மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படும் இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும், எனவே அப்பகுதியில் வாழும் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய மழைக்கால நிலைமை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெளியேறுவதற்கான (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொழுவ, உடுதும்பரை, மெததும்பரை மற்றும் மினிப்பே ஆகிய பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன மற்றும் மதுரட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த சிவப்பு எச்சரிக்கை பொருந்தும்.
கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதால், வீடுகள் அல்லது கட்டிடங்களில் வெடிப்புகள் காணப்பட்டால் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என வசந்த சேனாதீர மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தகைய இடங்கள் மீண்டும் மண்சரிவுக்கோ அல்லது மண்மேடுகள் சரிந்து விழுவதற்கோ வாய்ப்புள்ளதால், அந்த இடங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


