அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களாக ஏற்றுக்கொள்ளப்படுவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து கல்வி, தொழிலாளர் படை மற்றும் மனித மூலதனம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே தலைமையில் பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடியபோதே இச்சம்பவம் இடம்பெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் தரமற்ற பட்டங்களை வழங்கும் நிறுவனங்கள் உருவாவதால் ஏற்படும் பாதிப்புகளை தெளிவுபடுத்தினார். இந்த நிறுவனங்கள் கல்வி வழங்குவதை விட, இலாபம் ஈட்டும் முதன்மை நோக்கத்துடன் செயல்படுகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். எனவே, பட்டதாரிகள் ஒரு பல்கலைக்கழகத்தில் நுழைவது முதல் பட்டத்தைப் பெறுவது வரையிலான முழு செயல்முறையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) மேற்பார்வையின் கீழ் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இங்கே கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர், தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டங்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வையிடுவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் உயர்கல்வி ஆணைக்குழுவொன்றை (Higher Education Commission) நிறுவுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தேவையான தரவு அமைப்புகளை உருவாக்கி, உலகின் ஏனைய பல்கலைக்கழகங்களுடன் தொடர்புகொண்டு, அவற்றுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்ள வாய்ப்புள்ளது என்றும் அவர் அறிவித்தார்.
இதன் மூலம் இலங்கையில் நிறுவப்படவுள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதா இல்லையா என்பதைத் துல்லியமாகத் தீர்மானிக்க முடியும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரச சார்பற்ற உயர்கல்வி) மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் ஆகியோர் மேலும் கருத்து தெரிவித்தனர்.
மேலும், உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரச்சினைகள், வெளிநாட்டுப் பட்டப் படிப்புகளுக்காக வழங்கப்படும் புலமைப்பரிசில்கள் போன்ற விடயங்கள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.


