சக்திவாய்ந்த தருணம் உருவானது. மேடைக்கு வந்த சிரேஷ்ட மாணவி ஒருவர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவிகள் மற்றும் சக நண்பர்கள் முன்னிலையில் திடீரென தனது கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கினார். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு மாணவி நிகழ்த்தும் வழக்கமான உரைகளுக்கு அப்பாற்பட்டு, மிகுந்த தன்னம்பிக்கையுடன் தான் முறையாக வென்ற விருது தனக்கு மறுக்கப்பட்டிருப்பதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
இருப்பினும், அது ஒரு உணர்ச்சிவசப்பட்ட கோபமோ அல்லது மரியாதையற்ற எதிர்ப்போ அல்ல; மாறாக தன்னை செதுக்கிய பாடசாலைக்குள்ளேயே நீதி மற்றும் அநீதி இழைக்கப்பட்டமை குறித்த காரணபூர்வமான ஒரு வெளிப்பாடாகும். இதன் பின்னர், பாடசாலையுடன் தொடர்புடைய சில தரப்பினர், இம்மாணவியின் செயலால் பாடசாலையின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால், அவர் தனது உரையைத் தொடங்குவதற்கு முன்பே, தனக்கு இவ்வளவு தன்னம்பிக்கையையும் சக்தியையும் வழங்கிய பாடசாலையை ஒரு புனிதமான இடமாக மதித்து கௌரவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பாடசாலையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டார் எனக் குறிப்பிட்டு "முழுப் பாடசாலை சமூகம்" (Total School Community) என்ற அமைப்பொன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன், அது தற்போது பல ஊடகங்களில் பரவி வருகின்றது. இருப்பினும், திடீரென உருவான இந்த "முழுப் பாடசாலை சமூகம்" என்பது யாது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில், இச்சம்பவம் தொடர்பாக முழுப் பாடசாலை சமூகமும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, அந்தத் தரப்பினர் "முழு" (Total/Overall) என்ற சொல்லைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்துத் தனியாக ஆராயப்பட வேண்டும்.
அமைதி, கீழ்ப்படிதல் மற்றும் மரபுகளுக்கு இணங்குதல் ஆகியவற்றை மதிக்கும் ஒரு பாரம்பரிய பாடசாலைச் சூழலில் இத்தகைய செயல் மிகவும் அரிதான ஒன்றாகும். எவ்வளவுதான் அநீதி இழைக்கப்பட்டாலும், முன்னைய காலங்களில் பாடசாலைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முன்னால் மௌனமாக இருக்கவே பழகியிருந்தனர். ஆனால், இம்மாணவி அநீதியைப் பொறுத்துக்கொள்வதற்குப் பதிலாக, அதற்கு எதிராக எழுந்து நிற்கத் துணிந்தார். அவர் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளத் தெரியாத ஒரு மாணவி எனச் சிலர் கூக்குரலிட்டாலும், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய சரியான தருணத்தில் அந்தப் படியை எடுக்க அவர் தயங்கவில்லை.
அவர் எடுத்த அந்த நடவடிக்கை 'ஜெனரேஷன் Z' (Gen Z) தலைமுறையின் ஒரு முக்கிய பண்பைப் பிரதிபலிக்கிறது. அதாவது இடம் அல்லது அதிகாரம் எதுவாக இருந்தாலும், அநீதிக்கு முன்னால் பின்வாங்குவதை மறுப்பதாகும். அவரது தைரியம் என்பது குரல் கொடுப்பது மட்டுமல்ல, அவர் நேசிக்கும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் தனது பாடசாலைக்குள்ளேயே அதைச் செய்ததாகும். தனது சொந்த சமூகத்திற்குள்ளிருந்தே எழும் அநீதியை எதிர்ப்பது என்பது, ஒரு வெளி எதிரியை எதிர்ப்பதை விடவும் பெரிய தைரியம் தேவையானது.
அவரது கதை பாடசாலைக்கு அப்பால் பரவி, சமூக ஊடகங்கள் ஊடாக ஒட்டுமொத்த சமூகத்திலும் ஒரு விரிவான உரையாடலைத் தூண்டியுள்ளது. இது ஒரு இழந்த விருதைப் பற்றியது மட்டுமல்ல; அந்தக்குரல் என்பது நீதியையும், மௌனத்தை ஒரு நற்பண்பாக இனிமேலும் ஏற்றுக்கொள்ளாத ஒரு தலைமுறையைப் பற்றிய முன்கூட்டிய அடையாளமுமாகும். அத்துடன், இது இத்தகைய நிகழ்வுச் சங்கிலியின் ஆரம்பம் என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இதற்கிடையில், "மாணவர் வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் அநீதி மற்றும் அநியாயங்களுக்கு எதிராக எழுந்து நிற்பதற்கு உங்களுக்கு (பீடங்களைத் தவிர) பரம உரிமையும் கடமையும் உண்டு" என்ற ஒரு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இது அந்த நிறுவனங்கள் தொடர்பான கூர்மையான மற்றும் பாரிய கிண்டலாகும்.
பொதுவாக 1990களின் பிற்பகுதியிலிருந்து 2010களின் முற்பகுதி வரை பிறந்த Gen Z தலைமுறையினர், அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரிடமிருந்து அடிப்படை ரீதியாக வேறுபட்டவர்கள். அவர்கள் சமூகம் குறித்து அக்கறை கொண்டிருப்பதுடன், அநீதிக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்படுகின்றனர். "தமது முறை வரும் வரை காத்திருக்குமாறு" அல்லது "கட்டமைப்பை அப்படியே ஏற்றுக்கொள்ளுமாறு" கற்பிக்கப்பட்ட முந்தைய தலைமுறையினரைப் போலன்றி, Gen Z தலைமுறையினர் தொடர்ச்சியாகக் கேள்வியெழுப்புகின்றனர்.
தன்னை விட மூத்தவர் என்பதற்காக மாத்திரம் அவர்கள் எவரையும் புனிதமானவர்களாகக் கருதுவதில்லை. அவர்களின் பார்வையில், கௌரவம் என்பது சம்பாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்; அத்துடன் அது நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை மூலம் பேணப்பட வேண்டும். அந்த வாக்குறுதிகள் மீறப்படும்போது, அவர்கள் உடனடியாகவும் பகிரங்கமாகவும் குரல் கொடுக்கின்றனர்.
இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு Gen Z தலைமுறைக்கு ஏற்ற தலைமைத்துவத்தை வழங்குவதற்கான தெளிவான வேலைத்திட்டங்கள் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருமுறை பகிரங்கமாகத் தெரிவித்தார். அத்துடன் எதிர்கால அரசியல் தலைமைத்துவத்தை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். நடைமுறை அரசியலை விட நவீன தாராளமயவாதத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன அரசியல் போக்குகள் குறித்த விரிவான அறிவையும் தொலைநோக்கையும் கொண்ட அவரது இந்தக்கூற்று சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அதில் மிக ஆழமான ஒரு கருத்து உள்ளது. அனைத்தையும் உடனுக்குடன் கேள்வியெழுப்பும், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்காத பண்புகளுடன் வளர்ந்த ஒரு தலைமுறைக்கும், பாரம்பரிய அரசியல் கட்டமைப்புகள், கதையாடல்கள் மற்றும் வாக்குறுதிகளுக்கும் இடையில் இனிமேல் பொருத்தம் இருக்காது என்ற அவரது நிலைப்பாடு, எமது அரசியல் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான கணிப்பாகும்.
Gen Z தலைமுறையினர் வெறும் கோஷங்களுக்குப் பதிலளிப்பதில்லை; அவர்கள் ஒரு விடயத்தின் ஆழமான சாராம்சத்திற்கே பதிலளிக்கின்றனர். அவர்கள் பாரம்பரிய படிநிலைகளை (Hierarchies) நம்புவதில்லை; ஆனால் சான்றுகளை நம்புகிறார்கள். அவர்கள் கடந்த கால உணர்ச்சிகளால் தூண்டப்படுவதில்லை; மாறாக எதிர்கால வாய்ப்புகளால் வழிநடத்தப்படுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க 1980களின் தொடக்கத்தில் கல்வி அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்த கடும் ஒழுக்கம் கொண்ட கல்வியியல் பீடங்களுக்குள்ளும் (National Colleges of Education) இன்று மேற்குறிப்பிட்டவாறான கிண்டல் பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இதற்குக் காரணம் அந்தக் கல்வியியல் பீடங்களுக்குள்ளும் இன்று Gen Z தலைமுறையின் விதைகள் வேரூன்றி வளர்ந்துள்ளமையாகும். இதனை ரணில் விக்கிரமசிங்கவும் ஏகமனதாக ஏற்றுக்கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கையின் Gen Z தலைமுறையின் கூட்டு வலிமை மிகவும் தெளிவாகவும் தீர்மானமிக்கதாகவும் 2022 காலி முகத்திடல் போராட்டத்தின் (Aragalaya) மூலம் நிரூபிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு மக்களும் அதில் பங்கேற்றிருந்தாலும், அதனை வழிநடத்தியது மற்றும் ஒழுங்குபடுத்தியது எமது நாட்டின் மத்தியதர வர்க்க இளைஞர்களேயாகும். அவர்களில் பெரும்பாலோர் Gen Z தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக ஒன்றிணைந்தனர்; கடுமையான தலைமைத்துவக் கட்டமைப்புகள் எதுவுமின்றி கூட்டாகச் செயற்பட்டனர். மேலும், போராட்டத்தை ஒரு அரசியல் கட்சிச் சார்பு என்பதை விட ஒரு சிவில் பொறுப்பாக அவர்கள் மீள்வரைவிலக்கணம் செய்தனர். ஆரம்பத்தில் இது கட்சி அரசியலை அடிப்படையாகக் கொள்ளாத ஒரு கட்சி சார்பற்ற இயக்கமாகவே இருந்தது. இது பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, பொருளாதார நீதி மற்றும் கௌரவம் ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. Gen Z போராட்டத்தை வழிநடத்தியது வெறும் மாற்றத்திற்காக மட்டுமல்ல, பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலுமேயாகும்.
இன்றுள்ள மாலிமா (NPP) அரசாங்கம் உருவாவதற்கான அடிப்படை உத்வேகத்தை இந்த 'அரகலய' போராட்டமே வழங்கியது. இதற்கு Gen Z தலைமுறையினர் பாரிய பங்களிப்பை வழங்கியதால், பிற்காலத்தில் மாலிமா அரசாங்கமும் பல இடங்களில் Gen Z குறித்துச் சாதகமாகப் பேசியதைக் காண முடிந்தது. அது அவ்வாறிருந்தபோதிலும், இன்று அவர்களின் ஆட்சியின் கீழ் Gen Z தலைமுறையினரின் மனப்பாங்குகள் புறந்தள்ளப்பட்டுச் செயற்படுவதை இப்போது நன்றாக உணர முடிகிறது. Gen Z தலைமுறையினருடன் அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் சவால் என்பது வெறும் தொடர்பாடல் சார்ந்தது மட்டுமல்ல; அது சிந்தனை முறை சார்ந்த ஒரு சவாலாகும். Gen Z எதிர்பார்ப்பது சலுகைகளை அல்ல, மாறாகப் பங்கேற்பையே ஆகும். கொழும்பு பாடசாலைச் சம்பவத்தில் வெளிப்பட்டவாறு, நீதி பாதிக்கப்படும்போது அவர்கள் மிகவும் கௌரவமான நிறுவனங்களைக் கூடக் கேள்விக்குட்படுத்தத் தயங்குவதில்லை. அவர்களின் விசுவாசம் என்பது நிபந்தனையற்றது அல்ல; அது விழுமியங்களின் அடிப்படையில் அமைந்ததாகும்.
'வண்ண இரவின்' அந்த மாணவி, தான் அறியாமலேயே ஒரு புதிய சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையைச் சமூகமயப்படுத்தியுள்ளார். Gen Z தலைமுறையினர் மரபுகளுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் அநீதிக்கு எதிரானவர்கள். அவர்கள் நிறுவனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல, மாறாக அந்த நிறுவனங்களிடமிருந்து பொறுப்புக்கூறலையே எதிர்பார்க்கிறார்கள். தவறான விடயங்களுக்கு முன்னால் மௌனமாக இருப்பது என்பது, அந்தத் தவறில் பங்காளியாவதற்குச் சமம் என அவர்கள் நம்புகிறார்கள்.
எவ்வாறாயினும், இந்தப் புதிய சமூகப் போக்கைக் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை; அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இளைய தலைமுறையினர் எல்லைகளைத் தாண்டிச் சென்று, நடைமுறைகளைச் சவாலுக்கு உட்படுத்தும்போதுதான் சமூகம் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது. சமூக, அரசியல் அல்லது கலாச்சார ரீதியான ஒவ்வொரு பிரதான மறுசீரமைப்பும், மற்றவர்கள் மௌனமாக இருந்தபோது பேசத் துணிந்த இளைஞர்களாலேயே முன்னெடுக்கப்பட்டது என்பதை வரலாறு காட்டுகிறது.
தனி ஒரு மாணவியின் கதை என்பது தேசிய அரசியலின் பெரும் திட்டங்களுக்குள் சிறியதாகத் தெரிந்தாலும், அது அதைவிடப் பெரிய ஒன்றைக் அடையாளப்படுத்துகிறது. ஒதுங்கிப்போகவோ, மௌனமாக இருக்கவோ அல்லது அரை உண்மைகளுடன் திருப்தியடையவோ மறுக்கும் ஒரு தலைமுறையை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். Gen Z தலைமுறையினர் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்பதற்கான அனுமதி கிடைக்கும் வரை காத்திருப்பதில்லை; வகுப்பறைகளிலும், வீதிகளிலும் மற்றும் டிஜிட்டல் தளங்களிலும் அவர்கள் ஏற்கனவே அதனைச் செய்துகொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இதன் வளர்ச்சியையே காண முடியுமே தவிர, வீழ்ச்சியை அல்ல.
இலங்கை எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப விரும்பினால், Gen Z தலைமுறையினரை அடையாளப்படுத்துவதற்கும் அப்பால் செல்ல வேண்டும். அவர்களுக்குச் செவிசாய்க்க வேண்டும், அவர்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்களுடன் இணைந்து நம்மையே மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாடசாலை மேடையில் அந்த இளம் மாணவி காட்டிய தைரியம் என்பது, வணிகங்களை வலுப்படுத்தும், தேசங்களை மறுசீரமைக்கும் மற்றும் சகாப்தங்களை வரைவிலக்கணப்படுத்தும் அதே தைரியமே ஆகும்.
Gen Z என்பது கட்டுப்படுத்தப்பட வேண்டிய அல்லது நிர்வகிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனை அல்ல. அவர்கள் வலுவூட்டப்படுவதற்காகக் காத்திருக்கும் தீர்வாகும். Gen Z தலைமுறையை நோக்கித் திரும்புவதற்காக வலது பக்க சைகை (Signal) காட்டிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் இடது பக்கம் திரும்பிய மாலிமா அரசாங்கம், அதற்கான புதிய சமூக அரசியல் மறுசீரமைப்புச் சங்கிலியை உருவாக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் மிகவும் இருண்டதாக அமையும். ஏனெனில், சோசலிசத்தையும் நவீன தாராளமயவாதத்தையும் இரண்டு பைகளில் (Double Pocket) போட்டுக்கொண்டுள்ள தற்போதைய அரசியலாலோ அல்லது இந்த உலகில் உள்ள வேறு எவராலோ Gen Z தலைமுறையின் இந்த எழுச்சியைத் தடுக்க முடியாது.


