திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிப்பதற்கு அனைத்து வங்கிகளும் உடன்பாடு தெரிவித்துள்ளன.
இந்தச் சலுகையை வழங்கும்போது மேலதிக கட்டணங்களோ அல்லது மேலதிக வட்டியோ வசூலிக்கப்படமாட்டாது. இது தொடர்பான தீர்மானம் அனைத்து வங்கி கிளைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் தமது வங்கிகளிடம் அதற்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
'டிக்வா' (Ditwa) சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட தொழில்துறைகள் மற்றும் வர்த்தகங்களை விரைவாகக் கட்டியெழுப்புவதற்காக, தொழில் மற்றும் தொழில்முனைவோர் அமைச்சு, அனைத்து வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகள், கடன் பிரிவு அதிகாரிகள், மத்திய வங்கி பிரதிநிதிகள் மற்றும் நிதி அமைச்சின் அபிவிருத்திப் பிரிவு ஆகியோருடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியது. தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் தலைமையில் நேற்று முன்தினம் (17ஆம் திகதி) இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
நெருக்கடிக்குள்ளான வர்த்தகங்களுக்கு விரைவான நிதி உதவியை வழங்குவதற்கான பல முக்கிய தீர்மானங்கள் குறித்து இங்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொதுவான பொறிமுறை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்த வட்டிச் சலுகைக் கடனை வழங்குவதற்கு அனைத்து வங்கிகளும் தயாராக இருப்பதாக தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய வங்கி வெளியிடவுள்ளது.
இந்தச் சலுகைத் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதற்காக, வங்கி முறைமை மற்றும் தொழில் அமைச்சில் உள்ள நெருக்கடிக்குள்ளான வர்த்தகங்கள் தொடர்பான தரவுகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், பொதுவான தரவுத் தொகுதி மற்றும் பொறிமுறையை உருவாக்குவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சு மற்றும் வங்கித் துறையினர் வாராந்தம் இந்தச் செயற்பாடுகளை மீளாய்வு செய்யவும் இணங்கியுள்ளனர்.
இந்த விசேட சந்திப்பில் தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி 'Zoom' தொழில்நுட்பம் ஊடாக இணைந்துகொண்டதுடன், அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர மற்றும் வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


