அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22)
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு இலண்டன் ஊடாக நாடு திரும்பிய போது அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி இலண்டன் சென்றது, தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகும்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சண்ட்ரோ பெரேரா ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி இன்று (22) கொழும்பு, ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்த உள்ளார்.
எவ்வாறாயினும், இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் செல்லும் முன்னாள் ஜனாதிபதியை, விசாரணையின் போது கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக, அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.