விவகாரம் தான் கடந்த இரண்டு நாள்களாக தமிழர் தாயகத்தில் பிரதான அரசியல் பேசுபொருள்.
அந்தப் பகுதியில் ஏற்கனவே சட்ட அனுமதியற்ற வகையில் அமைக்கப்பட்டு இருந்த சிற்றுண்டிச் சாலையை அகற்றுவதற்கான நடவடிக்கையை திருகோணமலை மாவட்டக் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூல வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் கடந்த வாரம் எடுத்திருந்தனர்.
எனினும் அப்பகுதி பிக்கு ஒருவர் அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தமையை அடுத்து அங்கு குழப்பம் ஏற்பட்டது. அதனால் பொலிஸார் தலையிடும் நிலைமை நேர்ந்தது. அச்சமயத்தில் அந்த பிக்கு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அந்தச் சிற்றுண்டிச் சாலையை அகற்றுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் நேற்று முடிவடைய இருந்த சமயத்திலேயே நேற்று முன்தினம் இரவு புத்தர் சிலை பலவந்தமாக வைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவும் நேற்றும் திருகோணமலையில் இந்தக் களேபரங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் - இப்படி சிற்றுண்டிச்சாலை நேற்று அகற்றப்பட இருந்த வேளையில் - மேற்படி திருகோணமலை மாவட்டக் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூல வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளுக்கு அவர்களின் கொழும்புத் தலைமையகத்தில் இருந்து ஒரு வழிகாட்டல் உத்தரவு வந்ததாக அறிய வந்தது.
சிற்றுண்டிச்சாலை அகற்றப்படுவதற்கு எதிரான தடை உத்தரவு கொழும்பில் மேனிலை நீதிமன்றம் ஒன்றில் பெற்றுக்கொள்ளப்பட்டு கொழும்புத் தலைமை அலுவலகத்துக்கு வந்திருப்பதாகவும், அதனால் சிற்றுண்டிச் சாலையை அகற்றும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என்றும் இந்த பணிப்புரையில் தெரிவிக்கப்பட்டதாக அறிய வருகிறது.
சிற்றுண்டிச்சாலையை அகற்றுவதற்கு ஒரு வார கால அவகாசம் பெற்றுக் கொண்டு, அதற்கிடையில் மேனிலை நீதிமன்றம் ஒன்றில் அதை அகற்றுவதற்கு எதிரான தடை உத்தரவை ஒருபுறம் பெற்றபடி, மறுபுறம் புத்தர் சிலை ஒன்றை அருகில் அமைக்கும் நாடகத்தை சம்பந்தப்பட்ட பிக்குவும் குழுவினரும் முன்னெடுத்திருக்கின்றனர் என்பது இப்போது தெரிய வருகின்றது.
புத்தர் சிலை வல்வந்தமாக - சட்டவிரோதமாக - அமைக்கப்பட்டிருக்கின்ற விடயம் நீதி முறைமையின்படி கையாளப்படும் என்றும், நீதிமன்ற வழிகாட்டலில் செயற்படுவோம் என்றும், தமிழ் மக்களின் காதில் அரசு இப்போது பூ வைக்கின்றது. அரசுத் தரப்பு அமைச்சர்களும் எம்.பிக்களும் நீதிமன்றம் வழிகாட்டும் என்று இப்போது கையை நீதிமன்றம் பக்கம் காட்டி சமாளிப்புக் கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.
நல்லது. சட்டப்பட, நீதிப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றே வைத்துக் கொள்வோம். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குத்துக்கரணம் அடித்து நேற்று காலை வெளியிட்ட அறிவிப்பின்படி 'முதல் நாள் இரவு ஸ்தாபிக்கப்பட்ட புத்தர் சிலையை அதன் பாதுகாப்புக்காகவே பொலிஸார் எடுத்து வந்து தங்களுடன் வைத்திருந்தனர்' என்ற கதையை நம்புவோம். அப்படி என்றாலும், அந்தப் புத்தர் சிலையை எடுத்து வரச் சென்ற சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரியை பிக்கு ஒருவர் கன்னத்தில் அறைகிறார். அது பற்றிய வீடியோ காட்சியை இந்தப் பத்தி யில் இணைத்துள்ளேன்.
அந்த பிக்கு விடயத்திலாவது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அல்லது அரசுத் தரப்பினர் கூறும் நீதி, ஒழுங்கு, சட்டம்சரியாகப் பாயுமா அல்லது சாயுமா என்ற கேள்வி எழுகின்றது. சீருடை தரித்த பொலிஸாரைப் பகிரங்கமாக தாக்கிய பிக்குக்கு எதிராக அநுரகுமார அரசின் சட்டம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை அறிவதற்கு தமிழ் மக்கள் காத்திருக்கிறார்கள்.
திருகோணமலை மக்களை ஜே.விபியின் பேரினவாத பிடிக்குள் கொண்டு போய் சிக்க வைத்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா போன்றோராவது இது விடயத்திற்கு பதில் பெற்றுத் தந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் அவர்களால் எழுதப்பட்ட பத்தி...


