பதவியேற்று ஒரு வருட காலப்பகுதிக்குள் கூட பொதுச் சுகாதார சேவைக்காக அவர்கள் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாததாலும், தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் பல மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத்கொலம்பகே தெரிவித்தார். நேற்று (19) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை வெளிப்படுத்தினார்.
இலவச சுகாதார சேவை மிகவும் ஆபத்தான நிலையில்
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய, நாட்டில் உள்ள இலவச சுகாதார சேவையே நாட்டின் முதுகெலும்பு என்று தமது சங்கம் தொடர்ந்து கூறி வருவதாகத் தெரிவித்தார். எனினும், தற்போது அந்த இலவச சுகாதார சேவை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
இலவச சுகாதார சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
இலவச சுகாதார சேவை உண்மையாகவே இலவச சுகாதார சேவையாக இருக்க வேண்டுமானால்: வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் இருக்க வேண்டும் என்றும், மறுபுறம் நோயாளிகள் வைத்தியசாலைக்கு வர வேண்டும் என்றும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு சுகாதார ஊழியர்கள் இருக்க வேண்டும் என்றும், அத்துடன் நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சை சேவைகளை வழங்குவதற்குத் தேவையான மருந்துகள், உபகரணங்கள் மற்றும் பரிசோதனைகள் போன்றவற்றை குறைவின்றி வழங்க வேண்டும் என்றும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) ஊடகப் பேச்சாளர் வைத்தியர் கலாநிதி சாமில் விஜேசிங்க தெரிவித்தார். ஆனால், தற்போது இந்தச் சேவைகள் அனைத்தும் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.


