வனவிலங்கு பிராந்திய அலுவலக அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த யானை எரிக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னங்காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இந்த யானை சுமார் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்கது என்பதுடன், சுமார் 9 அடி உயரமானது. கடந்த 15ஆம் திகதி இரவு மிகிந்தலை, சீப்புக்குளம் பகுதியில் யானை நடமாடிக்கொண்டிருந்தபோது, எவரோ ஒரு நபர் தீப்பந்தங்களால் யானையை கொளுத்தியுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் கவலைக்கிடமான நிலையில் இருந்த இந்த யானைக்கு, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பண்டுலகம கால்நடை வைத்தியர் உதேஷிகா மதுவந்தி உள்ளிட்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி யானை நேற்று முன்தினம் (16ஆம் திகதி) உயிரிழந்தது. யானையின் மரணம் தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.
இந்த யானையின் மரணத்துடன், இவ்வருடத்தில் பதிவான யானை மரணங்களின் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தீவைப்பினால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இந்த காட்டு யானையின் மரண பரிசோதனை நேற்று (17ஆம் திகதி) மிகிந்தலை, சீப்புக்குளம், அம்பகஹவெவ பகுதியில் நடைபெற்றது.
மரண பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, இச்சம்பவத்தை காணொளி எடுத்த இளைஞன் மற்றும் மேலும் சிலரிடம் சாட்சியங்களை பதிவு செய்யும் பணிகளை மிகிந்தலை பொலிஸார் நேற்று ஆரம்பித்தனர்.


