"அதிகாரத்தில் இருப்பவர்கள் உட்பட அனைத்துக் குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று எங்கள் அரசாங்கம் உறுதியளித்தது. அந்த
வாக்குறுதியை நாங்கள் காப்பாற்றிவிட்டோம்" என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட செய்தி வெளியான சில நிமிடங்களில் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் போன்ற அனைத்து முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும் முன்னேறி வருகின்றன. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகோடா கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதே நேரத்தில் ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணை நிறைவடைந்துவிட்டது" என்றும் அவர் மேலும் கூறினார்.
ரணிலைக் கைது செய்யும் திட்டம் பற்றி யூடியூபர்களுக்குத் தெரியுமா?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கைது செய்யவிருந்த திட்டம் குறித்து சில யூடியூபர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பினார்.
"முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என ஒரு குறிப்பிட்ட யூடியூபர் ஒருவர் காணொளியை வெளியிட்டார்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க கூறினார்.
"யாரேனும் இரகசியமாக தகவல் கொடுத்தாலன்றி, அவர்களால் எப்படி இத்தகைய உள்ளடக்கத்தை உருவாக்க முடியும்? முன்னாள் ஜனாதிபதியைக் கைது செய்யவிருந்த திட்டம் பற்றிய முக்கியமான தகவல்கள் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு கசிந்துவிட்டதா?" என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, "முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிதியில் தனிப்பட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்காகவே கைது செய்யப்பட்டார்" என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"திரு. விக்கிரமசிங்கவின் இலண்டன் சுற்றுப்பயணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நான் சமர்ப்பித்துள்ளேன். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன நேர்ந்துள்ளது என்றால், அவர்கள் சட்டத்தின் ஆட்சி நிலவுவதை வரவேற்கிறார்கள். ஆனால் அது அவர்களுக்கும் அவர்களின் சகாக்களுக்கும் பிரயோகிக்கப்படும் போது கவலைப்படுகிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.