உத்தராகண்ட் மாநிலத்தில் சமொலி மாவட்டத்தின் ராய்னி கிராமத்தில் தபோவன் பகுதியில் இன்று (பிப்ரவரி 7, ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட ஒரு பெரிய பனிச்சரிவு மற்றும் அதனால் நதிகளில் உண்டான வெள்ளம் ஆகியவற்றால், இதுவரை குறைந்தது 10 பேர் இறந்துள்ளது உறுதியாகியுள்ளது.

இதில் பலர் காணாமல் போயுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

வெள்ளத்தில் இருந்து இதுவரை 9 முதல் 10 இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று இந்தோ - திபெத்திய காவல் படையின் தலைமை இயக்குநர் எஸ்.எஸ். தேஸ்வால் ஏ.என்.ஐ செய்தி முகாமையிடம் தெரிவித்துள்ளார்.

ஜோஷிமத் எனும் பகுதியில் இந்த திடீர் பனிச் சரிவு ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் அமைந்துள்ள பொதுத்துறை நிறுவனமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) மற்றும் ரிஷி கங்கா மின் திட்டம் ஆகியவற்றில் பணியாற்றிக்கொண்டிருந்த 125-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் காணவில்லை. அவர்களின் நிலை என்ன என்று இதுவரை தெரியவில்லை.

தபோவன் அணை அருகே உள்ளம் ஒரு சுரங்கப் பாதையில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன அங்கு 20 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

சமொலி மாவட்டத்தின் தபோவன் அணை பகுதியில் ஒரு சுரங்கப் பாதைக்குள் சிக்கித் தவித்த 16 தொழிலாளர்களை இந்தோ - திபெத்திய காவல் படையினர் மீட்டுள்ளனர்.

உத்தராகண்டில் கடும் பனிச்சரிவு மற்றும் வெள்ளம்: பலரை காணவில்லை

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவியை உத்தராகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

"பனிச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் குறைந்தது 17 கிராமங்கள் உள்ளன அங்கு தீவிரமான பனி காரணமாக சுமார் ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேறியிருந்தனர். தற்போது அங்கு மக்கள் உள்ள கிராமங்களில் ராணுவ விமானங்கள், மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் பல கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீரென வெள்ளப்பெருக்கு

தெளலிகங்கா மற்றும் அலக்நந்தா ஆகிய ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வெள்ளத்தில் சிக்கியுள்ள கிராம மக்களை வெளியேற்றும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

தெளலிகங்கா நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அதோடு தபோவன் பகுதியில் இருக்கும் ரிஷிகங்கா மின்சாரத் திட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

உத்தராகண்டில் நிகழ்ந்த, 'இமய மலையின் சுனாமி' என்று ஊடகங்களால் கூறப்பட்ட 2013 பெருவெள்ளத்தில் , பல்லாயிரம் பேர் இறந்ததும், காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக கிளம்பி உள்ள உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், பொதுமக்கள் புரளிகளை நம்ப வேண்டாம் என்றும் பழைய காணொளிகளைப் பகிர வேண்டாம் என்றும் ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தராகண்டில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக அந்த மாநில முதலமைச்சருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார்.

மாநில அரசு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இந்த பனிச்சரிவால் தெளலிகங்கா நதியின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதால், அதன் கரையோரத்தில் இருந்த சில வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஏ.என்.ஐ செய்தி முகாமையில் கூறப்பட்டுள்ளது.

அதோடு அலக்நந்தா நதிக்கரை ஓரத்தில் வசிப்பவர்களையும், விரைவாக பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு உத்தராகண்ட் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

"அலக்நந்தா நதிக்கரையில் வசிப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிரதி நதியில் இருந்து வரும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது. அலக்நந்தா நிரம்பி வழியாமல் இருக்க, ஸ்ரீநகர் அணை, ரிஷிகேஷ் அணை ஆகியவை காலி செய்யப்பட்டுள்ளன" என்று உத்தராகண்டின் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

"பனிச்சரிவின் காரணமாக ரிஷிகங்கா மின்சாரத் திட்டம் பெரிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. சம்பவ இடத்தில் சிலரை காணவில்லை என்று கூறப்பட்டாலும், எத்தனை பேரை காணவில்லை என இந்த நேரத்தில் குறிப்பிட முடியாது. தெளலிகங்கா மற்றும் அலக்நந்தா நதிகளில் திடீரென நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது" என்று சமோலி மாவட்டத்தின் துணை ஆட்சியர் அனில் சயின்யால் பிபிசி மராத்தி சேவையிடம் கூறியுள்ளார்.

"தபோவன் முதல் ஹரித்வார் வரையிலான பல்வேறு இடங்களில் தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நதிக்கரைகளில் வாழ்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். ராணுவம் உள்ளிட்ட படையினர் உதவிக்கு வந்திருக்கிறார்கள். தேசிய மற்றும் மாநில பேரழிவு நிவாரணப் படையினர் களத்தில் இருக்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலம் ஒரு மிகப்பெரிய இயற்கை பேரிடரை சந்தித்துள்ளது.

'இமய மலையின் சுனாமி' என்று ஊடகங்களால் கூறப்பட்ட அந்தப் பெருவெள்ளத்தில் , பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர். இதுவரை இறந்தவர்களின் துல்லியனமான எண்ணிக்கை தெரியவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

சுமார் நான்காயிரம் கிராமங்களை பாதித்த இந்த வெள்ளத்தால், பல மலை கிராமங்கள் இருந்த சுவடே தெரியாமல் போனது.

இந்துக்கள் புனிதமாக கருதும் இடங்களுக்கு பயணம் சென்றிருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.

2013ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த பெருவெள்ளத்தில் மீட்பு பணிகளில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.

மலைப் பகுதிகளில் ஹெலிகாப்டர்களும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி