வகுப்புகளுக்கான பாடத்திட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல் கடிதம் ஒன்று கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 2026ஆம் ஆண்டு முதல் இந்த புதிய பாடத்திட்ட சீர்திருத்தங்கள் படிப்படியாக பொதுக் கல்வி முறைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இது ஆரம்பப் பிரிவில் 1ஆம் வகுப்புக்கும், இளையோர் இடைநிலைப் பிரிவில் 6ஆம் வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த கல்விச் சீர்திருத்தங்கள் பின்வரும் ஐந்து தூண்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட உள்ளன:
பாடத்திட்ட மேம்பாடு
மனிதவள மேம்பாடு
உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கல்வி நிர்வாக சீர்திருத்தங்கள்
மதிப்பீடு மற்றும் அளவிடுதல்* பொது விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு
அந்த திட்டத்தின்படி, 2026ஆம் ஆண்டில் ஏற்படவுள்ள மாற்றங்கள் பின்வருமாறு:
1ஆம் வகுப்பிலிருந்து ஆரம்பக் கல்வி எவ்வாறு மாறும்? ஆரம்பப் பிரிவின் பாடத்திட்டம் அடிப்படை வாழ்க்கை திறன்களுக்கான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதன்படி தற்போதுள்ள ஆரம்பக் கல்வி கட்டமைப்பிலேயே புதிய பாடத்திட்ட சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள பின்வரும் மூன்று முக்கிய ஆரம்பக் கல்வி கட்டங்களின் கீழ் இது செயல்படுத்தப்படும்:
1 - 2 வகுப்புகள்: முதல் முக்கிய கட்டம்
3 - 4 வகுப்புகள்: இரண்டாவது முக்கிய கட்டம்
5 ஆம் வகுப்பு: மூன்றாவது முக்கிய கட்டம்
இதன்படி, இந்த புதிய ஆரம்பப் பாடத்திட்டம் 9 முக்கிய பொது கற்றல் துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கற்றல் துறைகள் பின்வருமாறு:
தாய்மொழி
ஆங்கில மொழி
இரண்டாவது தேசிய மொழி
கணிதம்
சமயம் மற்றும் விழுமியக் கல்வி
ஆரம்ப அறிவியல் மற்றும் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்
ஒருங்கிணைந்த அழகியல் கல்வி
சுகாதார மற்றும் உடற்கல்வி
இணைப் பாடவிதானச் செயற்பாடுகள்
இந்தக் கற்றல் துறைகள் சமநிலையுடன் கிடைக்கக்கூடிய வகையில், மாணவர்களின் வயது மற்றும் அபிவிருத்தித் தேவைகளுக்கு ஏற்ப உள்ளடக்கம் மற்றும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவுறுத்தல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ஏற்படும் ஒரு விசேட மாற்றம் என்னவென்றால், 5ஆம் வகுப்பில் பாடசாலை நடத்தும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அந்த வகுப்புக்கான பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் பாடசாலை பி.ப. 2.00 மணிக்கு முடிவடையும்.
பாடப்புத்தகங்கள் மற்றும் ஏனைய வசதிகள் 1ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பழைய பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, புதிய பாடத்திட்டத்திற்குரிய தேசிய கல்வி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட செயல்பாட்டுப் புத்தகங்களை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அச்சிடவுள்ளதுடன், அவை எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும்.
இந்த பாடத்திட்டம் செயற்பாடு அடிப்படையிலான பாடத்திட்டம் என்பதால், தற்போதுள்ள வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தி இதை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்த அறிவுறுத்தல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 ஆம் வகுப்புக்கு அறிமுகப்படுத்தப்படும் கிரெடிட்கள் மற்றும் தொகுதிகளைக் கொண்ட புதிய பாடத்திட்டம் இளையோர் இடைநிலை மட்டத்தில் பரந்த மற்றும் சமச்சீரான பாடத்திட்டத்திற்காக 14 பாடங்களைக் கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த 14 கட்டாயப் பாடங்களும் தொகுதிகள் (Modules) மூலம் கற்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பாடங்களைப் பொறுத்து ஒரு தவணைக்கு கற்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.
6ஆம் வகுப்பு முதல் மூன்று புதிய பாடங்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன, அந்த மூன்று பாடங்கள் பின்வருமாறு:
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்
வாழ்க்கைக்கான தொழில்நுட்பம்
தொழில்முனைவு மற்றும் நிதிசார் கல்வியறிவு
இது தவிர, விளையாட்டு மற்றும் சங்கங்களில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
தொகுதி (Module) என்றால் என்ன? தொகுதி என்றால் என்ன என்பது குறித்து இந்த அறிவுறுத்தல் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
"ஒரு தொகுதி என்பது ஒரு பாடம், திறன் அல்லது கருப்பொருள் ஆகியவற்றில் குறிப்பிட்டதொரு விடயத்தை உள்ளடக்கிய, கவனம் செலுத்தப்பட்ட, சுய-உள்ளடக்கத்தைக் கொண்ட கற்றல் அலகாகும். இது கட்டமைக்கப்பட்ட உள்ளடக்கம், செயல்பாடுகள் மற்றும் மதிப்பீட்டின் மூலம் குறிப்பிட்ட கற்றல் விளைவுகளை அடைய வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இது பெரும்பாலும் குறுகிய கால அல்லது கூடுதல் அறிவுறுத்தல்களின்போது பயன்படுத்தப்படுகிறது."
ஒவ்வொரு தொகுதிக்கும் 10 மணிநேர கற்பித்தல் வழங்கப்பட வேண்டும், மேலும் ஒரு தொகுதியை பூர்த்தி செய்த பிறகு மாணவர்கள் ஒரு கிரெடிட்டைப் பெற முடியும்.
அதன்படி, மாணவர்கள் ஒரு பாடசாலை தவணைக்கு முக்கிய பாடங்களில் 30 கிரெடிட்களும், மேலதிக கற்றல் தொகுதிகளில் இருந்து 3 கிரெடிட்களும், மற்றும் மாற்றியமைக்கும் திறன்களுக்கான இரண்டு தொகுதிகளில் இருந்து 2 கிரெடிட்களும் என மொத்தம் 35 கிரெடிட்களைப் பெற வேண்டும்.
6ஆம் வகுப்பு முதல் மாணவர்கள் கற்க வேண்டிய பாடங்கள் என்ன? 2026இல் 6ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள் தங்கள் இளையோர் இடைநிலைக் கல்வியில் (6 - 9 வகுப்புகள் வரை) ஒரு தவணையில் கற்க வேண்டிய பாடங்கள் மற்றும் அவற்றிற்குரிய கிரெடிட்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
தாய்மொழி (03)
ஆங்கில மொழி (03)
இரண்டாவது தேசிய மொழி (01)
கணிதம் (03)
விஞ்ஞானம் (03)
சுகாதார மற்றும் உடற்கல்வி (02)
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (02)
வாழ்க்கைக்கான தொழில்நுட்பம் (02)
புவியியல் (01)
வரலாறு (02)
குடியுரிமைக் கல்வி (01)
சமயம் மற்றும் விழுமியக் கல்வி (02)
அழகியல் கல்வி (02)
தொழில்முனைவு மற்றும் நிதிசார் கல்வியறிவு (02)
இந்தக் கல்விப் பாடங்களுடன் 'விளையாட்டு, கழகங்கள் மற்றும் சங்கங்களில் பங்கேற்பு'க்காக 02 கிரெடிட்கள் வழங்கப்படும். பங்கேற்பு மட்டுமே இதற்கு போதுமானது.
மேற்கண்ட 30 கிரெடிட்களுக்கு மேலதிகமாக, அத்தியாவசியப் பாடங்களில் மூன்றிற்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு மேலதிக கற்றல் தொகுதி என மூன்று தொகுதிகளைக் கற்க வேண்டும், இதற்காக மாணவர்கள் ஒரு தொகுதிக்கு ஒரு கிரெடிட் வீதம் 3 கிரெடிட்களைப் பெற வேண்டும்.
அதன் பிறகு, மாற்றியமைக்கும் திறன்கள் (Transformative Skills) என்று அழைக்கப்படும் இரண்டு தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து இரண்டு கிரெடிட்களைப் பெற வேண்டும்.
அந்த மாற்றியமைக்கும் திறன்கள் தொகுதிகள் பின்வருமாறு:
இலக்கிய இரசனை
ஊடகப் படிப்பு (நிறுவனப் பயிற்சியுடன்)
சேவைத் துறை ஆய்வுகள்
உலகளாவிய ஆய்வுகள்
சமூக சேவை
சுகாதாரம் மற்றும் விளையாட்டு
அழகியல் இரசனை
தொழில்முறை தயார்நிலைக்கான அடித்தளம்
டிஜிட்டல் குடியுரிமை
மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மேலதிக கற்றல் தொகுதிகள் மற்றும் மாற்றியமைக்கும் திறன்கள் தொகுதிகள் எவை என்பது குறித்து 2026 இல் 6ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு 5ஆம் வகுப்பின் முடிவில் அறிவிக்கப்பட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வகுப்பு நேரங்கள் இந்த புதிய பாடத்திட்டத்தைக் கற்பிக்கும் பணிகளுக்காக தற்போதுள்ள 40 நிமிட காலப்பகுதி 50 நிமிடங்களாக நீட்டிக்கப்படுவதுடன், ஒரு நாளில் உள்ள காலப்பகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக குறைக்கப்படும்.
அத்துடன், பாடசாலை நேரத்தை தற்போதுள்ள நேரத்தை விட மேலும் 30 நிமிடங்கள் அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளதுடன், இது 7ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கும் பொருந்தும்.
மாணவர்களுக்கான பழைய பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, புதிய பாடத்திட்டத்திற்குரிய தேசிய கல்வி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தொகுதிகள், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் அச்சிடப்பட உள்ளன, அவை எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும்.
யோசனை செய்யப்பட்ட 15 பாடங்களில் 12 பாடங்களுக்கு தற்போது கற்பிக்கும் ஆசிரியர்கள் உள்ளனர் என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 3 பாடங்களுக்கு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான திட்டங்களைத் தயாரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்ட கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


