உளவுப் பிரிவு அதிகாரிகளைப் பயன்படுத்தி கண்காணித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழ் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டாளர்களை அழைத்து, பொலிஸார் தடை உத்தரவுகளை பிறப்பிப்பதாகவும் வடக்கிலிருந்து செய்திகள் வெளியாகின்றன.
தமிழ் மக்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக பகிரங்கமாகக் கூறிக்கொண்டு, அரசாங்கம் உளவுப் பிரிவு அதிகாரிகளைப் பயன்படுத்தி தமிழ் மக்களை அச்சுறுத்தி வருவதாக, அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் குழுவின் தலைவர் புஷ்பராஜ் துஷாந்தன் குற்றம் சாட்டுகிறார்.
"மாவீரர்களை நினைவுகூர அரசாங்கம் அனுமதி அளிப்பதாகக் கூறினாலும், தடைகள் போடும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. நாங்கள் மாவீரர் துயிலுமில்லங்களைப் சுத்தம் செய்யும்போது கூட, எமது செயற்பாட்டாளர்கள் உளவுப் பிரிவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதை நாங்கள் அறிந்தோம்.
"அதாவது, நாங்கள் போகும் இடமெல்லாம் உளவுப் பிரிவினர் இருக்கிறார்கள். துயிலுமில்லங்களைச் சுத்தம் செய்யும்போது 10 முதல் 15 உளவுப் பிரிவினர் அங்கே இருக்கிறார்கள். நான் கல்முனையிலிருந்து திருக்கோவிலுக்குச் சென்று திரும்பி வரும்வரை என்னைப் பின் தொடர்கிறார்கள்.
"நான் கஞ்சிகுடிச்சாறுக்குச் சென்று வரும்போது அட்டாளைச்சேனை வரை மோட்டார் சைக்கிள்களில் உளவுப் பிரிவினர் என்னைப் பின் தொடர்ந்தனர். நான் அதைப் பார்த்தேன். வெளியில் அரசாங்கம் நல்லதென்றும், தமிழ் மக்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதென்றும் காட்டிக்கொண்டு, அவர்கள் உளவுப் பிரிவினரை அனுப்பி எங்களையும் தமிழ் மக்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்."
தமிழ் மாவீரர்களை நினைவுகூரும் ஆண்டு நிறைவு நவம்பர் 27 அன்று இடம்பெறவுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இந்த நாட்களில் துயிலுமில்லங்களைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் வடக்கில் மாவீரர் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு விடுதலைப் புலிகளுக்கு நினைவுகூரல் அல்லது அதற்கு ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றால் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று நவம்பர் 18 அன்று அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஒரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, அவ்வாறு நடந்தால் அதற்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
"எந்தவொரு இடத்திலும் தமது இறந்த உறவினரை நினைவுகூர ஒரு குடிமகனுக்கு உள்ள உரிமையை ஏற்றுக்கொள்கிறோம், ஆனால், அதற்குப் பின்னால் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. அதற்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்படும்."
யாழ்ப்பாணம், உடுத்துறை மாவீரர் நினைவேந்தல் குழுவின் உறுப்பினர் ஒருவர் அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது, தன்னை மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த அதன் பொறுப்பதிகாரி, மாவீரர் நினைவேந்தலை நடத்த வேண்டிய விதம் குறித்து ஒரு தொடரான நிபந்தனைகளை விதித்ததாகக் கூறினார்.
"பொலிஸ் பொறுப்பதிகாரி, நாங்கள் மாவீரர் பாடல்களைப் போட முடியாது என்றும், சீருடை அணிந்த புகைப்படங்களை வைக்க முடியாது என்றும், கார்த்திகைப்பூவைப் பயன்படுத்த முடியாது என்றும், திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்தலாம் என்றும், இந்த நிபந்தனைகளைப் பின்பற்றாவிட்டால் தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்."


