திஸாநாயக்க, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் உரையாற்றுகையில் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அங்கு நாம் ஒருவரையொருவர் மிஞ்சிச் செல்லும் பயணத்திற்குப் பதிலாக, ஒருவரோடொருவர் கைக்கோர்த்துச் செல்லும் பயணத்தையே மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வு நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் ஆரம்பமானது. ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இலங்கை நேரப்படி இன்று (25) மு.ப 12.45க்கு மாநாட்டில் உரையாற்றினார்.
காசா பகுதியில் தொடரும் பயங்கரமான அனர்த்தம் குறித்து இங்கு கவலை தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்துத் தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் இரு தரப்பினரும் உடனடியாகப் போர் நிறுத்தத்திற்குச் செல்ல வேண்டும் எனவும், தடையின்றி அனைத்து மனிதாபிமான உதவிகளும் அனுப்பப்பட வேண்டும் எனவும், அனைத்துத் தரப்பினரினதும் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் குரல் கொடுப்பதாக வலியுறுத்தினார். இந்தப் பயங்கரமான படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவர கடுமையாக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் விழுமியங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை அனைவரும் நாட வேண்டும் எனவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
மேலும், பல உலகளாவிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ள வறுமை குறித்து தனது உரையில் விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி மற்றும் வறுமையை ஒரு உலகப் பேரழிவாகக் கருதிச் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ள உலகளாவிய போதைப்பொருள் பிரச்சினையை ஒழிப்பதற்காக இலங்கை எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகள் குறித்தும் இங்கு எடுத்துரைத்த ஜனாதிபதி, உலக சுகாதாரம், ஜனநாயகம், அரசியல் மற்றும் ஒட்டுமொத்தமாக உலகின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் அபாயத்தை ஒழிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்த இணையுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கடத்தல்காரர்களுக்கு எதிராகச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துதல், அத்தகைய கடத்தல்காரர்கள் தத்தமது நாடுகளுக்குள் இடம்பெயர்வதற்கான வாய்ப்புகளைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிக்கும் நிலையங்களை உருவாக்குதல் போன்ற விடயங்கள் குறித்து ஜனாதிபதி இங்கு உலகத் தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
சமூகத்தின் பரந்த அளவிலான அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாக அமையும் ஊழல், அபிவிருத்திக்குத் தடையாகவும், ஜனநாயகத்திற்கும் உலகின் நல்வாழ்விற்கும் ஒரு தீர்க்கமான அச்சுறுத்தலாகவும், வறுமைக்குக் காரணமாகவும் அமைந்துள்ளது என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு கடினமான படியாக இருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்காக இலங்கை அதனை ஆரம்பித்துள்ளது எனவும், ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் எனவும் முன்மொழிந்தார்.
இருளுக்குப் பதிலாக ஒளியின் பாதையைத் தேர்ந்தெடுத்த இலங்கை மக்கள் இன்று ‘செழிப்பான நாடு - அழகான வாழ்க்கை’ என்ற நடைமுறைச் சாத்தியமான தொலைநோக்கைச் சுற்றி ஒன்றிணைந்துள்ளனர் என இங்கு மேலும் தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, இந்த வரலாற்று வெற்றியைப் பயனளிக்கச் செய்வதற்காக ஊழலற்ற ஒழுக்கமான ஆட்சி, வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தூய்மையான நாடு ஆகிய பிரதான துறைகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும், அதற்கு இணையாக கல்வி மற்றும் சுகாதாரம் மீது தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும், அவை அனைத்தையும் படிப்படியாக வெற்றி கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை கீழே தரப்பட்டுள்ளது.

தலைவர் அவர்களே, கௌரவமான அழைப்பாளர்களே, மாண்புமிகு பிரதிநிதிகளே,
உலக நாடுகளிடையே நியாயமான மற்றும் நீடித்த சமாதானத்தை நிறுவி, பேணுவதற்கான உன்னத நோக்கத்தை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட இந்த விசேட அமைப்பின் 80வது அமர்வின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட, ஐரோப்பாவின் இதயத்தில் அமைந்துள்ள அற்புதமான ஜேர்மனியின் அதிமேதகு அன்னலேனா பேர்போக் அம்மையாருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், உலகையே வியப்பில் ஆழ்த்தும் புவியியல் மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைக் கொண்ட கமரூனின் அதிமேதகு பிலிமோன் யாங் முன்னாள் தலைவர் வழங்கிய தலைமைத்துவத்திற்காக இலங்கை தனது பாராட்டுகளைத் தெரிவிக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.
சமாதானம், ஜனநாயகம் நிறைந்த அழகான உலகிற்காக எட்டு தசாப்தங்களாக அர்ப்பணித்த ஒரு அமைப்பின் பலதரப்புப் பயணத்தையும், எதிர்காலத்தையும் பற்றித் திட்டமிடும் இந்த விசேட சந்தர்ப்பத்தில், இலங்கையின் ஜனாதிபதியாக முதல் முறையாக இந்த கௌரவமான சபையில் உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
நீங்கள் நாம் ஒவ்வொருவரும் இந்த உலகின் வெவ்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்துள்ள அந்தந்த நாட்டு மக்களின் பிரதிநிதிகள் ஆவோம். எனது நாடான இலங்கை மற்றும் ஏனைய ஒவ்வொரு நாட்டு மக்களும் எம்மிடம் ஒப்படைத்த வரலாற்றுப் பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் இந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழும் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. அந்த அனைத்துத் தீர்மானங்களும் முடிவுகளும் உலகின் எதிர்கால இருப்பிற்காக ஒரு தீர்க்கமான தலையீட்டைச் செய்கின்றன.
மனித நாகரிகம் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை எதிர்கொள்ளும் மிகவும் கடுமையான துயரமாக வறுமையை அறிமுகப்படுத்தலாம். அந்த மாபெரும் அனர்த்தத்தின் காரணமாக உருவான மேலும் சில கடுமையான பிரச்சினைகள் எமக்கு முன்னால் இருண்ட துன்பத்தை உருவாக்கியுள்ளன. அது குறித்து இந்த விசேட மாநாட்டின் கவனத்தை ஈர்ப்பது அவசியம் என எனது மனசாட்சி உரக்கக் கூறுகிறது. பெரும்பாலும் இவை அனைத்தும் உங்கள் மனசாட்சியையும் அதிகமாகவோ குறைவாகவோ பாதிக்கும் என நான் நினைக்கிறேன்.
மாண்புமிகு பிரதிநிதிகளே, உலகின் பெரும்பாலான நாடுகளில் பல நூற்றாண்டுகளாக அனுபவித்து வரும் முடிவற்ற மற்றும் மிகவும் வேதனையான போராட்டமாக வறுமையைக் குறிப்பிடலாம். அது பல்வேறு வடிவங்களில் வரும் ஒரு கொடிய எதிரியாகும். நாம் இந்த மாநாட்டிற்காகக் கூடியிருக்கும் இந்தத் தருணத்திலும், நான் உட்பட இந்த ஒவ்வொரு பிரதிநிதியின் நாடுகளிலும் அதிகமாகவோ குறைவாகவோ குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குழந்தைகள் பசியுடன் இருக்கிறார்கள். அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கற்கும் உரிமை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை மனித உரிமையாகும். ஆனால், இல்லாமை, வறுமை காரணமாக இந்த உரிமை மீறப்படும் இலட்சக்கணக்கான குழந்தைகள் உலகம் முழுவதும் உள்ளனர்.
தொழில்நுட்பம் நிறைந்ததாகப் பெருமை பேசும் உலகில் பாடசாலைகள் இல்லாத குழந்தைகள் இருப்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமான நிலை? கல்வியே ஒவ்வொரு சிறந்த தேசத்தையும் கட்டியெழுப்பும் அடித்தளமாகும். எதிர்கால உலகின் இருப்பைத் தீர்மானிக்கும் பிரதான காரணியாகும். கல்விக்கான முதலீட்டை உலகின் முன்னேற்றத்திற்கான முதலீடாக நாம் கருதுகிறோம். பல அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வறுமையை எதிர்கொள்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்குக் கடன் சுமை தொடர்ச்சியாகத் தடையாக உள்ளது. பொதுவாக, குறைந்த வருமானம் பெறும் நாடுகள் சுகாதாரம் அல்லது கல்விச் சேவைகளுக்காகச் செலுத்துவதை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான நிதியை நிகர வட்டி செலுத்துவதற்காக ஒதுக்கீடு செய்கின்றன. குடிமக்களாகவும் நாடுகளாகவும் கடன் பொறிகளில் சிக்கியுள்ளோம். இந்த நிலைமைக்குச் சாதகமான தீர்வு தேவைப்படுகிறது. நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலில் எவரையும் கைவிட மாட்டோம் எனவும், முதலில் பின்தங்கியிருப்பவர்களைச் சென்றடைவோம் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இன்று உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் மிகப் பெரிய உலகளாவிய சவால் வறுமையை முடிவுக்குக் கொண்டுவரும் சவால் என நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலில் அடையாளம் காணப்பட்டுள்ளது. 1995இல் கோபன்ஹேகனில் நடைபெற்ற சமூக அபிவிருத்திக்கான உலக மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்க்கமான முடிவை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். ஆனால், எதிர்பாராத போர்கள், அரசியல் குழப்பங்கள் மற்றும் உலகையே புயலில் சிக்க வைத்த கொவிட் பெருந்தொற்று காரணமாக இலட்சிய நிகழ்ச்சி நிரல் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளது. எனவே, செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி, வறுமை ஆகியவற்றை உலகப் பேரழிவாகக் கருதிச் செயற்பட வேண்டும்.
கௌரவத் தலைவர் அவர்களே, கௌரவமான விருந்தினர்களே, இந்த அற்புதமான கிரகத்தை ஸ்திரமற்ற தன்மைக்கும், குழப்பத்திற்கும் உள்ளாக்கும் நவீன பிரச்சினையாக போதைப்பொருள் மற்றும் அதனுடன் இணைந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை அடையாளம் காணலாம். இதனை ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் 2025 உலக போதைப்பொருள் அறிக்கை கூட உறுதிப்படுத்தியுள்ளது. உலகளாவிய போதைப்பொருள் பிரச்சினை உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ளது. நாளுக்கு நாள் போதைப்பொருள் மற்றும் அது சார்ந்த உற்பத்திகள் உலகளாவிய சந்தையை சாதனை அளவில் ஆக்கிரமித்துள்ளன. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதன் மூலம் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பல உலக நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளன.
இவற்றுடன் தொடர்புடைய குழுக்கள், அரசுகளை இரையாக மாற்றி வருகின்றன. இந்த அனர்த்தம் உலக சுகாதாரம், உலக ஜனநாயகம், உலக அரசியல் மற்றும் இறுதியாக உலகின் நல்வாழ்வுக்கு எதிரான ஒரு பெரும் போக்காக மாறியுள்ளது. இந்த மாபெரும் அனர்த்தத்தை ஒழிப்பதற்காக இலங்கையில் நாம் சாதகமான வேலைத்திட்டத்தை அமுல்படுத்தி வருகிறோம். இந்த அபாயத்தை ஒழிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்த நான் உங்களை மரியாதையுடன் அழைக்கிறேன். இந்தக் கடத்தல்காரர்களுக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்துதல், அத்தகைய கடத்தல்காரர்கள் தத்தமது நாடுகளுக்குள் இடம்பெயர்வதற்கான வாய்ப்புகளைத் தடுத்தல், இவற்றுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிக்கும் நிலையங்களை உருவாக்குதல் போன்ற விடயங்களை இந்தத் தருணத்தில் நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்
கௌரவத் தலைவர் அவர்களே, கௌரவமான விருந்தினர்களே, ஊழல் என்பது சமூகத்தின் பரந்த அளவிலான அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாக அமையும் ஒரு துரோகமான கொள்ளைநோய் என நாம் நம்புகிறோம். ஊழல் அபிவிருத்திக்குத் தடையாகும். ஜனநாயகத்திற்கும் உலகின் நல்வாழ்விற்கும் ஒரு தீர்க்கமான அச்சுறுத்தலாகவும், வறுமைக்குக் காரணமாகவும் உள்ளது என்பது எமது நிலைப்பாடாகும். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது. ஆனால், ஊழலுக்கு எதிராகப் போராடாமல் இருப்பது அதைவிட ஆபத்தானது என்பதை நான் உங்களுக்கு மிகவும் மரியாதையுடன் நினைவூட்டுகிறேன்.
1948இல் மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனம் உலக மனித சமூகத்திற்கு ஒரு பெரிய வெற்றியைக் கொண்டு வந்தது. மனித நாகரிகத்தின் பல்வேறு வெற்றிகள் ஒரே இரவில் கிடைக்கவில்லை. அவை அனைத்தும் அளவற்ற தியாகத்தின் மற்றும் விடாமுயற்சியின் விளைவுகளாகும். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு கடினமான படியாகும். ஆனால், நாம் அந்தப் படியை எடுக்க வேண்டும். நாம் வைக்கும் முதல் படி கடினமாக இருக்கலாம். ஆனால், நாம் துணிச்சலுடன் வைக்கும் படி சரியானதாக இருந்தால், அந்தப் படிக்குப் பின்னால் இன்னும் ஆயிரம் படிகள் எம்முடன் வரும் என நான் நம்புகிறேன். 'துணிச்சலாக இருங்கள், மீதமுள்ள அனைத்தும் தானாகவே நடக்கும்' என ஜவஹர்லால் நேரு கூறியதை இந்தத் தருணத்தில் நான் நினைவுகூர்கிறேன்.
நான் கிட்டத்தட்ட 22 மில்லியன் மக்கள் வாழும் ஒரு சிறிய பிரகாசமான தீவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இலங்கையின் மக்கள் தொகை கிட்டத்தட்ட முழு உலக மக்கள் தொகையில் 0.3% ஆகும். எங்கள் நாட்டில் உள்ள மக்கள் தொகை அளவிலும் எண்ணிக்கையிலும் சிறியது என்பது உண்மை. ஆனால், எங்கள் நாட்டிலும், உலகிலும் எதிர்கால சந்ததியினருக்காக ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என நான் முன்மொழிகிறேன்.
நீங்கள் எந்த அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், இந்த ஒவ்வொரு பிரதிநிதியும் போரை நிராகரிக்க என்னுடன் இணைவார்கள் என நான் நம்புகிறேன். போரை விரும்பும் ஒரு தேசம் உலகில் இல்லை. எங்காவது எப்படியாவது ஒரு போர் அல்லது மோதல் ஏற்பட்டாலும், அதன் மூலம் ஏற்படுவது ஒரு துயரம் என்பதை நாம் அறிவோம். இந்தத் தருணத்திலும் அந்தத் துயரத்தின் வலியை உலகின் பல இடங்களில் அனுபவித்து வருகிறார்கள்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் போரின் கசப்பான அனுபவங்களைப் பெற்ற ஒரு நாடு என்ற வகையில், அதன் அழிவுகரமான தன்மை பற்றி நாம் நன்கு அறிவோம். போரினால் இறந்த ஆயிரக்கணக்கானோரின் நினைவுச் சின்னங்களுக்கு அருகில் வந்து அவர்களின் பெற்றோர், பிள்ளைகள், மனைவிகள் கைகளைக் கூப்பி எழுப்பும் வேதனையான மன்றாட்டுகளைக் காணும் எவரும் போரைப் பற்றிய ஒரு கனவைக் காணக் கூட விரும்ப மாட்டார்கள். அந்த வேதனையான காட்சியை நாம் கண்களால் கண்டிருக்கிறோம். மோதல்களால் மக்கள் அனுபவிக்க நேரிட்டுள்ள துயரம் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டவில்லை என்றாலும், பல சமயங்களில் சர்வதேச சமூகம் மில்லியன் கணக்கானோரின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவரத் தவறிய ஒரு வெறும் பார்வையாளராக மாறியுள்ளது.
குழந்தைகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களை பணயமாகக் கையாள்வது சந்தர்ப்பவாத அதிகார அரசியலின் ஒரு துயரமாகும். தனது அதிகாரத்தை அதிகரித்துக் கொள்ள வேறு யாருடைய வாழ்க்கையிலும் தலையிடவும், துன்புறுத்தவும் யாருக்கும் உரிமை இல்லை. ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது உயிர்களைப் பாதுகாப்பதே தவிர, உயிர்களை அழிப்பதல்ல.
காசா பகுதியில் தொடரும் பயங்கரமான அனர்த்தம் எமது தீவிர கவலைக்குக் காரணமாகியுள்ளது. குறிப்பாக, காசா பகுதி ஒரு வேதனையான, துயரமான திறந்தவெளிச் சிறை முகாமாக மாறியுள்ளது. அப்பாவி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் ஓலம் எதிரொலிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்துத் தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் இரு தரப்பினரும் உடனடியாகப் போர் நிறுத்தத்திற்குச் செல்ல வேண்டும் எனவும், தடையின்றி அனைத்து மனிதாபிமான உதவிகளும் அனுப்பப்பட வேண்டும் எனவும், அனைத்துத் தரப்பினரினதும் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் நாம் குரல் கொடுக்கிறோம். இந்தப் பயங்கரமான படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் கடுமையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பலஸ்தீன மக்களுக்கு ஒரு அரசுக்கான மறுக்க முடியாத உரிமையை நாம் அங்கீகரிக்கிறோம். அதேபோல், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன மக்கள் ஆகிய இரு தரப்பினரினதும் சட்டபூர்வமான பாதுகாப்பு மற்றும் மனிதப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட வேண்டும். 1967 எல்லைகளின் அடிப்படையில், இரு அரசுகள் அருகருகே நிலவுவதற்கான அடித்தளத்தை வழங்கும் ஐக்கிய நாடுகள் தீர்மானங்களுக்கு இணங்க, நியாயமான மற்றும் நிரந்தரமான தீர்விற்காக இணைய வேண்டும். பயனற்ற போர் காரணமாக மில்லியன் கணக்கான உலக மக்களின் துன்பங்களுக்கு முன்னால் வெறும் பார்வையாளராக இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய ஒரு தீர்க்கமான தருணத்திற்கு நாம் வந்துள்ளோம். மனித இனத்திற்குள் உலகைத் துன்புறுத்தும் போர்ச் சூழ்நிலை, மதவெறி மற்றும் இனவாதம் காரணமாகியுள்ளது.
அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டாலும், இனவாதத்தின் விஷம் இன்னும் ஆங்காங்கே உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டும். தீவிரவாத மற்றும் இனவாதக் கருத்துக்கள் கொடிய தொற்று நோய்களைப் போல கொடூரமானவையாக மாறியுள்ளன. நகைப்புக்கும் வியப்பிற்கும் உரிய விடயம் என்னவென்றால், இவ்வளவு முன்னேறிய உலகிலும் இந்த இனவாத, வர்க்கவாதக் கூச்சல்கள் மேலும் சாம்பலுக்குக் கீழே தீப்பொறிகளைப் போல எஞ்சியிருக்கின்றன. அதன் பயங்கரமான நிலை என்னவென்றால், மிகவும் தீர்க்கமான முறையில் பிரபஞ்சத்தின் நல்வாழ்வுக்கு எதிராகச் சந்தர்ப்பவாதமாக அந்தத் தீப்பொறிகள் அவ்வப்போது பெரும் தீப்பிழம்புகளாக மாற்றப்படுகின்றன.
உலக சமாதானக் குடியேற்றங்களை உருவாக்கும் உன்னத சமாதான யாத்ரீகர்களாக மாறுவோம்
ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் விழுமியங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை நாம் நாட வேண்டும். மில்லியன் கணக்கான குழந்தைகள் பசியால் இறக்கும் உலகில், நாம் பில்லியன்களை ஆயுதங்களுக்காகச் செலவிடுகிறோம். முறையான சுகாதார வசதிகள் இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் மரணத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, பயனற்ற போருக்காகப் பல கோடிகளைச் செலவிடுகிறோம். கல்வி என்ற சிறகுகளைப் பெற முடியாமல் இலட்சக்கணக்கான குழந்தைகள் பெருமூச்சு விடும்போது, நிலங்களை ஆக்கிரமிக்க மில்லியன்களைச் செலவிடுகிறோம். உண்மையில், இந்த உலகின் ஒவ்வொரு அங்குலமும் சமாதானக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டால், அந்த உலகம் ஒரு அற்புதமான உலகமாக மாறும் என நாம் உறுதியாக நம்புகிறோம். இந்த மாநாட்டில் இணைந்த நாம் அனைவரும் உலக சமாதானக் குடியேற்றங்களை உருவாக்கும் உன்னத சமாதான யாத்ரீகர்களாக மாறுவோம் என நான் முன்மொழிகிறேன்.
ஒரு வரலாற்றுத் தேர்தலில் இலங்கை மக்கள் பல நூற்றாண்டுகளாகக் கண்ட ஒரு கனவிற்காகத் தீர்ப்பு வழங்கியதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அதன் மூலம் உருவான சட்டமன்றம் பன்முகத்தன்மை மற்றும் வண்ணமயமானது. ஒருபுறம், நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் அரசாங்கத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்தனர். மறுபுறம், பார்வைக் குறைபாடுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பெண்கள் மற்றும் ஏனைய இனங்களின் பிரதிநிதித்துவம் ஒரு வரலாற்று மைல்கல்லை உருவாக்கியது. நாடாளுமன்றத்தில் காணப்படும் இந்தப் பன்முகத்தன்மை இலங்கையின் ஆட்சி முறையில் இனப் பன்முகத்தன்மையை உறுதி செய்வதுடன், அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை மீண்டும் வலுப்படுத்துகிறது.
அதேபோல், மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் மக்களுக்காகச் சேவை செய்பவர்களே தவிர, முறையற்ற சலுகைகளைப் பெறுபவர்கள் அல்ல என்பதற்கு நாம் ஒரு முன்மாதிரியை வழங்கியுள்ளோம். மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு நாட்டை மற்றும் மக்களை அபிவிருத்தி செய்வதே தவிர, தனிப்பட்ட முறையில் தங்களை அபிவிருத்தி செய்வதல்ல என நாம் நம்புகிறோம்.
இருளுக்குப் பதிலாக ஒளியின் பாதையைத் தேர்ந்தெடுத்த எங்கள் நாட்டு மக்கள் ‘செழிப்பான நாடு - அழகான வாழ்க்கை’ என்ற நடைமுறைச் சாத்தியமான தொலைநோக்கிற்கு மக்கள் ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளனர். இந்த வரலாற்று வெற்றியைப் பயனளிக்கச் செய்வதற்காக ஊழலற்ற ஒழுக்கமான ஆட்சி, வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தூய்மையான நாடு ஆகிய பிரதான துறைகள் மீது எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு இணையாக, கல்வி மற்றும் சுகாதாரம் மீது நாம் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். அவை அனைத்தையும் படிப்படியாக நாம் வெற்றி கொண்டு வருகிறோம்.
தற்போது, டிஜிட்டல் ஜனநாயகம் எமது புதிய இலக்காகும். உலகின் முன்னால் உள்ள சவால் என்னவென்றால், ஒவ்வொரு நபருக்கும் மற்றும் ஒவ்வொரு அரசுக்கும் டிஜிட்டல் யுகத்தின் வாய்ப்புகளை அணுக முடியும் என்பதை உறுதி செய்வதாகும். நாம் வெற்றி பெற்றால், தொழில்நுட்பத்தை அணுகுவதற்கான வாய்ப்புகள் திறக்கப்படுவதையும், அபிவிருத்தி வேகமடைவதையும், ஆட்சி வலுப்பெறுவதையும் தடுக்க முடியாது. ஆனால், அவ்வாறு செய்ய நாம் தவறினால், தொழில்நுட்பத்தின் சமத்துவமின்மை மற்றும் பாதுகாப்பின்மை மற்றும் அநீதி ஏற்படுவதற்கு வழிவகுக்கும் மற்றொரு சக்தியாக அது மாறும் என நாம் நம்புகிறோம்.
டிஜிட்டல் கருவிகளை அணுக முடியாத அரசுகளிடையே டிஜிட்டல் இடைவெளி தெளிவாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அதைவிடவும் பரந்த இடைவெளி உருவாகி வருகிறது. இலங்கை உட்பட தெற்காசியாவின் பல நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் அபிவிருத்தியின் ஒரு கருவியாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்புக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு சிறந்த உலகை உருவாக்குவோம்
நாம் ஒரு சிறந்த உலகை, மனிதனின் நிரந்தர கௌரவத்தை மதிக்கும் ஒரு உலகைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த மாநாட்டின் உறுப்பினர்களான நீங்கள் ஒரு சிறந்த உலகை உருவாக்கும் கட்டிடக் கலைஞர்களாக இருக்க வேண்டும். "எங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில்" என 1945இல் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட சாசனத்தில் கையெழுத்திட்டபோது அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமன் கூறியது நினைவுக்கு வருகிறது. நாம் பயத்தினாலோ அல்லது ஒரு கட்டுப்பட்டினாலோ செயற்படக் கூடாது, நம்பிக்கையை முன்னிறுத்தியே செயற்பட வேண்டும். ஒரு சிறந்த உலகை உருவாக்க முடியும் மற்றும் அது மிகவும் நெருக்கமாக உள்ளது என்ற எதிர்பார்ப்பை முன்னிறுத்தியே செயற்பட வேண்டும். உலகைப் பேரழிவிற்கு இட்டுச் செல்வதற்குப் பதிலாக, எதிர்கால சந்ததியினருக்காக ஒரு பாதுகாப்பான உலகை உருவாக்க இதய சுத்தியுடன் அர்ப்பணித்த ஒரு தலைமுறையாக மாற இந்த மாநாட்டில் நாம் உறுதியெடுப்போம்.
இறுதியாக, எனக்கு எனது நாட்டைப் பற்றி ஒரு நம்பிக்கைக் கனவு இருக்கிறது. உங்களுக்கு உங்கள் நாடுகளைப் பற்றி ஒரு நம்பிக்கைக் கனவு இருக்கிறது. எனது நாட்டு மக்கள் மகிழ்ச்சி நிறைந்த செழிப்பான வாழ்க்கையை உரிமையாக்கிக் கொடுப்பதே எனது ஒரே கனவாகும். உங்கள் நாட்டு மக்களுக்கும் அத்தகைய வாழ்க்கையை உரிமையாக்கிக் கொடுப்பது உங்கள் கனவு என நான் நம்புகிறேன். அந்த அனைத்துக் கனவுகளுக்காகவும் நாம் செல்ல வேண்டியது ஒருவரையொருவர் மிஞ்சிச் செல்லும் பயணத்திற்குப் பதிலாக, ஒருவரோடொருவர் கைக்கோர்த்துச் செல்லும் பயணமாகும் என நாம் நம்புகிறோம்.
ஆரோக்கியமான பூமியில் சமாதானம், கௌரவம் மற்றும் சமத்துவத்திற்காக அர்ப்பணிப்போம் என ஐக்கிய நாடுகள் சபையின் தாரக மந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகை உண்மையாகச் சரிசெய்பவர்களாக மாறுவோம் என நான் உங்களை மரியாதையுடன் அழைக்கிறேன்.
மிக்க நன்றி.


