கரைவெட்டி பறவைகள் சரணாலயம் கண்டுகொள்ளப்படாத நிலையில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இருந்து, 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் கரைவெட்டி. இங்குள்ள ஏரியை நம்பி 50 ஆயிரம் ஏக்கரில் பாசன நிலங்கள் உள்ளன.

இந்த ஏரி, பாசனத்துக்குப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பறவைகளுக்கும் புகலிடமாக விளங்குவதால், ஏரியை சுற்றியுள்ள வனப்பரப்பை இணைத்து கிட்டத்தட்ட, 20 கிலோமீட்டர் பரப்பளவில், அதாவது 442.37 ஹெக்டேர் இடத்தை, பறவைகள் சரணாலயமாக கடந்த, 1999ல் அறிவித்தது தமிழக அரசு.

இங்கு, 82 வகையான நீர்ப் பறவைகள் உட்பட, 203 பறவை இனங்கள் அவ்வப்போது வந்து செல்கின்றன. இதுதவிர, 45 வகையான உள்ளூர் பறவைகளுக்கும், கரைவெட்டி ஏரி தான் புகலிடமாகத் திகழ்கிறது. பருவ மழை குறைவதாலும், தட்பவெட்பநிலை மாற்றத்தாலும் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் கணிசமாக குறைந்து வருவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதோடு ஏரியை முறையாக பராமரிக்காததும், பறவைகள் வரத்து குறைவதற்கான காரணம் என்ற, கருத்தும் உள்ளது.

கரைவெட்டி பறவைகள் சரணாலயம்

இந்த பறவைகள் சரணாலயத்தை, சுற்றுலாத் தளமாக அறிவித்தும், உரிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்கிறார், கரைவெட்டி ஏரி பறவைகள் சரணாலய பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர், தங்க சண்முகசுந்தரம்.

மேலும் அவர் கூறுகையில், " கரைவெட்டி தமிழகத்தில் ஒரு பெரிய பறவைகள் சரணாலயமாக கருதப்படுகிறது. இந்த ஏரியின் கரைகளை பலப்படுத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல ஏற்றவாறு, அடிப்படை வசதிகளான, குடிநீர், கழிவறை, தங்கும் வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும்.

மேலும், இந்த ஏரியின் பரப்பளவு மிகப் பெரியது என்பதால், ஆங்காங்கே தங்கும் பறவைகளை காண, தொலைநோக்கு கருவி அமைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட பகுதி வரை, மக்கள் படகு சவாரி செய்ய அனுமதித்தால், சரணாலயத்தை தேடி வரும், பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கான இணைய தளத்தில், பறவைகள் வரும் சீசன், அரிய வகை பறவைகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றால்தான், பொதுமக்களால் இந்த இடத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்" என்றார் அவர்.

கரைவெட்டி பறவைகள் சரணாலய வன குழு தலைவரும், சமூக ஆர்வலருமான மணிவேல் கூறுகையில், " பறவைகள் விரும்பி சாப்பிடும் பழமரங்கள் இங்கு குறைவாக இருப்பதும், வரத்து குறைவதற்கு முக்கிய காரணம். இந்த ஏரியை சுற்றி, அதிக மரங்கள் நட்டு, பறவைகள் தங்க உரிய ஏற்பாடு செய்யவேண்டும். மொத்தமுள்ள 1,100 ஏக்கர் பரப்பளவில், விவசாயத்திற்கு சம்பந்தம் இல்லாத பகுதிகளில், திட்டுகள் அமைத்து, அதிக மரங்கள் நட்டால், பறவைகள் இனவிருத்தி செய்வதற்கான சூழல் அமையும். இந்த ஏரியை பல்லுயிர் பெருக்கத்திற்கான இருப்பிடமாக மாற்ற வேண்டும்," என்றார்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவனிடம் கேட்டபோது, " கரைவெட்டி ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய விரைவில் ஏற்பாடு செய்யப்படும். சரணாலயத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி