ஒவ்வொரு நாளும் நீங்கள் பணிக்கு செல்லும்போது, நாம் மீண்டும் உயிருடன் திரும்பி வருவோமா என்ற அச்சம் இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

ராமேஸ்வர மீனவர்களின் அன்றாட நிலையே இதுதான்.

"வீட்டில் இருந்து கிளம்பும்போது ஒவ்வொரு முறையும், உயிருடன் திரும்பி வந்து விடுவோம், கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்புவேன். ஆனால், நான் வீடு திரும்பும் வரை அது நிச்சயம் இல்லை. வீட்டிலும் அவர்கள் பயந்து கொண்டேதான் இருப்பார்கள். இப்படித்தான் என் வாழ்க்கை நகர்கிறது. பயம் எங்களுக்கு பழகிப் போய்விட்டது" என்கிறார் ராமேஸ்வரத்தை சேர்ந்த சபரி.

மீனவர்

மீன்பிடிக்க செல்வது அவர்கள் தொழில். அவர்களின் வாழ்வாதாரம். ஆனால், அதனை சுமூகமாக செய்ய முடியாத நிலை.

"உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தினம் தினம் செத்துப் பிழைப்பது எங்கள் வாழ்க்கையாகிவிட்டது" என்கிறார் அங்குள்ள மீனவர் ஒருவர்.

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சிறை பிடிப்பு, மீனவர்களின் படகுகளை பிடித்த வைத்த இலங்கை என மீனவர்கள் பிரச்சினை குறித்து நாம் பல ஆண்டுகளாக செய்திகளில் பார்த்து வருகிறோம்.

ஆனால், அவர்கள் படும் துன்பங்களை பொதுமக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்த பிபிசி தமிழ் குழு ராமேஸ்வரம் பயணித்தது. மீனவர்களுடன் படகில் பிபிசி குழுவும் கடலுக்குள் சென்றது.

"பயமே எங்கள் வாழ்க்கை"

"முன்பெல்லாம் காலை 6 மணிக்கு மீன் பிடிக்க சென்று, மறுநாள் காலை 6 கரை திரும்புவோம். ஆனால் இப்போது மாலை 3 மணிக்கு சென்றுவிட்டு மறுநாள் காலை 5-6 மணிக்கு திரும்புகிறோம். இலங்கை பிரச்சினையால் இந்த நிலை" என்கிறார் நாம் பயணித்த படகை இயக்கிய சபரி.

காலை வேளையில் சென்றால் இலங்கை கடற்படை கண்ணில் மாட்டிவிடுவோமோ என்று அச்சமாக இருக்கும். மாலை அந்தப்பக்கம் அவ்வளவு ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதனால் 24 மணி நேர மீன்பிடிப்பை விடுத்து, இவ்வாறு செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

பிபிசி குழு

"ஒரு வேளை இலங்கை கடற்படையிடம் மாட்டிக் கொண்டுவிட்டால், விரைவாக போட்டை திருப்பி இந்தியா பக்கம் வந்துவிட வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அவர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சில நேரத்தில் சுட்டாலும் சுட்டுவிடுவார்கள்" என்று சபரி கூறும் போது அந்த மக்களின் அச்சத்தை நம்மால் உணர முடிகிறது.

பிபிசி குழு

" நாங்கள் இந்தியா பக்கத்தில் இருந்தும் இலங்கை கடற்படையினர் எங்களை பிடித்தாலும், நாங்கள் யாரும் பேசமுடியாது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான். கையில் துப்பாக்கி வைத்திருப்பார்கள். அடித்தாலும் மிதித்தாலும் வாங்கித்தான் ஆக வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

"குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிற வேறு வழியில்லை"

சபரியை தொடர்ந்து அந்தப் படகில் பயணம் செய்த சுரேஷ் என்ற மீனவரை சந்தித்துப் பேசினோம். இலங்கை கடற்படையிடம் தனது படகை பறிகொடுத்த அவர், தற்போது தன் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கிறார்.

சுரேஷ்

சுரேஷ்

"கடந்த மே மாதம்தான் புது படகு எடுத்தேன். 45 லட்சம் ரூபாய் ஆனது. அதில் 15 லட்சம் ரூபாய், வெளியில்தான் வட்டிக்கு கடன் வாங்கினேன். டிசம்பர் மாதம் நான் இலங்கை கடல்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி என் படகை இலங்கை கடற்படை எடுத்துக் கொண்டது. இப்போது தொழில் செய்யப் படகும் இல்லை. கடன் கட்ட வழியும் இல்லை" என்கிறார் வேதனையுடன்.

சுமார் 39 நாட்கள் இலங்கை கட்டுப்பாட்டில் இருந்த சுரேஷும் அவரது மகனும் இந்தாண்டு ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டனர்.

தங்களின் செல்ஃபோன், படகு, ஜிபிஎஸ் கருவியைகூட அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

"பிற படகுகளில் மீன்பிடிக்க வேலைக்கு சென்றாலும், கடனை அடைக்கும் அளவுக்கு காசு இல்லை. அது சாப்பாட்டிற்கே சரியாக இருக்கிறது. கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து கடனை திரும்பித்தரும்படி மோசமாக பேசுகிறார்கள். இதனாலேயே இரவு நேரத்தில்கூட நாங்கள் வீட்டில் தூங்குவதில்லை. என் படகை திரும்பப் பெற மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிற வேறு வழியில்லை" என்கிறார் சுரேஷ்.

இதனால் மகனுடைய கல்லூரி படிப்புக்கு கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார் சுரேஷ்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வது ஏன்?

பல ஆண்டுகளாக இந்த விவகாரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடலில் எல்லை எப்படி எல்லையை வரையறுப்பது என்று ஒரு பக்கம் வாதம் இருந்தாலும், சிலர் தெரிந்தே இலங்கை கடல் பக்கம் சென்று மீன் பிடிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி ஜேசுராஜாவிடம் கேட்டோம்.

ஜேசுராஜா

ஜேசுராஜா

"ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்திலேயே இலங்கை கடல்பகுதி வந்துவிடும். மொத்தம் 12 நாட்டிக்கல் மைல் வரைதான் இந்திய எல்லை.

இந்திய பகுதியில் மீன் வளங்கள் மிகவும் குறைவு. கச்சத்தீவு மற்றும் இலங்கை பகுதியில்தான் அதிக மீன்கள் கிடைக்கும். இங்கு மீன் இல்லை என்றால் மீனவர்கள் என்ன செய்வார்கள்" என்று கேள்வி எழுப்புகிறார் ஜேசுராஜா.

ராமேஸ்வரத்தில் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் வைத்து பல குடும்பங்கள் இந்த மீன்பிடி தொழிலைத்தான் நம்பியிருக்கிறார்கள்

"அப்படி இருக்கையில் இங்கிருந்து இருக்கும் மீன்பிடி எல்லை மிகவும் குறைவாக இருக்கிறது. எல்லை தாண்டுவதாக தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்வது, சிறை வைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, துப்பாக்கியால் சுடுவது போன்ற பிரச்சினைகளால், மீன்பிடி தொழிலையே இங்கு பலரும் விட்டு செல்வதற்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளது" என்று அவர் தெரிவிக்கிறார்.

இருநாட்டு மீனவர்களும், அரசும் பேசி இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கொண்டுவராத பட்சத்தில், இன்னும் சில ஆண்டுகள் போனால், மீனுக்கு பெயர் போன ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழிலே இருக்காது என்று ஜேசுராஜா கவலை தெரிவித்தார்.

டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மீனவர்கள்

இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் நாங்கள் கடலுக்கு செல்கிறோம். ஆனால், டீசல் விலை உயர்வு எங்கள் மேல் விழுந்த இன்னொரு பெரிய இடி என்கிறார் எடிசன்.

எடிசன்

"நான் ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்து 33 ஆண்டுகள் ஆகிறது. நான் இங்கு வரும்போது, டீசல் விலை லீட்டர் 3 ரூபாய் 36 ரூபாவிற்கு விற்றது. அப்போது, ஒரு கிலோ இறாலுடைய விலை 700 - 800 ரூபாய். ஆனால், இப்போது டீசல் விலை லீட்டர் 87 ரூபாய்க்கு விற்கிறது. இன்று இறால் ஒரு கிலோ 350 ரூபாய். எங்களுக்கு எப்படி கட்டுப்படி ஆகும்? அதிக வருமானம் வேண்டும். அப்போது தான் கட்டுப்படி ஆகும். எனவேதான் நாங்கள் இலங்கை பகுதிக்கு மீன் பிடிக்க செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

உதாரணமாக இன்று இறால் விலை 1200-1300 ரூபாய்க்கு விற்குமானால் நாங்கள் இலங்கை பகுதிக்கு போக வேண்டிய சூழலே இருக்காது" என்கிறார் மீன் தொழில் செய்யும் எடிசன்

"எல்லை குறைவாக இருக்கிறது. இறந்தாலும் பரவாயில்லை, குடும்பம் நடத்தனும் என்ற எண்ணத்தில் மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்" என்கிறார் எடிசன்.

நியாயமான விலை வேண்டும்

தக்காளிக்கு அரசு விலை நிர்ணயம் செய்கிறது. ஆனால் மீன்களுக்கு உரிய விலை இல்லை. கேக்கிற காசுக்கு கொடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதனால்தான் அதிக மீன்கள் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லை தாண்டிப் போவதாக அங்குள்ள மீனவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

டீசல் விலையை குறைத்து, எங்கள் மீன்களுக்கு உரிய விலையை அரசு நிர்ணயித்தால், இந்த பிரச்சினை சற்று குறையும் என்பது அவர்கள் கருத்தாக இருக்கிறது.

டீசல் உயர்வு, மீன்களுக்கு உரிய விலை இல்லை, மீன்பிடி படகில் பயன்படுத்தப்படும் கருவிகளுக்கு ஜி.எஸ்.டி வரி போன்ற சுமைகளால் தங்கள் வாழ்கை சுமை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ராமேஸ்வரம் என்றால் ராமநாதசுவாமி கோயிலுக்கு அடுத்து மீன்பிடி தொழிலுக்கு பெயர் போன இடம். இந்த நிலை மாறி வரும் ஆண்டுகளில் மீன்பிடி தொழில் அழிந்து விடுமோ என்ற அச்சத்தை அவர்களிடம் காண முடிந்தது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி