டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இந்திய குடியரசு தினத்தன்று நடத்த உள்ளதாக அறிவித்துள்ள ட்ராக்டர் பேரணி தொடர்பாகத் தலையிட முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 12 அன்று மறு உத்தரவு வரும் வரை இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை இடை நிறுத்தி வைத்திருந்த உச்சநீதிமன்றம், விவசாயிகள் அறிவித்துள்ள ட்ராக்டர் பேரணிக்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டது.

டெல்லி போலீஸ் வாயிலாக இந்தப் பேரணிக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த இந்திய அரசு விவசாயிகள் நடத்த உள்ள ட்ராக்டர் பேரணி குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்றும், அது தேசத்திற்கு தர்மசங்கடமான ஒரு சூழலை உருவாக்கும் என்றும் கூறியிருந்தது.

இந்த வழக்கு இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்தே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விவசாயிகள் போராட்டம் ஏன்? புதிய சட்டங்களில் என்ன பிரச்சனை?
விவசாயிகளின் போராட்ட திட்டம் என்ன? எப்படி முடியும் இந்த போராட்டம்?
டெல்லியில் யார் நுழைய முடியும், நுழைய முடியாது என்பதை இந்த நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்று அதன்போது இந்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் இடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

"டெல்லிக்குள் யார் நுழைய முடியும் என்பதை டெல்லி காவல்துறைதான் பார்க்க வேண்டும் என்று நாங்கள் கடைசி முறையும் சொன்னோம்; இந்த மாநகரத்துக்குள் விவசாயிகளால் நுழைய முடியுமா என்பதை அறிய உங்கள் அதிகாரம் அனைத்தையும் பயன்படுத்துங்கள்; டெல்லிக்குள் நுழைய யாரை அனுமதிக்க வேண்டும் யாரை அனுமதிக்கக் கூடாது என்பது சட்டம் - ஒழுங்கு தொடர்பானது; அதை டெல்லி காவல்துறைதான் கையாள வேண்டும்," என்று அப்போது தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் வாதிட்ட கூடுதல் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், விவசாயிகள் நடத்தவுள்ள ட்ராக்டர் பேரணி சட்டவிரோதமானது என்றும் அதன்போது டெல்லிக்கு சுமார் 5,000 பேர் நுழைய வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

தாங்கள் முன்னெப்போதும் இல்லாத ஒரு சூழலை எதிர் கொண்டிருப்பதாகவும் அந்த பேரணிக்கு எதிராக உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தால் அது காவல்துறையின் கரங்களை வலுப்படுத்தும் என்றும் அப்போது வேணுகோபால் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

"உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை நாங்கள் கூற வேண்டும் என ஏன் விரும்புகிறீர்கள்? நீதிமன்றத்தின் தலையீடு என்பது மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. யார் நகரத்திற்குள் வருகிறார்கள், யாரை எல்லாம் அனுமதிக்கலாம் என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது," என்று அவரிடம் அப்போது தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
விவசாயிகள் நடத்தவுள்ள ட்ராக்டர் பேரணி டெல்லி - ஹரியானா மாநில எல்லையில் மட்டுமே ஜனவரி 26 ஆம் தேதி நிகழும் என்றும் செங்கோட்டை வரை பேரணியாக சென்று குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு தொல்லை செய்யும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) சட்டம் , விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தச் சட்டம் ,அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்டம் ஆகிய மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று போராடும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அந்த சட்டங்களை முழுமையாக ரத்து செய்வதற்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய பகுதிகளைத் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இந்தச் சட்டங்களைப் பார்த்து விவசாயிகள் அச்சப்பட எதுவும் இல்லை என்று அரசு கூறுகிறது.

இதனிடையே இந்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது; கூட்டத்தொடரில் வேளாண் சட்ட நகலை கிழித்து முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் மூன்று சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது.

அப்போது விவசாயிகளுக்கு உதவாத இந்த வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என சட்டபேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை முதல்வர் நாராயணசாமி கிழித்து மத்திய அரசிற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் வேளாண் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

கூட்டணிக் கட்சியான திமுகவின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மையை இழந்ததால், நாராயணசாமி அரசு இந்த கூட்டத்தை நடத்தத் தகுதி இழந்துள்ளதாக கூறி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடரைப் புறக்கணித்தனர்.

பிரதான எதிர்க் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக இந்த கூட்டத்தைப் புறக்கணித்தன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி