யாழ். மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இரணைமடு குளத்து நீரை கொண்டு வருவதில் அரசியல் பிரச்சினை இருக்கின்றதென்றால், அவற்றுக்கு தீர்வுகண்டு, இரணைமடு குடிநீர் திட்டத்தை யாழ்.மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் நிமல் லான்சா உறுதியளித்தார்.

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான  கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கூட்டத்தில், யாழ். மாவட்டம் மற்றும் நெடுந்தீவு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக, நெடுந்தீவு பிரதேச செயலர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர்,

நெடுந்தீவில் மிக சுவையான குடிநீர் இருப்பதாகவும், மேலதிக குடிநீரைக் வழங்குவதற்கு, இரணைமடு குளத்தின் குடிநீர் திட்டத்தை அமுல்படுத்த அரசியல் பிரச்சினை உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறாயின் ஏன் நெடுந்தீவில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகின்றது என அமைச்சர் வினாவினார். இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்,

1000 மில்லியன் ஒதுக்கப்பட்ட பாலியாறு திட்டங்கள் இருக்கின்ற போது, இரணைமடு குளத்து நீரைக்கொண்டு வருவதற்கு அரசியல் பிரச்சினை இருப்பதாக, சொல்லிக்கொள்ளும் அரச அதிகாரிகள், ஆறுமுகம் திட்டம், மண்டைக்கல்லாறு விரயமாக செல்லும் தண்ணீரை எவ்வாறு கொண்டு வருவதென சிந்திக்க வேண்டும்.

அதை விடுத்து, இரணைமடு குளத்து நீரைக் கொண்டு வருவதற்கு அரசியல் இருப்பதாக சொல்லுபவர்கள், யாருடைய அரசியல் இருக்கின்றதென்பதனை சொல்ல வேண்டும் என்றார்.

இதன்போது, தொடர்ந்து பேசிய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பின் தலைவர்,

இரணைமடு குளத்து நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கு அரசியல் பிரச்சினை இருப்பது உண்மை என்றும், அதனால் தான், இரணைமடு குளத்து நீரை கொண்டு வர முடியாதுள்ளதென்றும் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர்,

அரசியல் பிரச்சினை இருப்பதாக சொன்னால், அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து, நெடுந்தீவு மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,

நீங்கள் இன்று தான் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளீர்கள், விளக்கமற்று கதைக்க வேண்டாம் என்று அமைச்சரைப் பார்த்து கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி