அ.தி.மு.க-வில் இப்போது மூணு சீட்டு விவகாரம் மிகப் பிரபலம்! அமைச்சர்கள் பலரும் கோயில் கோயிலாகச் சென்று சுவாமி முன்பாக மூன்று சீட்டுகளைக் குலுக்கிப் போட்டு எடுத்து வருகிறார்களாம். சனிப்பெயர்ச்சிக்கே ஜோதிடம், பரிகாரம் என்று ரணகளப்படுத்திவிடுபவர்கள், ‘சசிப்பெயர்ச்சி’க்கு சும்மா இருப்பார்களா? சசிகலா, எடப்பாடி, பன்னீர் ஆகியோரின் பெயர்களை எழுதிப் போட்டு யார் பக்கம் செல்வது என்று குறி கேட்டுவருகிறார்கள்! இன்னொரு பக்கம்… சசிகலாவின் நிபந்தனைகள், தினகரனின் சீக்ரெட் விசிட், முதல்வர் பழனிசாமியின் டெல்லி பயணம் ஆகியவற்றை மையப்படுத்தி அரசியல் சதுரங்கத்தில் வேக வேகமாக நகர்த்தப்படுகின்றன காய்கள்.

சசிகலாவின் நிபந்தனைகள்!

ஜனவரி 27-ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா விடுதலையாவது உறுதியாகிவிட்டதால், அதன் தாக்கம் அ.தி.மு.க-வில் இப்போதே தகிக்கத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க அமைப்புச் செயலாளரான கோகுல இந்திரா, ‘‘ஜெயலலிதாவுக்குத் துணையாக தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா’’ என்று புகழாரம் சூட்டியதும், சமீபத்தில் ஜூனியர் விகடனுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், ‘‘அ.தி.மு.க – அ.ம.மு.க-வுக்கு இடையே நடப்பது பங்காளிச் சண்டை. இருவரும் இணையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன’’ என்றதும், சசிகலாவின் ரிலீஸுக்கு முன்பாக ஏற்பட்ட அதிர்வுகள்தான் என்கிறது அ.தி.மு.க முகாம்.

சசிகலாவுடன் பா.ஜ.க பேசி முடித்து விட்டதாகவும், அ.ம.மு.க – அ.தி.மு.க ஒன்றிணையும் என்றும் கடந்த சில நாள்களாக செய்திகள் றெக்கை கட்டும் சூழலில், ‘சசிகலா வட்டத்தில் என்ன நடக்கிறது?’ என்பதை அறிய மன்னார்குடி குடும்ப நண்பர்கள் சிலரிடம் பேசினோம். அ.தி.மு.க – அ.ம.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் சசிகலாவின் விருப்பம். கடந்த 49 வருடங்களாகத் தமிழர்களுக்காக உழைத்த இயக்கம் உடையக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். ஆனால், அதற்காகத் தன் பிடியை விட்டுத்தரவும் அவர் தயாராக இல்லை. கட்சிக்குத் தலைமையேற்க வேண்டும் என்று சசிகலா தரப்பிடம் சிலர் பேசியபோது, அதற்கு ஏழு நிபந்தனைகளை அவர் விதித்திருக்கிறார். அந்த நிபந்தனைகளை வரிசையாகச் சொல்கிறோம்…

பொதுச்செயலாளர் சசிகலா!

  • அ.தி.மு.க-வில் முன்பு இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க வேண்டும்.
  • பழையபடி, ஒற்றைத் தலைமையாக பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டுவர வேண்டும்; அதுவும் கட்சித் தேர்தலை நடத்தி, தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வேண்டும்.
  • இப்போது அ.ம.மு.க-வில் இருப்பவர்களுக்கு, அவர்கள் ஏற்கெனவே அ.தி.மு.க-வில் என்ன கட்சிப் பதவியில் இருந்தார்களோ அதே பதவியை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
  • வழிகாட்டுதல்குழு உள்ளிட்ட புதிய குழுக்களைக் கலைக்க வேண்டும்.
  • முதல்வர் வேட்பாளரைக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழுதான் கூடி முடிவு செய்யும். கூட்டணியையும் அப்படித்தான் முடிவு செய்ய வேண்டும்.
  • அ.தி.மு.க-விலிருந்து அ.ம.மு.க-வுக்குச் சென்று பதவி இழந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்.
  • அ.ம.மு.க., அ.தி.மு.க என இரு தரப்பிலும் யாராக இருந்தாலும் சின்னம் உள்ளிட்ட கட்சி தொடர்பான அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்க வேண்டும்.

இவைதான் சசிகலா சொன்ன ஏழு நிபந்தனைகள்… இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்” என்றார்கள் விளக்கமாக!

அதிர்ந்த பன்னீர்… பணிந்த எடப்பாடி(CM)

சசிகலாவின் இந்த ஏழு நிபந்தனைகளால் ஆடிப்போயிருப்பது பன்னீர்செல்வம்தான் என்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், ‘‘சசிகலா மீண்டும் கட்சிக்குள் வந்தால், எடப்பாடியை ஓரங்கட்டிவிட்டு, தான் முதல்வர் வேட்பாளராகிவிடலாம் என்ற நினைப்பிலிருந்தார் பன்னீர். இதற்காக தினகரன் தரப்புக்கும் தூதுவிட்டிருந்தார். இந்த நம்பிக்கையில்தான், ‘அண்ணன் தம்பி பிரச்னையைப் பேசித் தீர்ப்போம்’ என்று மறைமுக அழைப்பும் விடுத்தார். இப்போது, பன்னீர் பெரிதும் நம்பிய ஒருங்கிணைப்பாளர் பதவியையே ஒழிக்கும்படி சசிகலா கட்டளையிட்டிருப்பது, பன்னீரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதன்படி பார்த்தால் 2017 பிப்ரவரியில் சசிகலாவால் அளிக்கப்பட்ட பொருளாளர் பொறுப்பு திண்டுக்கல் சீனிவாசனுக்கும், அவைத்தலைவர் பொறுப்பு செங்கோட்டையனுக்கும் மீண்டும் வரும். பன்னீருக்கு எதுவும் மிஞ்சுமா என்று தெரியவில்லை’’ என்றார்.

ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, தனக்கெதிராக பன்னீர்செல்வம் யுத்தம் நடத்தியதை இன்றும் மறக்கவில்லையாம் சசிகலா. அவர் சிறை செல்வதற்கு முன்னதாக ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்த சத்தியத்தோடு பன்னீரின் தொடர்பும் முறிந்துபோனதாகக் கூறுகிறார்கள் சசிக்கு நெருக்கமானவர்கள். அதேசமயம், எடப்பாடியை சசிகலா விட்டுக்கொடுத்ததில்லை என்கிறார்கள்.

முன்னர் ஒருமுறை தன்னைச் சந்தித்த மன்னார்குடி நண்பர் ஒருவரிடம், ‘‘அக்காகிட்ட 33 வருஷம் அரசியல் பாடம் படிச்சவ நான். என்னையே இந்த இந்தப் பாடு படுத்துறாங்களே… பாவம், எடப்பாடியை என்னவெல்லாம் செஞ்சிருப்பாங்க. டெல்லிக்கு எடப்பாடி அடிபணியலைன்னா, அவரின் அரசியல் வாழ்க்கை முடிஞ்சிருக்கும்… கட்சியும் சின்னாபின்னமாகியிருக்கும். இதுல அவரைக் குத்தம் சொல்றதுல எந்த நியாயமும் இல்லை’’ என்றாராம் சசி. இதையடுத்துத்தான், தனக்கான நேரம் வரும் வரை காத்திருப்பது என்பதில் தீர்மானமாக இருக்கும் சசிகலா, முதலில் அதிகாரத்தைக் கைப்பற்ற காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டாராம்.

அரசியல் சூறாவளிக்குத் தயாராகும் பா.ஜ.க

‘‘சசிகலாவைக் கையிலெடுக்க வேண்டுமென்றால், அவரைச் சிறையில் தள்ளி, அ.தி.மு.க-வை உடைத்து, மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன?” என்ற கேள்வியை பா.ஜ.க சீனியர் தலைவர் ஒருவரிடம் கேட்டோம். ‘‘தி.மு.க-வின் வெற்றி விகிதாசாரத்தைக் குறைப்பதற்கு சசிகலா, பன்னீர், எடப்பாடி மூவருமே அவசியம். சமீபத்தில் மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டில், ‘சசிகலா இருந்தால் மட்டுமே டெல்டாவிலும் தென்மாவட்டத்திலும் அ.தி.மு.க-வுக்கு பலம். அ.ம.மு.க பிரிந்து நிற்பதால், சுமார் 124 தொகுதிகளில் தி.மு.க முன்னிலை பெற்றிருக்கிறது’ என்று கூறியிருக்கிறது.

அப்படி பார்த்தால் மோடி உளவு துறை ரிப்போர்டை வைத்து தனது பகடைக் காய்களை நகர்த்த ஆரம்பித்து இருப்பார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி