அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர் சிலை கடும் எதிர்ப்பால் உடனடியாக அங்கிருந்து பொலிஸாரால் அகற்றப்பட்டது.
பௌத்த பிக்குகள் புத்தர் சிலையை அடாத்தாக வைத்தமைக்குத் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழர் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தமையைத் தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்கப் பொலிஸாரால் புத்தர் சிலை அகற்றப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு வரை பதற்றமான சூழ்நிலை நிலவியது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நேற்று நள்ளிரவு சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவில், தமது வேண்டுகோளின் பிரகாரம் குறித்த புத்தர் சிலையை அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்தமைக்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
'இரவு 8 மணியளவில் அடாவடியாகப் புத்தர் சிலை கொண்டு வந்து வைக்கப்பட்ட போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்து பேசப்பட்டது. இதையடுத்து 3 மணித்தியாலங்களுக்குள் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்தப் புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கின்றது' என்று இரா. சாணக்கியன் எம்.பி. அந்தப் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக இன்று திங்கட்கிழமை காலை திருகோணமலை மாநகரசபை உறுப்பினர்களை நகர சபையில் ஒன்றுகூடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருகோணமலை மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் ஏற்கனவே உள்ள அரசமரத்துடன் இணைந்த புத்தர் சிலை கட்டுமானத்தை அண்மித்து புதிய வணக்கஸ்தல கட்டுமான பணிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென ஆரம்பிக்கப்பட்டன.
நேற்று காலை இது தொடர்பில் அறிந்த கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட நிலையில் அங்கு பிக்குகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.
பின்னர் இந்த விடயம் தொடர்பாக திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் திணைக்கள அதிகாரிகள் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிஸார் பணித்தனர்.
ஆனால் அதனை பொருட்படுத்தாது நேற்று இரவு புத்தர் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் சிலை வைக்கும் செயற்பாட்டை தடுத்த போது பிக்குகளுக்கும்பொலிசாருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது
அதில் பிக்கு ஒருவர் பொலிஸாரின் கன்னத்தில் அறைந்ததை தொடர்ந்து கைகலப்பானது, பொலிசார் புத்தர் சிலையை அகற்றியதுடன் பதட்ட நிலமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இதேவேளை, இந்தக் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்ட அனுமதி அற்ற சிற்றூண்டிச்சாலையைக் கடந்த 4 ஆம் திகதி கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் அகற்றச் சென்ற போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி பெளத்த பிக்குவால் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. அந்த 7 நாள் காலஅவகாசம் நேற்று முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


