மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை எதிர்வரும் புதன்கிழமை வரை தொடர, அச்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை மின்சார சபை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த, தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப் பெறாவிட்டால் எதிர்வரும் 24 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை வௌியிடவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பா அல்லது தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்படுமா என்ற தீர்மானத்தை அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்நாட்டின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமைக்காக வலுசக்தி இறையாண்மையை உறுதி செய்வது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், மின்சாரத் துறையின் நிறுவனக் கட்டமைப்பில் உள்ள குழப்ப நிலையைத் தீர்த்து, முறையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் தேவை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனைத் கூறியுள்ளார்.
மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை மின் உற்பத்தி நிறுவனம், தேசிய பரிமாற்ற வலையமைப்பு விநியோக நிறுவனம், இலங்கை மின்சார விநியோக நிறுவனம் மற்றும் தேசிய கட்டமைப்பு இயக்க நிறுவனம் உட்பட புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
மின்சாரத் துறையின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் புதிய மாற்றத்திற்கு ஒரு புதிய நிறுவனக் கட்டமைப்பு அவசியம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக பழைய கட்டமைப்பு இனிமேலும் போதுமானதாக இல்லை என்றும், புதிய கட்டமைப்பின் அவசியத்தை யாரும் மறுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
அதன்போது, தற்போது வகிக்கும் பதவிகள் அல்லது சம்பள அளவுகள் எந்த வகையிலும் குறைக்கப்படாமலும், பதவி உயர்வுக்கு செல்வதற்கு நிலவிய தடைகளை நீக்கும் வகையில் செயற்படல், அனைத்து ஊழியர் உரிமைகளையும் பாதுகாத்தல், புதிய நிறுவன கட்டமைப்பில் இலங்கை மின்சார சபையாக இருந்த அனைத்து உரிமைகளையும் உறுதி செய்தல், புதிய நிறுவன கட்டமைப்பில் உள்வாங்கப்படும்போது இலங்கை மின்சார சபையாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைத் தீர்த்தல், வலுசக்தி இறையாண்மையைப் பாதுகாத்தல் மற்றும் அதை முழுமையாக அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றுவது ஆகிய கோட்பாடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.


