்டவர்கள் இறந்துவிடுவார்கள். ஆனாலும் குறைந்தபட்சம் மருத்துவமனையில் அவர்களை கவனிப்பவர்கள் இருப்பார்கள், சரியான நேரத்தில் சிகிச்சையாவது கிடைக்கும்," என்று டாக்டர் ரமா மிஸ்ரா தெரிவிக்கிறார்.

டாக்டர் ரமா மிஸ்ராவின் இரண்டாவது கோவிட் ரிப்போர்ட் ஏப்ரல் 17 ஆம் தேதி நெகட்டிவாக வந்தது. அவர் இரவில் தனது வீட்டிற்கு திரும்பினார். கோவிட் வார்டுகள் முழுவதுமாக மூடப்படக்கூடாது என்று அவர் கூறுகிறார். உள்ளே என்ன நடக்கிறது என்பதை நோயாளியின் குடும்பத்தினர் அறிய, ஒரு புறமாவது கண்ணாடிச் சுவர் இருக்க வேண்டும் என்று அவர் யோசனை தெரிவிக்கிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி