மஹா ஓயா படுகை மற்றும் தெதுரு ஓயா படுகைகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹா ஓயா படுகையின் சில துணை ஆறுகள் இதுவரை குறிப்பிடத்தக்க மழையைப் பெற்றுள்ளதால், மழை நிலைமை மற்றும் மஹா ஓயா படுகையிலுள்ள நீர்ப்பாசனத் திணைக்களம் பராமரிக்கப்படும் அளவிடும் கருவிகளின் நீர் மட்டங்களின் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில், அடுத்த 36 மணி நேரத்திற்குள் அலவ்வ, திவுலப்பிட்டி, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மஹா ஓயா தாழ்நில பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், தெதுரு ஓயா படுகையின் மேல் மற்றும் நடுத்தர பகுதிகளில் பெய்து வரும் கணிசமான மழை காரணமாக, தெதுரு ஓயாவின் நீர்மட்டம் வெள்ள அபாயத்தை நெருங்கி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 16,250 கன அடி வீதம் நீர் தெதுரு ஓயாவில் திறந்து விடப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் கொள்ளளவைப் பொறுத்து, எதிர்காலத்தில் இந்த நிலைமை அதிகரிக்கக்கூடும் என்றும், இதன் காரணமாக, தெதுரு ஓயாவை ஒட்டி அமைந்துள்ள வாரியபொல, நிகவெரட்டிய, மஹாவ, கோபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குச் சொந்தமான தாழ்நிலை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நீர்த்தேக்கங்களைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள், மேற்கூறிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதி வீதிகளை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வில்பத்து தேசிய பூங்காவைப் பார்வையிடச் சென்றபோது பெய்த பலத்த மழை காரணமாக நுழைவாயிலுக்குத் திரும்ப முடியாமல் தவித்த 30க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த வீதிகள் சேதமடைந்ததால், அந்தக் குழுவால் எலுவன்குளம் நுழைவாயிலுக்குத் திரும்ப முடியவில்லை. எனவே வனவிலங்கு அதிகாரிகள் பிரவேசித்து சஃபாரி வாகனங்களைப் பயன்படுத்தி அவர்களைப் பாதுகாப்பாக மீட்டனர்.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால், கலா ஓயாவிலிருந்து பாயும் பாரியளவான நீர் காரணமாக, எலுவன்குளம் நுழைவாயிலைச் சுற்றியுள்ள பகுதி 6 அடிக்கும் அதிகமான நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால் இந்தக் குழு திரும்ப முடியாத நிலையில் இருந்துள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்த மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
8 மாவட்டங்களுக்கு இன்று (20) இரவு 9.00 மணி வரை அமுலாகும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர மற்றும் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை, யட்டியந்தோட்டை, கேகாலை, அரநாயக்க மற்றும் திஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, பசறை, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க, காலி மாவட்டத்தில் நாகொட, நெலுவ மற்றும் எல்பிட்டிய, கண்டி மாவட்டத்தில் உடுநுவர, தெல்தோட்டை, உடபலாத, தொலுவ, பஹததும்பர பஹத்தஹேவாஹெட்ட மற்றும் கங்க இஹலகோரல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் முதல் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, கலிகமுவ, ருவன்வெல்ல, வரகாபொல மற்றும் ரம்புக்கன, குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல, அலவ்வ, ரிதிகம மற்றும் மல்லவப்பிட்டிய, மாத்தளை மாவட்டத்தில் யடவத்த, உக்குவெல, பல்லேபொல, லக்கல, நாவுல, அம்பன்கங்ககோரயலய மற்றும் ரத்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் ஹங்குரன்கெத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவானை, இம்புல்பே, இரத்தினபுரி மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இன்று இரவு 9.00 மணி வரை அமுலாகும் வகையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.


