‘‘தொலைபேசி சின்னம் காலாவதியாகி விட்டது’’ என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக் கிழமை மாலை (25) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் கூறியதாவது,
‘‘சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைகளைப் பிரித்தது நிறைய பிரச்சினை களைக் கொண்டது. அவற்றில் வீரமுனை வட்டாரம் நிறைய பிரச்சினைகளைக் கொண்டது. அவற்றுக்கு தீர்வு காணும் மாற்று வழியாக நடைபெறும் சம்மாந் துறை பிரதேச சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியில் எங்களின் வேட்பாளரை போட்டியிடச் செய்து அவர்களின் உடன்பாட்டுடன் அந்த வட்டாரத்தை வெல்ல வைக்க முடியுமா? என்ற முயற்சியையும் இம்முறை செய்து பார்த்தோம்.
“இதேபோன்ற பிரச்சினை நாவிதன்வெளியிலும் இருந்தது. இந்த விடயங்களில் தமிழரசுக் கட்சியின் தலைமைகள் இணக்கம் தெரிவித்தன. துரதிர்ஷ்டவசமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அதற்கு இணங்கவில்லை.
“சம்மாந்துறை பிரதேச சபையின் வீரமுனை வட்டாரத்தில் நிர்மாணப்பணி ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தில் வழக் கொன்று இருந்தபோதிலும் மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பரை அந்த வழக்கில் ஆஜராக வேண்டாம் என்றும் சொல்லியிருந்தேன். ஏனெனில் இந்த விஷயத்தை சாதித்து கொள்வதற்காக. ஆனால் அவை ஒன்றும் சாத்தியமாக வில்லை” என்றார்.