“இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும்.” என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

‘புதிய அரசியலமைப்பு உருவாகி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும். புதிய அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் நாட்டில் அமைதி, சமாதானம், சுபீட்சம் எதுவும் ஏற்படாது. ஆனபடியால் ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும்.

எமது மக்களைப் பொறுத்தவரை, எம்மைப் பொறுத்தவரை ஒரு நியாயமான- சமத்துவமான அனைவரதும் உரிமைகளையும் மதிக்கின்ற நாட்டுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத சகலரும் ஒற்றுமையாக வாழக்கூடிய நீடித்து நிலைத்திருக்கக்கூடிய நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய புதிய அரசியலமைப்பு உருவாவதற்கு நாம் பரிபூரண உதவி வழங்குவோம்.

நிரந்தர அரசியல் தீர்வின் ஊடாகவே நாட்டு மக்களின் எதிர்காலம் வளமடையும் என்பதை ஆட்சியாளர்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். அந்தத் தீர்வானது இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும். இதய சுத்தியுடனான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கைத் திருநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் எம் மக்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்வெய்துகின்றேன். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குத் தீர்வு கிடைக்க இன்றைய நாளில் பிரார்த்தனை செய்வோம்.” என்றுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி