இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைவரையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இலங்கையின் சிவில் சமூக அமைப்புகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
அனைத்து போர்க்குற்றவாளிகளையும் நீதிக்கு முன் கொண்டுவர சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாங்கள் அழைப்பதாக, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அருட்தந்தை மாரிமுத்து  சத்திவேல் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை, பத்து ஆண்டுகளாக முன்வைத்த எந்தவொரு தீர்மானத்தையும் முன்னைய அரசாங்கங்களோ அல்லது தற்போதைய அரசாங்கமோ ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது செயற்படுத்தவில்லை என அவர் அருட்தந்தை சுட்டிக்காட்டினார்.

மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரி சிவில் சமூகமும் மதத் தலைவர்களும் ஜனவரி மாதம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கங்கள் குறித்து அந்த சபை கவனம் செலுத்தவில்லை என தீவின் முன்னணி மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவரான அருட்தந்தை சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த வருடம் இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கூட்டுத் தீர்மானத்தில் இலங்கை சிவில் சமூக அமைப்புகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆரம்ப வரைபில் நாம் எதிர்பார்ப்பது அங்கு எதுவும் குறிப்பிடப்படவில்லை, என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தின், கடைசி நாட்களில் ஒரு இனப்படுகொலை நடந்ததாக குறிப்பிடும் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல், இராணுவத்தினர் இழைத்த போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை சர்வதேச அமைப்புகள் முன்வைத்த போதிலும், அது விவாதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
image1170x530cropped

"மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தயாரித்த அறிக்கையில், அனைத்து போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நேரத்தில், ஒரு தீர்மானமாக முன்வைக்கப்பட்டுள்ள இந்த திட்டம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் அல்லது வேறு பொருத்தமான எந்தவொரு செயன்முறையில் அதனை நிறைவேற்றுவதற்கான சாத்தியங்கள் இல்லை அவதானிக்க முடிகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக செயற்படும் அமைப்புகள் தயாரித்துள்ள ஆவணம் கையெழுத்து பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என அருட்தந்தை  தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்,  அண்மையில்  வெளியிட்ட அறிக்கையில்,  இலங்கை மீது "கடுமையான மனித உரிமை மீறல்” குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதோடு, போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

"சர்வதேச குற்றங்களுக்கு நீதி வழங்க சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று அவர் தனது  17 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், பெரிய அளவிலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையர்களுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் வெளிநாட்டு பயணத் தடை போன்ற விடயங்களை மேற்கொள்ளுமாறு உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி