பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும்.
மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கடும் மூடுபனி;
ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தற்போது கடுமையான மூடுபனி நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசமான வானிலை காரணமாக வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, விபத்துகளைக் குறைப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் வாகனச் சாரதிகளிடம் விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
வீதியில் பயணிக்கும் அனைத்து சாரதிகளும் தமது வாகனங்களின் முன்விளக்குகளை (ஹெட்லைட்ஸ்) முறையாக ஒளிரச் செய்து, கவனமாகவும் மிகக் குறைந்த வேகத்திலும் பயணிக்க வேண்டும் என பொலிஸார் கடுமையாக அறிவுறுத்துகின்றனர்.
விபத்துகளைக் குறைப்பதற்கு சாரதிகளின் விழிப்புணர்வும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம் என பொலிஸார் மேலும் வலியுறுத்துகின்றனர். எனவே, வாகனச் சாரதிகள் இந்த அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயத்திற்கான முன்னெச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது.
நேற்று (17) இரவு 7:00 மணி முதல் இன்று இரவு 7:00 மணி வரையிலான அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கவனம் செலுத்துமாறு அறிவிக்கப்படும் இரண்டாம் நிலை எச்சரிக்கை வௌியிடப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
அதன்படி, மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்து, முதல் நிலை எச்சரிக்கை வௌியிடப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் பின்வருமாறு:
பதுளை மாவட்டம்: பண்டாரவெல, ஹப்புத்தளை
களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட
கண்டி மாவட்டம்: கங்கவட கோரளை, உடுநுவர, உடபலாத, தும்பனே, பாதஹேவாஹெட, உடுதும்பர, கங்க இஹல கோரளை, பஸ்பாகே கோரளை, யடிநுவர
கேகாலை மாவட்டம்: ரம்புக்கணை, மாவனெல்ல, தெராணியாகல
குருநாகல் மாவட்டம்: மாவதகம, மல்லவபிட்டி
மொனராகலை மாவட்டம்: பிபல
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, ஹங்குரன்கெத, வலப்பனை, நோர்வுட், கொத்மலை
இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, பலாங்கொடை, கலவான, கொலொன்ன, இரத்தினபுரி
பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்
ஒருகொடவத்தையில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


