எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அர்விந்த சேனாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சூரவீரஆரச்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களான வடிவேல் சுரேஷ், சதாசிவம், மஹிந்தானந்த அளுத்கமகே, ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே உள்ளிட்ட அரசியல்வாதிகள் குழுவினர் இந்த நிலங்களை அபகரித்துள்ளதாக கேள்வியை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சூரவீர குறிப்பிட்டார்.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு தான் ஆலோசனை வழங்குவதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் பிரதி அமைச்சர் அர்விந்த சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சூரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
நுவரெலியா மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் எந்தவொரு அரசியல்வாதிக்கும் உத்தியோகபூர்வமாக காணி ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பான தகவல்கள் தற்போதைய பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை என்றும், அவ்வாறு அரசியல்வாதிகளால் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
தீவு முழுவதும் இவ்வாறான காணி அபகரிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதால், அது தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சூரவீர ஆரச்சி மேலும் கூறியதாவது:
“நுவரெலியா மாவட்டத்தில் மக்களுக்கு வாழ காணி இல்லை. கடந்த அரசாங்கத்தின் போது அரசியல்வாதிகளுக்கு பெரிய அளவிலான நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் அம்பகமுவ, வேவெல்தலாவ பிரதேசத்தில் 50 ஏக்கர் காணியை அபகரித்துள்ளார்.
"அதனையடுத்து அமைந்துள்ள 50 ஏக்கர் காணியை முன்னாள் லொத்தர் சபைத் தலைவர் உபாலி லியனகே அபகரித்துள்ளார். அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் மேலும் சில அரசியல்வாதிகள் இவ்வாறு நிலங்களை அபகரித்துள்ளனர்.
"அதன்படி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கொத்மலை கிழக்கு பொட்டோஸ் தோட்டத்தில் 16 ஏக்கர் காணியை அபகரித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலவாக்கலை பிரதேசத்தில் 50 ஏக்கர் காணியை அபகரித்துள்ளார்.
"முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நுவரெலியா மாவட்டத்தின் மாகஸ்தோட்ட பிரதேசத்தில் மூன்று இடங்களில் தலா 10 ஏக்கர் வீதம் காணியை அபகரித்துள்ளார்” என்றார்.
(தினமின)


