சிறைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டியுள்ள நிலையில், தொற்றுநோய் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள கைதிகள், சிறைகளில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி தொடர்ந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை பொது சுகாதார பரிசோதகர்களாக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான கைதிகள் மற்றும் கிட்டத்தட்ட 6,000 ஊழியர்களைக் கொண்ட 30ற்கும் மேற்பட்ட சிறைச்சாலைகளுக்கு நியமிக்கப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களின் எண்ணிக்கையை எட்டாக உயர்த்த அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

சிறைகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 600ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 558 கைதிகள் மற்றும் 43 அதிகாரிகள் உள்ளடங்குவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளின் இந்த விடயம் தொடர்பில் கையாள்வதற்காக இதுவரை இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் மாத்திரமே, பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலேயே பணியாற்றுகின்றனர்.

நீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களுக்கு அமைய, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் 36 நிலையங்களில் சுமார் 30,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் நான்கு மூடிய சிறைச்சாலைகள், பத்து பணிகளுடன் கூடிய நிலையங்கள், இரண்டு திறந்த சிறைச்சாலைகள் மற்றும் சிறுவர் குற்றவாளிகளுக்காக நடத்தப்படும் இரண்டு நிலையங்கள் காணப்படுகின்றன.

இதற்கு மேலதிகமாக 18 விளக்கமறியல் சிறைச்சாலைகளும் நாடு முழுவதும் 23 பொலிஸ் தடுப்புக்காவல் நிலையங்களும் காணப்படுகின்றன.

இன்றைய தினம், ஓய்வுபெற்ற ஆறு இராணுவ அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்களாக நியமனம் பெறுவதாக, பொது சுகாதார பரிசோதகர்களாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் இந்தத் தொழிலுக்கு பொருத்தமான கல்வித் தகுதிகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்களாக நியமிக்கப்படுபவர்கள் சிறைச்சாலைகளில் சேவைக்கு அமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய ஆறு புதிய பொது சுகாதார பரிசோதகர்கள் நீர்கொழும்பு, போகம்பரை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை சிறைச்சாலைகளில் சேவையில் அமர்த்தப்படவுள்ளனர்.

கைதி உயிரிழந்தார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, இராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இறந்த 82 வயதுடைய சிறைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மஹர சிறைச்சாலையின் கைதியாவார்.

திடீர் சுகயீனம் காரணமாக, இராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதன் பின்னர் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இலங்கையில் கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில், கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு சிறைச்சாலைகளுக்கு தொற்று பரவுவதற்கான ஆபத்து குறித்து ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.

வயது முதிர்ந்தவர்கள் மற்றும் கடுமையான நோய்வாய்ப்பட்ட கைதிகளை விடுவிப்பதற்கான சட்ட விதிகளையும் இந்த குழு அரசாங்க அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியது.

மீளாய்வு செயன்முறையை முறையாக அமுல்படுத்தினால் சிறைச்சாலைகளில் காணப்படும், நெரிசலை கணிசமாக குறைக்க முடியும் என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கடந்த காலங்களில் அரசுக்கு வலியுறுத்தியது.

அண்மையில், பிணையில் விடுவிக்கப்படக்கூடிய பல கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும், சிறைச்சாலைகளின் இட நெருக்கடியை குறைக்க அந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லையென, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு சுட்டிக்காட்டியிருந்தது.

580,000 கைதிகள்

கொரோனா தொற்று இரண்டாம் அலையால் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் தம்மை விடுவிக்கக் கூறி இலங்கையில் பல சிறைச்சாலைகளின் கூரைகளில் ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்ற சூழ்நிலையில், கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில், குறைந்தது 80 நாடுகளில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கைதிகளை விடுவிக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கைகள் மற்றும் ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்யப்பட்டுள்ள சர்வதேச ஊடக ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு, அமைச்சு மட்ட உத்தரவுகள், சட்டம், அவசரகால விதிமுறைகள் மற்றும் நீதித்துறை உத்தரவுகள் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளின் கீழ் 580,000 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 15 முதல் 2020 மே 22 வரையான இந்த ஆய்விற்கமைய, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது, குறித்த இரு நாடுகளிலும் தலா 100,000 கைதிகளை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலக அறிக்கைகளுக்கு அமைய, இந்த காலகட்டத்தில் 3,000 கைதிகள் இலங்கையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், தொற்றிலிருந்து காப்பாற்றும் நோக்கில் அவர்கள் எவரும் விடுவிக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி