மாகாணங்களில் நிலவும் மழை நிலை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 mm-க்கும் அதிகமான கனமழையும், நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 mm-க்கும் அதிகமான ஓரளவிற்கு கனமழையும் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு சுமார் 40 கி.மீ வேகத்தில் இடைக்கிடையே ஓரளவிற்கு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


