இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் முடிவுறாத பல முயற்சிகளில் மற்றொரு புதிய அத்தியாயம் நேற்றுடன் தொடங்கியிருக்கின்றது என்று கருதலாம்.
முதலில் ஒரு மணி நேரமே இந்தப் பேச்சுக்கு ஒதுக்கப்பட்ட போதிலும் அது பின்னர் ஒன்றரை மணி நேரம் என நீடித்தது. தமிழரசுத் தரப்பில் அதன் தலைவர் சி.வி.கே.சிவஞானமே பேச்சை ஆரம்பித்து வைத்தார்.
தமிழரசுக் கட்சி அதன் ஸ்தாபக காலம் தொட்டு சமஷ்டி முறையிலான தீர்வுக்குத் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது என்பதை வலியுறுத்திய சிவஞானம், எங்களுக்கு 'சமஷ்டி' என்ற பெயர் முக்கியமல்ல, சமஷ்டி முறைமை இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம், பகிரப்பட்ட அதிகாரங்கள் திரும்பப் பெற்றுக கொள்ளப்பட மாட்டா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் பிரதானமானது என அவர் வலியுறுத்தினார்.
ஆரம்பத்தில் சிவஞானம் சிங்களத்தில் தமது கருத்துக்களை முன் வைக்கத் தொடங்கினார். ஆயினும், ஜனாதிபதி குறுக்கிட்டு, ''நீங்கள் மூன்று மொழிகளில் எதிலும் பேசலாம். சமநேர மொழிபெயர்ப்பை செவிமடுக்கும் கருவியை நான் காதினுள் பொருத்தி உள்ளேன்'' என்று தெரிவித்தார். வெளியில் தோற்றாமல் அதனை ஜனாதிபதி பொருத்தியிருக்கின்றார் என்பதை புரிந்து கொண்ட தமிழரசுத் தரப்பினர் அதன் அடிப்படையில் பின்னர் தமிழிலும் தமது கருத்துக்களை லாவகமாகத் தொடர்ந்தனர்.
தமிழரசுத் தரப்பில் பேச்சை ஆரம்பித்த தலைவர் சிவஞானம் தமது கட்சியின் நிலைப்பாட்டை சுமந்திரன் தெளிவாக விளக்குவார் என்று குறிப்பிட்டு பொறுப்பை சுமந்திரனிடம் ஒப்படைத்தார்.
அதன் பின்னர் பேச்சில் பெரும் பகுதியை சுமந்திரன் ஆக்கிரமித்து இருந்தார். அவர் சிங்களத்தில் தமது கருத்துகளை முன்வைத்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணியாக நீதிமன்றத்தில் வெற்றிகரமாக வாதாடும் சுமந்திரன் நேற்றும் நீதிமன்றுக்கு வருவது போல பேச்சுக்கு பெரும் கட்டுகள், கோப்புகளோடு வந்திருந்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையோடு கொண்டு வந்திருந்த அவர், அதில் கொடுக்கப்பட்டுள்ள முதல் வாக்குறுதி 2016 - 2019 கால அரசமைப்பு சீர்திருத்தmசெயல் முறையை விரைவாக முடிப்பதாகும் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
அப்போது உருவான இறுதி அரசமைப்பு வரைவு தொடர்பில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றாலும், அதைத் தயாரிப்பதற்காக வழிநடத்தல் குழு கூடிய 31ஆவது கூட்டத்தில் அதிகாரப் பகிர்வுக்கொள்கை பற்றிய விவாதம் இடம்பெற்றது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அச்சமயத்தில் 14 விடயங்களில் உடன்பாடு வந்தது, அதில் நீங்களும் (ஜனாதிபதியும்) ஓர் உறுப்பினராக இருந்து இணங்கினீர்கள் என்பதை சுமந்திரன் சுட்டிக்காட்டினார். அந்த உடன்பாட்டு நகலையும் அவர் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார்.
பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம், 13 ஏ சீர்திருத்த முன்மொழிவுகள் வரை 1993, 1995, 1997, 2000, 2007 மற்றும் 2019 ஆகிய சமயங்களில் எடுத்துக் கொள்ளப்பட்ட இணக்க முயற்சிகளை அவை சம்பந்தமான பதிவுக் கோவைகளோடு சுமந்திரன் முன்வைத்தார். அவை அனைத்தும் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்வதை நோக்கி அமைந்திருந்தன என்று சுமந்திரன் சுட்டிக்காட்டிய போது ஜனாதிபதி அதை ஒப்புக்கொண்டார்.
2016 - 2019 ஆம் ஆண்டின் கடைசி செயல்முறை முயற்சியிலும் ஜே.வி.பி. அதற்கு ஒப்புக்கொண்டது, இதைத்தான் ஜனாதிபதி தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்து இருந்தார் என்று குறிப்பிட்ட சுமந்திரன், ஆகவே புதிதாக எதையும் தொடங்க வேண்டிய அவசியம்
இல்லை, விட்ட இடத்தில் இருந்து தொடரலாம் என்று குறிப்பிட்டார். முந்திய அனைத்து ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் விடயங்களைத் தொடர்ந்த. முன்னெடுத்து, செயல்முறையை முடிக்க வேண்டியது மட்டும்தான் இங்கு இருக்கின்ற பணி
என்று அவர் கூறினார்.
சில விடயங்களில் ஜனாதிபதி முரண்பட முயன்ற சமயங்களில் கையோடு தாம் எடுத்துச் சென்ற ஆதாரங்களை முன்வைத்து தன்னுடைய கருத்துக்கு ஜனாதிபதியை இணங்க வைத்தார் அவர் என்பதை பேச்சில் கலந்து கொண்ட ஓர் உறுப்பினர் திருப்தியோடு நினைவு கூர்ந்தார்.
சுமந்திரனின் கருத்துரை முடியும் கட்டத்தில், தான் கருத்துக் கூற விரும்புகிறார் என சிறிதரன் குறிப்பிட்டார். அவர் தமிழில் பேசினாராயினும், அது சுருக்கமான முறையில் இருந்தது. எனினும் அது ஜனாதிபதி உட்பட அங்கு இருந்து அனைவரதும் மனங்களைத் தொடுவதாக அமைந்தது என்றார் கூட்டத்தில் பங்கு பற்றிய மற்றோர் எம்.பி. தமிழ் மக்களுக்கு நேர்ந்த அவலங்கள், நெருக்கடிகள், பாதிப்புகள், இழப்புகள் போன்றவற்றை தமக்கே உரிய பாணியில் தமது சொல்லடுக்குகளினால் நெஞ்சைத் தொடும் விதத்தில் சிறிதரன் விவரித்தார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மூன்று அரிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கு கிடைத்தன. ஒன்று - ஜே.ஆரினுடைய காலத்தில் அவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிட்டியது. அதற்குப் பின்னர் ராஜபக்ஷக்களுக்குத் தீர்வு காண்பதற்காக மூன்றில் இரண்டு பங்கு
நாடாளுமன்ற பெரும்பான்மையை மக்கள் அளித்தனர். ஆயினும் அவை இரண்டும் தவறிப் போயின என்று சுட்டிக்காட்டிய சிறிதரன், இப்போது ஜனாதிபதியாகிய உங்கள் தலைமையில் அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. அதை இந்தத் தடவை தவறவிட்டோமேயானால் இனி எப்போதும் இந்த வாய்ப்புக் கிட்டவே கிட்டாது, வரலாற்றை நாங்கள் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் நிலைமை வரும் என்று சிறிதரன் சுருக்கமாகக் குறிப்பிட்டு தமது உரையை முடித்துக் கொண்டார்.
ரவிகரன் எம்.பியும் குகதாசன் எம்.பியும் தமிழர் பிரதேசத்தில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்ற விடயங்களைப் புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டினர். இரண்டு பௌத்தர்கள் இருக்கின்ற இடத்திலும் விகாரைகள் கட்டப்படுகின்றன, ஒரு பிரதேச செயலகப் பிரிவில் 38 விகாரைகள் அமைக்கப்படுகின்றன என்றெல்லாம் அவர்கள் குறிப்பிட்ட போது இடைமறித்த ஜனாதிபதி, இப்போதும் அவை நடக்கின்றனவா என்று திரும்பத் திரும்பக் கேட்டார். ஆம் என்று தெரிவித்தனர் ரவிகரன், குகதாசன், சுமந்திரன் ஆகியோர்.
உடனே அதை மிக 'சீரியஸாக' குறிப்பெடுத்துக் கொண்டார் ஜனாதிபதி. அந்த விடயத்தைத் தாம் கவனிப்பார் என்ற கருத்தை அவர் பிரதிபலித்தார். வடக்கு - கிழக்கு மீனவர்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்த ரவிகரன் எம்.பி. வடக்கு மீனவர்கள் கொழும்புக்கு நேரடி
யாக வந்து ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச விரும்புகிறார்கள். அதற்கு நேரம் ஒதுக்கித் தாருங்கள் என்று கோரினார்.
அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, தாம் விரைவில் யாழ்ப்பாணம் வருவார் என்றும் அந்தச் சமயத்தில் அங்கு நேரில் பேசுவோமே என்றும் கூறினார். மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழர்களின் தாயகப்பகுதி சூறையாடப்பட்டு, குடிசனப் பரம்பல் திட்டமிட்டு மாற்றியமைக்கப்படுவது குறித்து சத்தியலிங்கம் எம்.பி. விவரங்களோடு விளங்கப்படுத்தினார். மகாவலித் திட்டத்தைத் தமிழர் பிரதேசத்துக்குள் கொண்டு வருகின்றோம் என்று ஆரவாரம் பண்ணினர். அதன் மூலம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழர் பிரதேசத்துக்கு வரவில்லை.
ஆனால் தமிழர்களின் காணிகள் சிங்களவருக்குப் பிரித்து வழங்கப்படும் நிலையே அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதை விவரித்த அவர், அப்படி குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக தமிழர்களின் சொந்தக் காணிகளுக்குள் நீர்த்தேக்கங்களை உருவாக்கி, அவர்களை அந்தரிக்க விட்டு விட்டு, குடியேற்றிய சிங்களவர்களுக்கு வாழ்வாதாரம் தேடுவது முறையற்றது என்று அவர்
குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நீங்கள் (ஜனாதிபதி) ஆற்றிய உரையை நாங்கள் நன்றியோடு வரவேற்கிறோம் என்று குறிப்பிட்ட சத்தியலிங்கம், நீங்கள் உரையாற்றிய சமயமே அதனை மேசையில் தட்டி நாங்கள் வரவேற்றோம் என்பதை நீங்கள் அவதானித்திருக்க கூடும் என்பதை நினைவு படுத்தினார்.
தமது உரையை தமிழரசுக் கட்சியினர் வரவேற்றமையை மன நிறைவோடு ஏற்றுக் கொண்டார் ஜனாதிபதி. அதேசமயம், திருகோணமலை விடயத்தை ஒட்டி, நாடாளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரையை விதந்து குறிப்பிட்டு மெச்சினார் அவர். பொறுப்புணர்வோடு ஆற்றப்பட்ட உரை அது என்றார் ஜனாதிபதி.
அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில், நெருக்கடியான அரசியல் பிரச்சினைகள் கொண்ட வழக்குகளுடன் சம்பந்தப்பட்டோரே இன்னும் சிறைகளில் இருக்கின்றார்கள் என்று ஜனாதிபதி சொன்னார். அவர்களை விடுவிப்பதில் அரசியல் நெருக்கடிகள் இருக்கின்றன என அவர் குறிப்பிட்ட போது, என்ன அடிப்படையில் அவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள் என்ற விவரத்தை சுமந்திரன் விவரித்தார்.
அவர்களின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் பேரிலேயே அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் அல்லது விசாரணைகளை எதிர் நோக்கித் தடுப்புக் காவலில் உள்ளனர் என்று கூறிய சுமந்திரன், அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மூலமான நடவடிக்கையின் நியாயத்தன்மையை ஜே.வி.பினராகிய உங்களுக்கு நாங்கள் விளங்கப்படுத்தத் தேவையில்லை என்று குறிப்பிட்ட போது, தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டார் ஜனாதிபதி.
முன்னர் தமிழ் எம்.பிக்கள் அவரைத் தனியாகச் சந்தித்தபோது, இந்த விடயத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மன்னித்து விடுவிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அவர்களை மேன்முறையீட்டின் பேரிலோ அல்லது விசாரணை எதிர் கொண்டிருக்கின்ற நிலையில் பிணையிலோ விடுவிக்கலாம் என்று குறிப்பிட்ட விவகாரம் ஜனாதிபதியின் மனதில் நினைவுக்கு வந்திருக்கக்கூடும் என்று கருத முடியும். தொடர்ந்து இந்த சமரசப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளைத்தான் செய்வார் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஒட்டு மொத்தத்தில் நேற்றைய சந்திப்பு முழுமையாகத் திருப்தி தருவதாக அமைந்தது என்று கூறாவிட்டாலும், இது ஒரு நல்ல ஆரம்பம் என்று அதில் பங்கு பற்றிய முக்கிய பிரதிநிதி ஒருவர் பின்னர் தெரிவித்தார்.
-காலைமுரசு பத்திரிகையில் வெளியான விசேட பத்தி!


